1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (21:17 IST)

லண்டனிலுள்ள அம்பேத்கர் இல்லத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

ஜோஷுவா சீதம் & ஜோஷுவா நெவ்ட்
 
லண்டனிலுள்ள புகழ்பெற்ற ப்ரிம்ரோஸ் ஹில் பகுதியில் இந்தியாவின் அரசமைப்பு சட்டமேதை அம்பேத்கரின் நினைவு இல்லம் அமைந்துள்ளது.
தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோதி முதல் பல்வேறு தலைவர்கள் இங்கு வருகை புரிந்துள்ளனர்.
 
"இந்தியாவில் சமூக நீதிக்காக போராடிய பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் இந்த வீட்டில்தான் 1921-22களில் வாழ்ந்தார்" என்று அந்த நினைவு இல்லத்தின் வெளிப்பகுதியிலுள்ள உலோக பலகையில் குறிக்கப்பட்டுள்ளது.
 
அம்பேத்கரின் நினைவுகளை தூண்டும் அவரது புகைப்படங்கள், பயன்படுத்திய பொருட்கள், குறிப்பாக புத்தகங்கள் மற்றும் கண்ணாடிகள் ஆகியவை அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்துக்கு பார்வையாளர்கள் ஆர்வமுடன் வந்து செல்லும் நிலையில், தற்போது புதிய பிரச்சனை ஒன்று எழுந்துள்ளது.
 
அதாவது, அம்பேத்கரின் நினைவு இல்லம் இந்த பகுதியில் நீடிக்கக் கூடாது என்று அங்குள்ள நகர சபையில் அருகிலுள்ள இருவேறு வீடுகளின் உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 
அம்பேத்கரின் நினைவு இல்லத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முடிவு உள்ளூர் நகர சபையின் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது. ஒருவேளை அம்பேத்கர் நினைவு இல்லத்தின் அருகாமைவாசிகளின் கோரிக்கை ஏற்படும் பட்சத்தில், பொது மக்களின் பார்வைக்கு தடை விதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
 
இந்த நினைவு இல்லத்தின் தற்போதைய உரிமையாளர் மகாராஷ்டிர மாநில அரசு; 2015இல் இந்த இல்லத்தை 3.65 மில்லியன் டாலர்களுக்கு அம்மாநில அரசு விலைக்கு வாங்கியது.
 
அதன் பிறகு நடைபெற்ற விழாவில், இந்த நினைவு இல்லத்தை பொது மக்களின் பார்வைக்கு 2015ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.
 
அம்பேத்கரின் நினைவு இல்லம் திறக்கப்பட்டது முதல் மூன்று ஆண்டுகளுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களால் ஈர்க்கப்பட்டது. அதுவரை, இதுபோன்ற ஒரு நினைவு இல்லம் இருப்பதே தங்களுக்கு தெரியாது என்று பிபிசியிடம் பேசிய அப்பகுதிவாழ் மக்கள் தெரிவித்தனர்.
 
எனினும், இந்த பகுதியில் உரிய அனுமதி இன்றி அருங்காட்சியகம் நடத்தப்படுவதாக 2018ஆம் ஆண்டு ஜனவரியில் சிலர் உள்ளூர் நகர சபையில் புகாரளித்தனர்.
 
அதைத்தொடர்ந்து, அடுத்த மாதமே, அம்பேத்கரின் நினைவு இல்லத்தை அருங்காட்சியகமாக பயன்படுத்துவதற்கு அனுமதி கோரி அதன் உரிமையாளர்கள் விண்ணப்பித்தனர். ஆனால், அதே ஆண்டு செப்டம்பர் மாதம், அந்த கோரிக்கையை நிராகரித்த நகர சபை, இது குடியிருப்பு பகுதிக்கு "ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு" என்று வாதிட்டது.
 
இந்நிலையில், அம்பேத்கரின் நினைவு இல்லத்துக்கு வருபவர்களால் இரவும், பகலும் தங்களது பகுதியில் இரைச்சல் மிகுந்து காணப்படுவது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதியை சேர்ந்த இரண்டு பேர் உள்ளூர் நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
 
நகர சபையின் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ள மகாராஷ்டிர அரசின் கோரிக்கை குறித்து வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி பொது மக்களின் கருத்து கேட்கப்படவுள்ளது.
 
இதுகுறித்து கருத்துத் தெரிவிப்பதற்கு மகாராஷ்டிர மாநில அரசு மறுப்புத் தெரிவித்துவிட்டது. ஆனால் பிபிசிக்கு அளித்த அறிக்கையில், இங்கிலாந்திலுள்ள இந்தியாவின் உயர் ஆணையம், இந்த இல்லம் "இந்தியர்களிடையே ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது" என்றும், இந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற கேம்டன் சபைக்கு அனுமதி கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 
மகாராஷ்டிராவில் பிறந்த அம்பேத்கர் ஒரு சட்ட அறிஞர், சிவில் உரிமை ஆர்வலர் மற்றும் 1947இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டின் அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டவர். அவர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் இருந்தார்.
 
