1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Danish kaneria comment on Pakistan cricket board statement

“இழப்பு நமக்குதான்…” ரமீஸ் ராஜாவின் கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் பவுலர் கருத்து!

ஆசியக் கோப்பை
இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்தது. இதில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அடுத்த ஆண்டு 50 ஓவர் போட்டியாக நடக்கும் எனவும், அது பாகிஸ்தானில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டும் மோதுகின்றன. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடந்தால் இந்திய அணி அங்கு செல்லாது என்றும், மாறாக ஆசியக் கோப்பை வேறு ஒரு பொதுவான நாட்டுக்கு மாற்றப்படலாம் எனவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா “இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து ஆசியக் கோப்பையில் விளையாடாவிட்டால், பாகிஸ்தானும், அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வந்து உலகக்கோப்பையில் விளையாடாது” எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரிய கூறியுள்ள கருத்தில் “பாகிஸ்தான் அணி தரப்பில் கூறுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பாகிஸ்தான் கலந்துகொள்ளவில்லை என்றால் பிசிசிஐ அதை பெரிதாக கண்டுகொள்ளாது. இழப்பு பாகிஸ்தான் அணிக்குதான். அதனால் இப்படி பேசுவது பொறுப்பற்றது. இந்தியா மட்டுமில்லை, வேறு சில நாடுகளும் பாகிஸ்தானுக்கு விளையாட வர யோசிக்கின்றன. அதனால் எப்படி பேசி அனைத்து அணிகளையும் பங்கேற்க வைப்பது என்று யோசிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
சம்பளம் முழுவதையும் பாகிஸ்தான் மக்களுக்கே கொடுக்கும் பென் ஸ்டோக்ஸ்!