ஸ்ரேயாஸ் இன்னும் ரேஸில் இருந்து விலகவில்லை… வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ராவின் கருத்து
ஸ்ரேயாஸ் ஐயரின் மீள்வருகை குறித்து வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்து பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடி அந்த அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டவர் ஸ்ரேயாஸ் ஐயர். அவர் தலைமையில் டெல்லி அணி மிக சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டி வரை சென்றது. ஆனால் அடுத்த ஆண்டே கேப்டன் பொறுப்பு ரிஷப் பண்ட் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அவருக்கும் டெல்லி அணி நிர்வாகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதையடுத்து இப்போது அவர் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு விளையாடி வருகிறார்.
இந்திய அணியில் இன்னும் அவர் தன்னுடைய இடத்தை தக்கவைக்கவில்லை. அதற்கான போட்டியில் சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் உள்ளனர். கடும் போட்டியால் அவர் ஆசியக்கோப்பை தொடரில் விளையாடவில்லை. இந்நிலையில் தற்போது டி 20 உலகக்கோப்பை தொடரில் மீண்டும் விளையாட வாய்ப்புள்ளதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
அதில் “கடந்த சில போட்டிகளாக அவர் சிறப்பாக விளையாடி 40 ரன்களுக்கு மேல் சராசரி வைத்துள்ளார். அதனால் அவர் இன்னும் போட்டியில் இருப்பதாகவே உணர்கிறேன். அவர் மீண்டும் உலகக்கோப்பை போட்டியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.” எனக் கூறியுள்ளார்.