இந்தியாவின் சாதி அமைப்புமுறையில் தீண்டத்தகாதவர்களாக கூறப்படும் தலித் சமுதாயத்தில் பிறந்த அம்பேத்கர், பல நூற்றாண்டுகளாக சமூக மற்றும் பொருளாதார பாகுபாடுகளை எதிர்கொண்டுள்ள அந்த சமூகத்தின் மிக முக்கியமான மற்றும் மதிப்பிற்குரிய அரசியல் தலைவரானார்.
 
அவர் பெண்களின் உரிமைகளுக்காகவும், சாதி பாகுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு மற்றும் சமவுரிமை பெற்றுத்தருவதற்கு போராடினார். அவர் இந்தியாவின் மிகச் சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
 
தனது அரசியல் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்னர், அம்பேத்கர் 1921-22 இடைப்பட்ட காலத்தில் ப்ரிம்ரோஸ் ஹில்லில் வசித்து, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பயின்றார்.
 
இதன் காரணமாகவே, அம்பேத்கர் வாழ்ந்த இல்லம் 2015இல் விற்பனைக்கு வந்தபோது, இங்கிலாந்து அரசில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற சந்தோஷ் தாஸ் என்பவரின் வலியுறுத்தலுக்கிணங்க மகாராஷ்டிர அரசு அதை 3.65 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.
 
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய தாஸ், "மக்கள் வந்து பார்த்து செல்லக்கூடிய வகையிலான நினைவு இல்லமாக இதை மாற்ற விரும்புகிறோம். சிலர் இந்த இல்லத்தை புனித தலமாக கருதுகின்றனர்" என்று கூறுகிறார்.
 
லண்டன் வாழ்மக்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 50 பேர் ஒவ்வொரு வாரமும் அம்பேத்கரின் இந்த இல்லத்தை பார்வையிட்டு வருகின்றனர். இந்தியாவிலிருந்து சுற்றுலா சென்றபோது, லண்டனில் தாங்கள் பார்வையிட திட்டமிட்ட இடங்களில் அம்பேத்கரின் இல்லத்துக்கே முன்னுரிமை அளித்ததாக பிபிசியிடம் பேசிய ஒரு குடும்பத்தினர் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், அம்பேத்கர் நினைவு இல்லத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள கோரி உள்ளூர் சபைக்கு ஏராளமான கோரிக்கைகள் எழுந்துள்ளன. அருங்காட்சியகத்திற்கு ஆதரவாக ஒரு கடிதம் பெருநகர சபைக்கு ஆக்ஸ்போர்டின் முன்னாள் பிஷப் பிரபு ரிச்சர்ட் ஹாரிஸ் எழுதியுள்ளார். இருப்பினும், சில அண்டை குடியிருப்பாளர்கள் அவரது நிலைப்பாட்டை ஏற்கவில்லை.
 
"இது குடியிருப்பாக இருக்க வேண்டும்; அருங்காட்சியகமாக இல்லை" என்று தனது பெயரை வெளியிட விரும்பாத உள்ளுர்வாசி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
அம்பேத்கர் இல்லம் உரிய அனுமதியின்றி செப்பனிடப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து வர தொடங்கிய பார்வையாளர்கள் வாகனங்களை நிறுத்தும்போதும், புகைப்படங்களை எடுக்கும்போதும் கூச்சலிட்டு அந்த பகுதியில் அமைதியை குலைத்ததாகவும் அண்டை வீட்டார் புகார் தெரிவிக்கின்றனர்.
 
குடியிருப்பாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பொருட்படுத்தாமல், கேம்டன் நகர சபையின் திட்டமிடல் ஆய்வாளர் எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்கும்.
 
அம்பேத்கர் இல்லத்தின் உரிமையாளர்கள் இந்த முறையீட்டில் தோல்வியுற்றால், அதன் உரிமையாளர்கள் "வீட்டை அதன் சட்டபூர்வ பயன்பாடான குடியிருப்பாக மட்டும் பயன்படுத்த வேண்டியிருக்கும்" என்று உள்ளூர் சபையின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
அம்பேத்கர் வாழ்ந்த இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு சட்டவிதிகளின்படி இடமிருந்தாலும், குடியிருப்பு பகுதியான ப்ரிம்ரோஸ் ஹில்லில் போதுமான இடம் இல்லாத காரணத்தினாலேயே அதன் உரிமையாளர்களின் முந்தைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்று உள்ளூர் நகர சபை தெரிவிக்கிறது.
 
ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றாலும், நூற்றாண்டை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் அம்பேத்கரின் இல்லத்தின் எதிர்காலம் இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.