வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (10:00 IST)

பெர்செவெரன்ஸ் ரோவரில் அனுப்பிவைக்கப்பட்ட ஹெலிகாப்டர்: இன்று செவ்வாயில் பறக்கவுள்ளது

செவ்வாயில் இன்று ஹெலிகாப்டரை பறக்க விட்டு வரலாற்றுச் சாதனை படைக்க இருக்கிறது அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு.

மனிதனால் உருவாக்கப்பட்ட கருவி வேறொரு கோளில் இதுவரை பறக்கவிடப்பட்டதில்லை. நாசாவின் முயற்சி வெற்றிகரமாக அமைந்தால், அது வரலாற்றுச்  சாதனையாகும்.
 
செவ்வாயில் பறக்கப்போகும் ஹெலிகாப்டரின் பெயர் இன்ஜெனியூட்டி. கடந்த ஆண்டு ஜூலையில் பெர்செவெரன்ஸ் உதவியுடன் செவ்வாய்க்கு அனுப்பி  வைக்கப்பட்டது.
 
மூன்று மீட்டர் உயரத்துக்கு மட்டுமே இன்ஜெனியூட்டி தரையில் இருந்து மேலே எழும்பும். பறக்கும். சுமார் 30 விநாடிகள் பறக்கும். பின்னர் தரையிறங்கிவிடும்.
 
மிக எளிதானதாகத் தோன்றினாலும் இதற்கு முன்னால் சோதனை செய்யப்படாத தொழில்நுட்பம் என்பதில் விஞ்ஞானிகள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.  சிலிர்ப்பாக இருப்பதாக நாசாவின் விஞ்ஞானி ஃபாரா அலிபே கூறுகிறார்.
 
"நூறு ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் நாம் பறக்கத் தொடங்கிவிட்டோம். இப்போது நாம் வேறொரு கோளில் பறக்கப் போகிறோம். இது தேடலின் அழகு.  பொறியியலின் அழகு," என்கிறார் ஃபாரா.
 
இந்திய நேரப்படி இன்று பிற்பகல் ஒரு மணிக்கு இன்ஜெனியூட்டி பறக்க இருக்கிறது. திட்டமிட்டபடி பறந்ததா என்ற தகவல் மூன்று மணி நேரத்துக்குப் பிறகு பூமியை வந்தடையும்.
 
எங்கே பறக்கப் போகிறது ஹெலிகாப்டர்?
 
நாசாவால் அனுப்பி வைக்கப்பட்ட பெர்செவெரன்ஸ் உலவி செவ்வாயின ஜெசேரோ பள்ளத்தில் தரையிறங்கியது. தன்னுடைய அடிப்பகுதியில் ஹெலிகாப்டரை மிகப்  பத்திரமாகக் கொண்டு சேர்த்திருக்கிறது.
 
இறங்கிய இடத்தில் இருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் உள்ள "பறக்கும் இடத்தில்" ஹெலிகாப்டரை இறக்கி விட்ட பெர்செவெரன்ஸ், அதுடன் செல்ஃபி எடுத்து  பூமிக்கு அனுப்பியது.
 
இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் பறப்பதற்குத் தயாராக இருப்பதாக நாசா பொறியாளர்கள் கூறுகிறார்கள். பறப்பதற்குத் தேவையான மென்பொருளில் இருந்த சிறு  கோளாறு கடந்த சில நாள்களில் சரிசெய்யப்பட்டுவிட்டன. இப்போது அந்த மாயாஜால நிகழ்வுக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
 
செய்தியாளர் சந்திப்பில் பேசிய இன்ஜெனியூட்டியின் திட்ட மேலாளர் மிமி ஆங், "செவ்வாயில் பறப்பதற்குத் தேவையான ஆற்றல் இன்ஜெனியூட்டிக்கு இருப்பது  உறுதி செய்யப்பட்டிருக்கிறது " என்று தெரிவித்தார்.
 
இன்றைய திட்டம் வெற்றிகரமாக நடந்தால் மேலும் நான்கு முறை இன்ஜெனியூட்டியை பறக்க விடுவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
 
செவ்வாயில் பறப்பதில் என்ன சிக்கல்?
 
செவ்வாயின் வளிமண்டலம் மிகவும் மெல்லியது. பூமியில் இருப்பதில் வெறும் ஒரு சதவிகிதம்தான். அதனால் ஹெலிகாப்டர் பறப்பதற்குத் தேவையான காற்று  கிடைக்காது.
 
ஈர்ப்பு விசையில் இருந்து மேலே எழும்புவதற்கான இழுப்புவிசை செவ்வாயில் குறைவு. அது சாதகமான அம்சம். இருப்பினும் மிகக் குறைந்த எடையிலேயே  ஹெலிகாப்டரை உருவாக்கி இருக்கிறார்கள். இன்ஜெனியூட்டியின் எடை வெறும் 1.8 கிலோதான்.
 
இதன் இரு சுழலும் பிளேடுகள் 1.2 மீட்டர் நீளம் கொண்டவை. நிமிடத்துக்கு 2,500 முறை சுழலும். உண்மையில் இது மிகவும் அதிகமான வேகம். செவ்வாயில் ஒலி  பரவும் வேகத்தில் மூன்றில் இருபங்கு வேகத்தில் பிளேடுகளின் நுனிப்பகுதி இயங்கும்.
 
ஜெசீரோ பள்ளத்தில் நொடிக்கு 20 மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இது பூமியில் சோதனை செய்ததைவிட அதிகம். எனினும் ஹெலிகாப்டர் இதைத் தாங்கிக்  கொள்ளும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
 
நாம் எதையெல்லாம் பார்க்க முடியும்?
 
இன்ஜெனியூட்டியில் இரண்டு ஒளிப்படக் கருவிகள் இருக்கின்றன. ஒரு கறுப்பு வெள்ளை ஒளிப்படக் கருவி அதன் அடியில் தரையை நோக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இது வழிகாட்டுவதற்குப் பயன்படும். மற்றொரு வண்ணப் புகைப்படக் கருவி, தொடுவானத்தை நோக்கி அமைக்கப்பட்டிருகிறது.
 
ஹெலிகாப்டர் பறப்பதை 65 மீட்டர் தொலைவில் இருந்தபடி பெர்செவெரன்ஸ் உலவி படமெடுக்கும். காணொளியும் கிடைக்கலாம்.
 
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
 
1903-ஆம் ஆண்டில் ரைட் சகோதரர்கள் விமானத்தைப் பறக்க விட்டதைப் போன்ற தருணம் இது என நாசா விஞ்ஞானிகள் இதைக் குறிப்பிடுகிறார்கள்.
 
இந்தத் தொடர்பைக் குறிக்கும் வகையில் ரைட் சகோதரர்களின் விமானத்தின் இறக்கையில் இருந்த ஒரு சிறு பகுதி இன்ஜெனியூட்டில் ஒட்டப்பட்டிருக்கிறது.
 
ரைட் சகோதரர்களின் விமானம் முதலில் வெறும் 12 நொடிகளுக்குத்தான் பறந்ததை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். பெரும் பணிகள் சிறு படிகளிலேயே தொடங்குகின்றன.