பெர்செவெரன்ஸ் ரோவரில் சென்ற ஹெலிகாப்டர்: இன்று செவ்வாயில் பறக்குமா?

Sugapriya Prakash| Last Modified திங்கள், 19 ஏப்ரல் 2021 (14:04 IST)
செவ்வாயில் இன்று ஹெலிகாப்டரை பறக்க விட்டு வரலாற்றுச் சாதனை படைக்க இருக்கிறது அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு.

 
மனிதனால் உருவாக்கப்பட்ட கருவி வேறொரு கோளில் இதுவரை பறக்கவிடப்பட்டதில்லை. நாசாவின் முயற்சி வெற்றிகரமாக அமைந்தால், அது வரலாற்றுச் சாதனையாகும். செவ்வாயில் பறக்கப்போகும் ஹெலிகாப்டரின் பெயர் இன்ஜெனியூட்டி. கடந்த ஆண்டு ஜூலையில் பெர்செவெரன்ஸ் ரோவரின் உதவியுடன் செவ்வாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
மூன்று மீட்டர் உயரத்துக்கு மட்டுமே இன்ஜெனியூட்டி தரையில் இருந்து மேலே எழும்பும். பறக்கும். சுமார் 30 விநாடிகள் பறக்கும். பின்னர் தரையிறங்கிவிடும். மிக எளிதானதாகத் தோன்றினாலும் இதற்கு முன்னால் சோதனை செய்யப்படாத தொழில்நுட்பம் என்பதில் விஞ்ஞானிகள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். சிலிர்ப்பாக இருப்பதாக நாசாவின் விஞ்ஞானி ஃபாரா அலிபே கூறுகிறார்.
 
"நூறு ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் நாம் பறக்கத் தொடங்கிவிட்டோம். இப்போது நாம் வேறொரு கோளில் பறக்கப் போகிறோம். இது தேடலின் அழகு. பொறியியலின் அழகு," என்கிறார் ஃபாரா. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் ஒரு மணிக்கு இன்ஜெனியூட்டி பறக்க இருக்கிறது. திட்டமிட்டபடி பறந்ததா என்ற தகவல் மூன்று மணி நேரத்துக்குப் பிறகு பூமியை வந்தடையும்.


இதில் மேலும் படிக்கவும் :