1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 29 அக்டோபர் 2024 (07:45 IST)

போதும் சாமி எனக் கும்பிட்டுவிட்டு கிளம்பும் கேரி கிரிஸ்டன்.. என்னதான் நடக்குது பாகிஸ்தான் கிரிக்கெட்டில்?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்து வருகிறது. அந்த அணியில் பாபர் அசாம், ஷாகீன் அப்ரிடி போன்ற திறமையான வீரர்கள் இருந்தும் அந்த அணியால் சமீபத்தில் எந்தவொரு முக்கியமான தொடரையோ, அல்லது கோப்பையையோ கைப்பற்ற முடியவில்லை.

இதற்கெல்லாம் காரணம் அணிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்தான் என்று சொல்லப்படுகிறது. அந்த அணிக்கு தற்காலிகமாக பயிற்சியாளர் பொறுப்பேற்றுக்கொண்ட கேரி கிரிஸ்டன் கூட இதைப் பற்றி புலம்பியிருந்தார். இந்நிலையில் தொடர்ந்து சொதப்பி வந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டார். தற்போது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு முகமது ரிஸ்வான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி வாராவாரம் ஏதாவது மாற்றம் நடந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கான பயிற்சியாளராக இருந்த கேரி கிரிஸ்டன் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் கடந்த ஏப்ரல் மாதம்தான் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலியாவின் ஜேஸன் கில்லஸ்பி பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.