ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (11:29 IST)

நேற்றைய போட்டியில் வங்கதேச பவுலர் ஹசன் முகமத் படைத்த சாதனை!

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் ஆறு விக்கெட்களை இழந்து 339 ரன்கள் சேர்த்தது.

முன்வரிசை பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொதப்ப அஸ்வினும் ஜடேஜாவும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அஸ்வின் சதமடிக்க, ஜடேஜா 85 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

இந்த இன்னிங்ஸில் வங்கதேச அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் முகமது 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் வங்கதேச பவுலர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவர் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் மற்றும் பும்ரா ஆகியோரின் விக்கெட்களைக் கைப்பற்றினார்.