1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 24 ஜூன் 2024 (08:43 IST)

கடுமையாக உழைப்பவருக்கு அதிர்ஷ்டம் துணையிருக்கும்… காயத்தில் இருந்து மீண்டது குறித்து பாண்ட்யா!

சமீபகாலமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு முக்கியக் காரணம் ரோஹித் ஷர்மா இருக்கும்போதே அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதுதான். அதனால் ரசிகர்கள் மத்தியில் கடுமையான வெறுப்பை அவர் சம்பாதித்தார்.

அது மட்டுமில்லாமல் அவருக்கும் அவர் மனைவி நடாஷாவுக்கும் இடையே விவாகரத்து நடக்கப் போவதாக தகவல்களும் பரவின. இப்படி பல இக்கட்டான சூழலில்தான் அவர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் டி 20 உலகக் கோப்பையில் விளையாட வந்தார். ஆனால் எல்லாவற்றையும் மறக்கச் செய்யும் விதமாக அவரின் ஆட்டம் உள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

சமீபத்தில் தான் காயத்தில் இருந்து மீண்டுவந்தது குறித்து பேசியுள்ள அவர் “50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இருந்து காயத்தால் வெளியேறிய போது  மீண்டும் விரைவாக இந்திய அணிக்குள் வரவேண்டும் என நினைத்தேன். கடவுள் வேறு திட்டத்தை வைத்திருந்தார் என நினைக்கிறேன். பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் பேசிய போது ‘கடுமையாக உழைப்பவருக்கு எப்போதும் அதிர்ஷ்டம் துணையிருக்கும்’ என்றார். அந்த வார்த்தைகள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கடுமையாக உழைக்கத் தொடங்கினேன்” எனக் கூறியுள்ளார்.