பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவருக்கு பாரத் மாதா கி ஜெய் சொல்ல சொல்லி மத்திய பிரதேச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபா நகரை சேர்ந்தவர் பைசல். இவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி இரு வெவ்வேறு குழுக்களிடையே பகையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டார் என குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஜாமீன் கோரி பைசல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஜாமீன் மனுவை பரிசீலித்த நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் தனிநபர் ஜாமீன் மற்றும் அதே அளவு உத்தரவாத தொகையை செலுத்தினால் பைசல் ஜாமீனில் விடுவிக்கப்படலாம் என கூறியுள்ளது. மேலும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் நாட்களில் பைசல் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை மாதத்தில் முதல் மற்றும் கடைசி செவ்வாயில் மிஸ்ராட் காவல் நிலையத்தில் சென்று கையெழுத்து போட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு மிஸ்ராட் காவல் நிலைய செல்லும்போது அங்குள்ள இந்திய தேசிய கொடிக்கு 21 முறை வணக்கம் செலுத்தி, இரண்டு முறை பாரத் மாதா கி ஜெய் என்று சொல்ல வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் பிறந்து வளர்ந்த பைசலுக்கு தனது நாடு குறித்த பெருமை உணர்வு உண்டாக வேண்டும் என்பதற்காக இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Edit by Prasanth.K