இலங்கை இறுதி கட்ட போரில் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள், ராணுவத்தினர் வசம் இருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்ற வகையில் வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட பொன்னம்பலம் கந்தசாமி (கந்தம்மான்), சின்னத்துரை சசிதரன் (எழிலன்) மற்றும் உருத்திமூர்த்தி (கொலம்பஸ்) ஆகியோர் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுக்களை அவர்களது மனைவிகள் தாக்கல் செய்திருந்த நிலையில், அதற்கான தீர்ப்பே நேற்று வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி மௌனிக்கப்பட்ட உள்நாட்டு போரின் போது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ராணுவத்திடம் சரணடைந்தமைக்கான சான்றுகள் காணப்படுகின்றமை குறித்து நீதிமன்றம் திருப்தியடைந்ததாக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.இரட்ணவேல் தெரிவித்தார்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ராணுவத்திடம் இருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
குறித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களை எதிர்வரும் 22ம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் அல்லது அவ்வாறு இயலாது போனால் அதற்கான காரணத்தை தெளிவூட்ட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, குறித்த மனுக்கள் மீதான கட்டளை இலங்கை ராணுவத்திற்கு எதிராக காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
தமது உறவினர்களை இழந்து, பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இதுவொரு பாரிய வெற்றி என சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.இரட்ணவேல் குறிப்பிடுகின்றார்.
2009ம் ஆண்டு மௌனிக்கப்பட்ட இலங்கையின் உள்நாட்டு போரின் பின்னர், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் பெரும்பாலானோரை, ராணுவத்திடம் ஒப்படைத்ததாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீள தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள், பல வருட காலமாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், தமது உறவினர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி, வவுனியா மேல் நீதிமன்றத்தில் 2013ம் ஆண்டு இந்த ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சுமார் 9 வருடங்கள் நீடித்த இந்த வழக்கு விசாரணைகளின் தீர்ப்பு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை இறுதி யுத்தம்
''இலங்கை ராணுவத்தினர் இதற்கான காரணத்தினை சொல்லித்தான் ஆக வேண்டும், பொறுப்புக்கூறல் அவர்களை சார்ந்தது. இதுவரை காலமும் ஏதோ காரணத்தினை சொல்லிக்கொண்டிருந்தவர்களிடம் அதற்கான பொறுப்பை இந்த நீதிமன்றம் கேட்கின்றது. அதை சொல்லித்தான் ஆக வேண்டும். நீதிமன்றத்தின் மூலம் எமக்கு கிடைத்த ஒரு வெற்றி மற்றும் நிவாரணமாகவே இதனை கருத வேண்டியுள்ளது" என சட்டத்தரணி எஸ்.இரட்ணவேல் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இனியாவது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக மாத்திரமல்லாது, மேலும் பல விடயங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இறுதி யுத்தம்
ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்த சின்னத்துரை சசிதரனின் (எழிலன்) மனைவி அனந்தி சசிதரன், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.
கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே, இந்த வழக்கை தொடர்ந்து இன்று வெற்றிக் கண்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
''கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த வழக்கை நாங்கள் தாக்கல் செய்தோம். அதற்குள் நாங்கள் கடும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டோம். இருந்தும் உள்நாட்டு பொறிமுறைக்குள் போயிருக்கின்றோம் என்பதை காட்டுவதற்கும், எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற பக்கத்திலேயே இந்த வழக்கை தாக்கல் செய்தோம். 10 வருடங்கள் கடந்திருக்கின்றது.
இது நம்பிக்கையை தந்திருக்கின்றது. இலங்கை அரசாங்கத்தின் ராணுவத்திடம் நாம் கையளித்திருக்கின்றோம் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ராணுவம் என்ன பதில் சொல்லப் போகின்றது என்று நாங்கள் பார்க்க வேண்டும். ஆயிரக்கணக்கானோருக்கு மத்தியில் நாங்கள் ஐந்து பேர் மாத்திரமே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளோம்.
பாதிக்கப்பட்ட அனைவரும் இந்த வழக்கை தாக்கல் செய்ய முன்வந்திருந்தால், அது இன்று பெரியதொரு வெற்றியாக இருந்திருக்கும்.
ஆனால், அந்த அளவிற்கு யாரும் முன்வரவில்லை. அறம் வெல்ல வேண்டும் என்ற எங்களின் போராட்டம் வென்றிருக்கின்றது." என அனந்தி சசிதரன் தெரிவிக்கின்றார்.
இலங்கையில் சுமார் 30 வருட காலமாக இடம்பெற்ற உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டதாக, அவர்களது உறவினர்கள் இன்றும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் காணாமல் ஆக்கப்படவில்லை என அரசாங்கம் மற்றும் ராணுவம் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தெரிவித்து வந்த நிலையிலேயே, முதல் தடவையாக ராணுவத்திற்கு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பிருக்கின்றது என்ற அடிப்படையில் வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.