1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (08:14 IST)

சின்னசாமி ஸ்டேடியத்தை சிதறவிட்ட சிஎஸ்கே! அதிர்ச்சியில் ஆர்சிபி! – பெரிய சம்பவத்தின் சுருக்கம்!

CSK v RCB
’நீ எப்டி வேணாலும் போடு., நான் அடிப்பேன்’ என இறங்கிய ப்ளெசிஸ் சிக்ஸும், பவுண்டரியுமாக விளாச, லாமோர் விக்கெட்டுக்கு பிறகு வந்த மேக்ஸ்வெல் பார்ட்னர்ஷிப்பில் இறங்கினார்.

பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் நேற்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக் கொண்டன. நேற்றுக்கு போட்டிக்கு முன்னர் வரை தலா 4 போட்டிகளில் விளையாடியிருந்த சிஎஸ்கே அணியும், ஆர்சிபி அணியும் தலா 2 போட்டிகள் வெற்றி 2 போட்டிகள் தோல்வி என்ற நிலையில் தொடர்ந்து வந்ததால் நேற்று “விசில் போடு டீமா?” “ஈ சாலா கப் நமதேவா?” என்ற எதிர்பார்ப்பு எகிறிதான் போனது.

மேலும் கூல் கேப்டன் தோனியும், அவரது ஆத்ம சீடன் ஹாட் கேப்டன் விராட் கோலியும் எதிர்கொள்ளும் மேட்ச் என்னும்போது பரபரப்பிற்கும் பஞ்சம் உண்டா. ஆர்சிபி டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்தது சிஎஸ்கேவுக்கு பின்னடைவாகதான் முதலில் தெரிந்தது. ஏனென்றால் சிஎஸ்கேவுக்கு சேஸிங்தான் ராசி. வின்னிங் ஷாட் அடிக்க தோனி வருவார்.

Conway]


முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கேவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் 2வது ஓவரிலேயே அவுட் ஆனார். ஆனால் அப்புறம்தான் சம்பவமே நடந்தது. டெவான் கான்வே உள்ளே இறங்கி ஆர்சிபியின் பந்துகளை சிதறடிக்க தொடங்கினார். 6 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் விளாச ஸ்டேடியம் முழுவதும் விசில் சத்தம்தான். அடுத்தடுத்து களமிறங்கிய ரஹானே (37), ஷிவம் துபே (52) என ரன்களை குவித்தனர். மொத்தமாக 17 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் விளாசி தள்ளினர். கடைசி 2 பந்துகளுக்கு தோனி களமிறங்கியதும் எல்லாரும் செல்போன் டார்ச்சை ஆன் செய்து கொண்டு வைப் மோடுக்கு சென்றுவிட்டனர். ஆனால் தோனி அடிக்க முயன்ற சிக்ஸ் சிங்கிள்ஸில் முடிந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.

ஆனால் 20 ஓவர் முடிவில் 226 ரன்களை குவித்து 227 என்ற இமாலய இலக்கை ஆர்சிபிக்கு வைத்தது சிஎஸ்கே. இரண்டாவதாக களமிறங்கிய ஆர்சிபியின் ஆட்டம் ஆரம்பம் முதலே உக்கிரமாகதான் இருந்தது. கோலி ஆசைக்கு ஒரு பவுண்டரி அடித்து 6 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினாலும், டூ ப்ளெசிஸ் ஆட்டம் அபாரமாக அமைந்தது. ’நீ எப்டி வேணாலும் போடு., நான் அடிப்பேன்’ என இறங்கிய ப்ளெசிஸ் சிக்ஸும், பவுண்டரியுமாக விளாச, லாமோர் விக்கெட்டுக்கு பிறகு வந்த மேக்ஸ்வெல் பார்ட்னர்ஷிப்பில் இறங்கினார்.

Faf


இருவரது பார்ட்னர்ஷிப்பும் மாஸான ஆட்டத்தை கொடுத்தது. இதற்கிடையே டூ ப்ளெசிஸின் அவுட் கிடைத்தும் பந்தை சரியாக பிடிக்காமல் சிஎஸ்கே வீரர்கள் சொதப்பினர். 227 என்ற இமாலய இலக்கு இருந்தாலும் 12 ஓவர்களுக்குள் ஆர்சிபி 140 ரன்களை குவித்திருந்தது. சிஎஸ்கேவின் மோசமான ஃபீல்டிங்கால் ஆர்சிபிக்கே வெற்றிவாய்ப்பு என நினைத்திருந்த நிலையில், அடுத்தடுத்து டூ ப்ளெசிஸ் (62), மேக்ஸ்வெல் (76) விக்கெட்டுகள் விழுந்தது.

Glen Maxwell


அதற்கு பிறகு தினேஷ் கார்த்திக் கொஞ்சம் இறங்கி விளையாடினார். எப்படி பார்த்தலும் கடைசி ஓவர் வரை ஆர்சிபி வெல்லுமா? சிஎஸ்கே வெல்லுமா? என்ற இழுபறி நீடித்து வந்தது. ஆனால் சிஎஸ்கேவின் தற்போதைய சுட்டிக் குழந்தை மதீஷா பதிரானாவின் கடைசி ஓவர் சிறப்பானதாக அமைந்ததால் வெற்றி சிஎஸ்கேவுக்கு கிடைத்தது. ஆர்சிபி அணியின் ஹோம் க்ரவுண்டான சின்னசாமி ஸ்டேடியத்திலேயே வைத்து சிஎஸ்கே செய்த இந்த சம்பவம், அதிக ரன் கொண்ட சேஸிங் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இடத்தை பிடித்துவிட்டது.

தற்போது தரவரிசை பட்டியலில் 3வது இடத்திற்கு சிஎஸ்கே முன்னேறியுள்ளது. ஆனாலும் சிஎஸ்கே வீரர்களின் ஃபீல்டிங்கில் இருக்கும் குறை சரிசெய்யப்படாவிட்டால் எல்லா போட்டியிலும் இப்படி கடைசி தருணத்தில் வெற்றி பெற முடியாது என்பதுவும் நிதர்சனமாக உள்ளது.

Edit by Prasanth.K