எல்லாரும் பத்திரமா இருங்க..! – சென்னைக்காக வருந்தும் டேவிட் வார்னர்!
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயலால் சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சென்னை குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறியுள்ளது. தீவிர புயலாக உள்ள நிவர் கரையை கடக்கும் முன்னர் அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கி விடியும் வரை புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை கடற்கரையில் மழைமேகங்கள் சூழ்ந்து வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் “சென்னை மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் அணியில் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய டேவிட் வார்னர் இந்தியா மீது பெரும் விருப்பம் கொண்டவர் என்பதும், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பாடல்களுக்கு அவ்வபொது டிக்டாக்கில் ஆடி பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.