வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 25 ஜனவரி 2024 (18:03 IST)

செய்தியாளரின் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும்..! எல்.முருகன் வலியுறுத்தல்.!!

l murugan
மர்மநபர்களால் தாக்கப்பட்ட நியூஸ் 7 தமிழ் செய்தியாளரின் சிகிச்சைக்கான முழு தொகையையும் தமிழ்நாடு அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசபிரபுவுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம்  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேட்டறிந்தார்.
 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  செய்தியாளரை தாக்கியவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தாக்கப்பட்ட செய்தியாளர் காவல்துறையிடம் உதவி கேட்டும், உதவி மறுக்கப்பட்டு இருக்கிறது என்றும் உரிய நேரத்தில் காவல்துறை உதவி செய்திருந்தால் செய்தியாளர் மீதான தாக்குதலை தடுத்திருக்கலாம் என்றும்  எல்.முருகன் தெரிவித்தார்
 
தமிழகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்படும் நேரத்தில் ஊடகத்தில் உள்ள நபருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது எனவும் இன்றைக்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு கேள்விக்குறியாக இருக்கிறது என்பது இந்த சம்பவம் காட்டியுள்ளது எனவும் அவர் கூறினார்.

 
நியாயமான செய்தியை தைரியத்தோடு  கொடுக்கின்ற செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எல்.முருகன்  குற்றம் சாட்டினார். மேலும் செய்தியாளரின் சிகிச்சைக்கான முழு தொகையை தமிழ்நாடு அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.