மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!
தற்போது நடைபெற்று வரும் 18 ஆவது ஐபிஎல் சீசனில் முதல் இரண்டு போட்டிகளையும் தோற்று புள்ளிப் பட்டியலில் பின் வரிசையில் இருந்த மும்பை இந்தியன்ஸ், நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை வென்று முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதிரடியாக ஆடும் தன்மை கொண்ட கொல்கத்தா அணியை இவ்வளவு குறைவான ரன்களுக்குள் கட்டுப்படுத்த அந்த அணியின் அறிமுகப் பவுலர் அஸ்வனி குமாரின் அபாரமான பந்துவீச்சேக் காரணமாக அமைந்தது.
அஸ்வனி குமார் மொத்தம் 3 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்தார். அவருக்கு இன்னுமொரு ஓவர் மீதமிருந்தும் அவருக்கு தொடர்ந்து ஓவர் கொடுக்காமல் பவுலரை மாற்றினார் ஹர்திக் பாண்ட்யா. இதனால் அவர் முதல் போட்டியிலேயே ஐந்தாவது விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பை இழந்தார். இது சம்மந்தமாக போட்டி முடிந்த பின்னர் ரசிகர்கள் ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அஸ்வனி குமார் தற்போது மும்பை இந்தியன்ஸின் அரிய கண்டுபிடிப்புகளில் ஒருவராக இணைந்துள்ளார். பஞ்சாப் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த இடதுகை பந்துவீச்சாளரான அஸ்வனி குமார், தனது துல்லியமான பந்துவீச்சால் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்துவதுதான் அஸ்வனியின் தனிச்சிறப்பு. தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி கவனம் பெற்ற அஸ்வனி கடந்த ஆண்டுதான் மும்பை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். பும்ரா அணியில் இணைந்ததும் அவருடன் இணைந்து இறுதி ஓவர்களை வீசுவதில் அஸ்வனி மிக முக்கியமானப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.