IND vs AUS: U19 Worldcup!ஆஸ்திரேலியாவை பழிவாங்க நினைக்கல.. ஆனா ஜெயிப்போம்! இந்திய அணி கேப்டன் நம்பிக்கை!
இன்று இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான யு19 உலகக்கோப்பை இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே முன்னதாக நடந்த ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் இறுதி போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு முதலாக தொடர்ந்து இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இந்த இறுதிக்கட்ட மோதல் தற்போது ஐசிசி யு19 ஒருநாள் உலகக்கோப்பையிலும் தொடர்கிறது.
19 வயதற்கு உட்பட்டவர்களுக்கான ஐசிசி யு19 ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோதிக் கொள்கின்றன.
இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் இளம் கேப்டன் உதய் சாஹரன் ”நாங்கள் பழிவாங்குவதை குறித்து சிந்திக்கவில்லை. எங்கள் முழு கவனமும் இறுதிப்போட்டி குறித்துதான் இருக்கிறது. கடந்த காலத்தை சிந்திக்கவோ, திரும்பி பார்க்கவோ விரும்பவில்லை. கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை சுமந்தபடி உலகக்கோப்பை இறுதிப்போட்டியை அணுகுகிறோம்” என தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஹியூக் வெப்ஜென் கூறும்போது “இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம். இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. கண்டிப்பாக எங்களுக்கு பெரும் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
இந்த இறுதி போட்டி இன்று மதியம் 1.30 மணி அளவில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள பெனோனியில் தொடங்குகிறது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் டிடி தூர்தர்ஷன் சேனல்களில் காணலாம். ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இந்த போட்டிகளை கண்டு களிக்கலாம்.
Edit by Prasanth.K