வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By J. Durai
Last Modified: சனி, 9 டிசம்பர் 2023 (20:34 IST)

“Dance Don Guru Steps 2023 Kollywood Awards“ நடனக் கலைஞர்களை கௌரவிக்கும் பிரம்மாண்ட விழா!

தமிழ் திரையுலகில் பணியாற்றிய மூத்த  நடனக் கலைஞர்களை கௌரவிக்கும் “டான்ஸ் டான்”விழா.


தமிழ் சினிமாவில் கோலோச்சி, நம் நினைவுகளில் இருந்து மறைந்து போன, பல முன்னாள் நடனக் கலைஞர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் Dance Don Guru Steps 2003 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, நடனக் கலைஞர் கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் தலைமையில், எண்ணற்ற திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள, பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த டான்ஸ் டான் விழாவை அறிவிப்பதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர்,  அக்‌ஷதா ஶ்ரீதர், அசோக் மாஸ்டர், பாபா பாஸ்கர் மாஸ்டர், லலிதா மணி மாஸ்டர், குமார் சாந்தி மாஸ்டர், வசந்த் மாஸ்டர், விமலா மாஸ்டர், சம்பத் மாஸ்டர், ஹரீஷ் குமார் மாஸ்டர், மாலினி மாஸ்டர், DKS பாபு மாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலகளவில் இந்தியா சினிமா ஆடல் கலை மற்றும் பாடலுக்கு பெயர் பெற்றது. பாடலும் ஆடலும் இல்லாமல் இந்திய சினிமா இல்லை. இங்கு சினிமா உருவானதிலிருந்தே ஆடல், பாடல் சினிமாவின் ஒரு அங்கமாக, சினிமாவிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடனக் கலையை பயிற்றுவிக்கும் நடனக் கலைஞர்களின் பணி அளப்பரியது.

இத்தனை புகழ்மிக்க நடனக் கலையை  ஆரம்ப காலத்தில் பயிற்றுவித்த பல புகழ்மிகு நடனக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வரலாற்றில் இல்லை. 1950 களில் துவங்கி 2023 வரையிலும் பல புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் தமிழ்த்திரையுலகில் பணியாற்றி வந்துள்ளனர். இன்றைய நவீன டிஜிட்டல் உலகைப் போல அவர்களைப் பற்றிய அறிமுகங்களோ, விவரங்களோ, அனைவருக்கும் தெரிந்ததில்லை. திரையுலகில் பணியாற்றும் நடனக் கலைஞர்களுக்கே நம் முந்தைய தலைமுறையின் ஆரம்பத்தில் புகழுடன் பணியாற்றிய நடனக் கலைஞர்களின் விவரங்கள் தெரிவதில்லை.

நம் தலைமுறையில் நமக்கு முன் சாதித்து காட்டிய நடனக் கலைஞர்களை அடையாளம் காட்டும் வகையிலும், அவர்களைப் பற்றி வரலாற்றில் பதிவு செய்து, அவர்களின் நினைவை போற்றும் வகையிலும் இந்த  டான்ஸ் டான் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் தமிழ் திரையுலகில் புகழுடன் பணியாற்றி மறைந்த நடனக் கலைஞர்கள் பற்றி பதிவு செய்து, அவர்களின் சாதனைகளை,  நினைவு கூர்ந்து, அவர்களின் புகழ் திரைப்பிரபலங்கள் முன்னிலையில்  கௌரவிக்கப்படவுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற முன்னாள் நடன கலைஞர்களும் இவ்விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர்.

மேலும் தமிழகத்தின்  38 மாவட்டங்களில் நடனப்பள்ளி நடத்தி வரும் நடனக் கலைஞர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர். Dance Don Guru Steps 2023 Kollywood Awards தமிழ்த் திரையுலகின் முன்னணி நடனக் கலைஞரான கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் முன்னின்று இவ்விழாவை ஏற்பாடு செய்து நடத்துகிறார். வரும் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடக்கவுள்ள இவ்விழாவில், தமிழ் சினிமாவின் முன்னணி நடன கலைஞர்களுடன், தமிழ்த்திரைத்துறையின் பல முன்னணி இயக்குநர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர்.

டான்ஸ் டான் விழா டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி காமராஜர் அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.