கடைசி நேரத்தில் ரன் அவுட்.. ரூல்ஸ் படிதான் நடந்தோம்! – இந்திய கேப்டன் விளக்கம்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விதிகளின்படியே விக்கெட்டை வீழ்த்தியதாக இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான பெண்கள் அணியின் சுற்றுப்பயண போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் முதலில் நடந்த டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
தொடர்ந்து நடந்த 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே இந்தியா 2-0 என்ற கணக்கில் ஆட்டத்தை கைப்பற்றியது. நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் எடுத்திருந்தது.
170ஐ இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை இந்திய அணி சரமாரியாக வீழ்த்தியது. 39 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து இருந்தது. அப்போது பந்து வீசிய இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா எதிர் முனையில் நின்ற இங்கிலாந்து வீராங்கனை சார்லீ டீன் க்ரீஸை தாண்டி பல அடிகள் முன்னாள் சென்றதால் மன்கேடிங் ரன் அவுட் கொடுத்தார்.
இதனால் இங்கிலாந்து கடைசி விக்கெட்டையும் இழந்து இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. சமீபத்தில் மன்கேடிங் ரன் அவுட் செல்லும் என ஐசிசி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது. அதை குறிப்பிட்டு விளக்கம் அளித்த இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தாங்கள் விதிகளுக்கு புறம்பாக எதையும் செய்யவில்லை என கூறியுள்ளார்.