செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2024 (11:01 IST)

டி20 கிரிக்கெட் போட்டி...! இந்திய மகளிர் அணி தோல்வி..!!

australia
இந்திய மகளிர் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது
 
நவி மும்பையில் உள்ள டி. ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.  ஜனவரி 5 ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான 2-வது டி20  கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நேற்று  நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசை தேர்வு செய்தது.
 
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷபாலி வர்மா 1 ரன்கள், மந்தனா 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது.
 
131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய கேப்டன் அலிசா ஹீலி 26 ரன்னும், பெத் மூனி 20 ரன்னும் எடுத்த  நிலையில், தொடர்ந்து களமிறங்கிய தஹிலா 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிய எல்லிஸ் பெர்ரி 34 ரன்கள் எடுத்த நிலையில்,  ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் அபார வெற்றி பெற்றது.
 
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றதன் மூலம் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.  இந்தியா ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நாளை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.