சொந்த மண்ணில் 3 ஆண்டுகளுக்கு பின் தொடரை வென்ற பாகிஸ்தான்: குவியும் வாழ்த்துக்கள்..!
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே 3 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், 2 போட்டிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தான், 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. இதனை அடுத்து, அந்த அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் துவண்டு இருந்த பாகிஸ்தான் அணி, அதன் பின்னர் மீண்டு எழுந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 267 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 112 ரன்கள் எடுத்த நிலையில், பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 344 ரன்கள் குவித்ததால், வெற்றிக்கு 36 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. பாகிஸ்தான் அணி மிக எளிதாக 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது.
நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக ஷகீல் தேர்வு செய்யப்பட்டார் என்பதுடன், தொடர் நாயகனாக சஜித் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ள பாகிஸ்தான் அணிக்கு, அரசியல் தலைவர்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Edited by Mahendran