ஹார்முஸ் பிரச்சனையால் உலகம் முழுவதும் பாதிப்பு.. ஆனால் கேரளாவுக்கு மட்டும் லாபம்: சசிதரூர்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில், குறிப்பாக ஹார்முஸ் நீரிணையில் நிலவும் போர் பதற்றங்கள் உலகளாவிய கப்பல் போக்குவரத்தை பாதித்துள்ள நிலையில், அது கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திற்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக மாறியுள்ளதாக திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்பான மாற்று பாதைகளை தேடி வரும் சூழலில், இந்தியாவின் முதல் ஆழ்கடல் சரக்கு மாற்று மையமான விழிஞ்சம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போது சுமார் 100-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட சரக்கு கப்பல்கள் விழிஞ்சம் துறைமுகத்தில் நுழைய வரிசையில் காத்திருப்பதாக தரூர் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 2026-ல் மட்டும் இத்துறைமுகம் 61 கப்பல்களை கையாண்டு புதிய சாதனையை படைத்துள்ளது. மேலும், மிக குறுகிய காலத்தில் 10 லட்சம் TEU சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ள விழிஞ்சம், தற்போது இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம் ஒரே நேரத்தில் ஐந்து ராட்சத கப்பல்களை நிறுத்தும் வசதி இத்துறைமுகத்தில் உருவாகும். இதன் மூலம் கொழும்பு மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச துறைமுகங்களுக்கு விழிஞ்சம் மிகச்சிறந்த போட்டியாக உருவெடுத்துள்ளது. சவாலான நேரத்தில் இந்தியாவின் கடல்சார் பலத்தை நிரூபிக்கும் ஒரு முக்கிய சொத்தாக விழிஞ்சம் துறைமுகம் உருவெடுத்துள்ளதை சசி தரூர் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
Edited by Siva