வெள்ளத்தில் மூழ்குமா சென்னை?
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பவுள்ளதால் அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நிவர் புயல் மாமல்லபுரம் - புதுச்சேரி அருகே அதிதீவிவ புயலாக கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளதால் சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
இந்நிலையில் தற்போது மழையின் காரணமாக 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம். இதனிடையே எதிர்ப்பார்த்தப்படியே, இன்று நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படவுள்ள நிலையில் அடையாறு ஆற்றங்கரையோர மக்கள் வெள்ள நிவாரண முகாம்களுக்கு செல்ல சென்னை மாநகராட்சி உத்தரவு. மேலும், சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, பர்மா காலனி, ஜாஃபர்கான்பேட்டை, சூளைப்பள்ளம், கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
கடந்த 2015 சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருந்த நிலையில் 30,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. ஆனால் இப்போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதல்கட்டமாக 1,000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட உள்ளதால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.