செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (13:10 IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை ராணுவ வீரர் மஹீஷ் தீக்‌ஷன? BoycottChennaiSuperKings ட்ரெண்டாவது ஏன்?

அண்மையில் நடந்து முடிந்த ஐபில் மெகா ஏலம் 2022ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலங்கையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான மஹீஷ் தீக்ஷனவை ரூ.70 லட்சத்திற்கு ஏலம் எடுத்தற்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இலங்கை ராணுவத்தில் பணியாற்றுபவரான மஹீஷ் தீக்‌ஷனவை ரூ.70 லட்சத்திற்கு ஏலம் எடுத்ததன் எதிரொலியாக தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் BoycottChennaiSuperKings எனும் சென்னை அணிக்கு எதிரான ஹேஷ்டேக் ட்ரெண்டாகத் தொடங்கியிருக்கிறது.

இலங்கை தமிழரின் கிரிக்கெட் அணியில் இடம்

21 வயதாகும் மஹீஷ் தீக்‌ஷன சுழற்பந்து வீசுவதில் சிறந்த ஆட்டக்காரர். கொட்டாஞ்சேனை புனித பெனடிகன் பள்ளியில் கல்வி பயிலும் காலப் பகுதியில் கிரிக்கெட் விளையாட்டிற்குள் பிரவேசித்துள்ளார்.

கொழும்பில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான பிரபல கிரிக்கெட் போட்டியொன்றில் முதல் முறையாக விளையாடிய மஹீஷ் தீக்‌ஷன, கொழும்பு ரோயல் கல்லூரிக்கு எதிரான முதல் போட்டியிலேயே சதம் அடித்தார்.

லங்கா பிரிமீயர் லீக் போட்டிகளில் ஜஃப்னா கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் மஹீஷ். இந்த அணியின் உரிமையாளர் தமிழரான தொழில் அதிபர் சுபாஷ்கரன் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் 2021ல் முதல் முறையாக இலங்கை அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்கும் வாய்ப்பை பெற்றார் மஹீஷ் தீக்‌ஷன.

2021ல் தென்னாப்பிரிக்க அணி 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இலங்கை சென்றிருந்தது. 1 - 1 என்ற கணக்கில் தொடர் சமனில் இருந்தபோது இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக களமிறக்கப்பட்டார் மஹீஷ் தீக்‌ஷன.

தனது துல்லியமான பந்துவீச்சால் 10 ஓவர்கள் வீசி 4 விக்கெட்களை கைப்பற்றிய மஹீஷ், இலங்கை அணி தொடரை வெல்ல முக்கியப் பங்காற்றியவர். அறிமுகப் போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியது மட்டுமின்றி, அப்போதைய இலங்கை கேப்டன் தசுன் ஷனகாவால் 'மிஸ்ட்ரி ஸ்பின்னர்' என பாராட்டப்பட்டார்.

அன்றிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் அஜந்தா மெண்டிஸ் இடத்தை நிரப்பும் பணியில் இறங்கினார். டி20 உலகக்கோப்பை இலங்கை அணியிலும் விரைவாகவே இடம்பிடித்தார்.

மஹீஷ் தீக்‌ஷனவின் பின்னணி என்ன?

சர்வதேச கிரிக்கெட்டில் மஹீஷ் விளையாடுவதற்கு முன் ராணுவத்தில் சேர்ந்து இலங்கை ராணுவ அணிக்காக விளையாடி வந்தவர். ராணுவத்தின் கிரிக்கெட் அணியில் இணைந்து பயிற்சியாளர் அஜந்தா மெண்டிஸ்-இடம் இருந்து சுழற்பந்துவீச்சின் நேர்த்திகளை கற்றிருக்கிறார்.

அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மஹீஷ் தீக்‌ஷன, "ராணுவத்தில் எனது முதல் பயிற்சியாளராக இருந்தவர் அஜந்தா மெண்டிஸ். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று எனக்கு அறிவுரைகள் வழங்கி எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். அவர் என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்," என்றார்.

"ராணுவத்தில் சுமார் 150 கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். எனவே போட்டி மிக அதிகமாக உள்ளது. எங்களிடம் எங்கள் சொந்த டி20 லீக் (ராணுவ தளபதி கோப்பை) உள்ளது, அது எனக்கு எல்.பி.எல்.லில் (Lanka Premier League) இடம் பிடிக்க உதவியது. இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவத்திடம் இருந்து பெரும் ஆதரவு உள்ளது. எங்களுக்கான வசதிகள் எளிதில் கிடைப்பதால், எப்போது வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த ராணுவம் எந்தளவுக்கு ஆதரவு அளித்துள்ளது என்பதை இது காட்டுகிறது" என்றார் மஹீஷ் தீக்‌ஷன.

சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு வலுக்கும் எதிர்ப்பு

''இலங்கை உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்ற இலங்கை ராணுவத்தில் இருந்து வந்த ஒரு கிரிக்கெட் வீரரை சென்னை அணி ஏலத்தில் எடுத்திருக்கக்கூடாது,'' என்பது ஈழ ஆதரவாளர்களின் குற்றச்சாட்டு. இதன் நீட்சியாக சமூக வலைத்தளங்களில் சென்னை அணிக்கு எதிராக BoycottChennaiSuperKings என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணியின் சுழற்பந்துவீச்சில் கோலோச்சியவர் முத்தையா முரளிதரன். இலங்கை தமிழர் பிரச்னை அவ்வப்போது வெடித்தால் முத்தையா முரளிதரனுக்கும் இதர இலங்கை வீரர்கள் சென்னை வந்து ஐபிஎல் விளையாடுவதற்கும் எதிர்ப்பு கிளம்புவது வழக்கம்.

இதனால் பல சீசன்களில் சென்னை அணி ஓர் இலங்கை வீரரை கூட ஏலத்தில் எடுக்கவில்லை. பல ஆண்டுகள் கழித்து சென்னை அணி,'மிஸ்ட்ரி ஸ்பின்னரான' மகேஷ் தீக்‌ஷனாவை ஏலத்தில் எடுத்திருக்கிறது. சுழற்பந்துவீச்சில் ஒரு இளம் வீரரை தேர்ந்தெடுப்பதன் மூலம் எதிர்வரும் பல சீசன்களில் அவரை வைத்து பல விக்கெட்களை அறுவடை செய்யலாம் என்பதே சி.எஸ்.கே.வின் எண்ணம். ஆனால் அது நீடிக்குமா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.