டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரன் குவிப்பு.! ஆட்ட நேர முடிவில் 119/1
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். மறுமுனையில் மற்றொரு துவக்க வீரரான ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி அரை சதம் எடுத்தார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 76 ரன்களிலும், சுப்மன் கில் 14 ரன்களிலும், ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனர்.