வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 9 மே 2024 (07:06 IST)

என்னுடைய அதிரடி ஆட்டத்துக்கு யுவ்ராஜ் சிங்தான் காரணம்…. SRH அதிரடி நாயகன் அபிஷேக் சர்மா!

நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதிய 57 ஆவது லீக் போட்டி ரசிகர்களை பரவசம் கொள்ளச் செய்யும் விதமாக அமைந்தது.  இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ அணி பேட்ஸ்மேன்கள் ஆமை வேகத்தில் விளையாடி பொறுமையை சோதித்தனர். அதனால் இருபது ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இந்த எளிய இலக்கை ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் யாரும் நம்பமுடியாத வகையில் 9.4 ஓவர்களில் எட்டி ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தினர். இந்த இன்னிங்ஸில் அந்த அணியின் அபிஷேக் ஷர்மா28 பந்துகளில் 75 ரன்களும், டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 89 ரன்களும் சேர்த்தனர்.

இந்த போட்டி முடிந்தபின்னர் பேசிய ஐதராபாத் பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா “நாங்கள் அதிரடியாக விளையாட வேண்டும் என நினைத்து விளையாடுவதில்லை. பந்துக்கு ஏற்றவாறு விளையாடுகிறேன். எங்கள் பவுலர்கள் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக மாறியதாக சொன்னார்கள். குறைந்த இலக்கை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்கவேண்டும் என நினைத்தோம். என்னுடைய இந்த அதிரடி பேட்டிங்குக்கு யுவ்ராஜ் சிங் மற்றும் பிரையன் லாரா ஆகியோர்தான் காரணம்” எனக் கூறியுள்ளார். யுவ்ராஜ் சிங் அபிஷேக் ஷர்மாவுக்கு பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.