திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2023 (15:46 IST)

வாய் வழியாக சுவாசித்தால் ஏற்படும் உடல்நல பிரச்னைகள் பற்றி தெரியுமா?

BBC
சுவாசித்தல் வாழ்தலுக்கு மிக அடிப்படையான ஒன்று. சுவாசிப்பதற்கு நாம் கற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிறந்ததிலிருந்தே நாம் சுவாசிக்கிறோம். அதனை நன்றாக செய்வதற்கு நமக்கு எந்த பயிற்சியும் தேவையில்லை.

ஆனால், அதுதான் இல்லை. சுவாசிப்பதில் உள்ள சில நுணுக்கங்கள் குறித்து அறிய வேண்டும் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இன்னொன்று, மூக்கின் வழியாக சுவாசிப்பதும் வாய் வழியாக சுவாசிப்பதும் ஒன்றல்ல.

ஒருவர் நாள் ஒன்றுக்கு 10,000 முதல் 12,000 லிட்டர் காற்றை சுவாசிக்கிறார். இந்த காற்று தூய்மையாக இருந்தாலும், அதில் தூசு, வைரஸ்கள், பூஞ்சைகள் உள்ளிட்டவை இருக்கலாம். அவை நாம் சுவாசிக்கும்போது நம்முடைய சுவாசப்பாதை மற்றும் நுரையீரலில் கலந்துவிடுகின்றன.

இதனால் பதற்றம் அடைய வேண்டாம். நமது சுவாச அமைப்புக்கு அவற்றை எப்படி சுத்தம் செய்வது, தன்னை பாதுகாப்பது என தெரியும். உண்மையில், 3 முதல் 5 மைக்ரான் வரை விட்டம் கொண்ட சிறுதுகள்களே நுரையீரலை சென்றடையும்.

‘சூப்பர் ஹீரோ’ சிலியா

மற்ற மாசுக்கள் நம் சுவாசப்பாதையை அடையாமல் சுவாச அமைப்பு எப்படி தடுக்கிறது? இதற்கு சிலியா எனப்படும் ‘சூப்பர் ஹீரோ’க்களே காரணம்.

சிலியா என்பது நம் செல்களின் மேற்பரப்பில் காணப்படும் முடி போன்ற, ஊசிமுனையை விட மிகச்சிறிய அமைப்பாகும்.

நமது சுவாசக்குழாயில் உள்ள மியூகோசா எனப்படும் சளிசவ்வில் இந்த சிலியா ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன. மூக்கு, மூச்சுக்குழாயில் உள்ள மியூகோசாவின் ஒவ்வொரு செல்லிலும் 25 முதல் 30 சிலியாக்கள் உள்ளன. அதன் சராசரி நீளம் 5 முதல் 7 மைக்ரான்களாகும்.

செல்களில் நீட்டிக்கொண்டிருக்கும் இந்த சிலியாக்கள், தூரிகையை நகர்த்தும்போது அதன் முட்கள் அசைவது போல நகர்ந்துகொண்டிருக்கும்.

இந்த செயல் மூலம், மூக்கில் நுழையும் 0.5 மில்லிமீட்டர்கள் வரை விட்டம் கொண்ட துகள்கள் குரல்வளைக்கு இழுக்கப்பட்டு, அந்த துகள்கள் வெறும் 10 முதல் 15 நிமிடங்களிலேயே மூக்குப் பகுதியிலிருந்து முற்றிலும் அகற்றப்படுகின்றன.

இந்த சிலியாவின் அதிவேகத்திறனே இதன் ‘சூப்பர் பவர்’. ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் முறை அவை அசைகின்றன. இதனால், அவை சுவாசக் குழாயில் உள்ள மியூகோஸை மேல்நோக்கித் தள்ளுகிறது. மேலும், மியூகோஸில் நோய்க்கிருமிகள், நுண்ணுயிரிகள் மற்றும் துகள்களை சிக்க வைக்கிறது. இதன்மூலம், மூக்கு, சைனஸ்கள், மூச்சுக்குழாயில் உள்ள தொற்றுகள் அகற்றப்படுகின்றன.

நோய் எதிர்ப்பு வேறுபாடுகள்

நம்முடைய மூக்கு தனித்தன்மை வாய்ந்த குணங்களை கொண்ட திசுக்களால் சூழப்பட்டது. நோயெதிர்ப்பு ரீதியாகவும் இது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் நாம் சுவாசிக்கும் காற்றில் நுழையும் நோய்க்கிருமிகள் நம் உடலில் நுழைவதற்கான “முயற்சி”யும் மூக்கின் வழியாகவே மேற்கொள்ளப்படுகிறது.
BBC

நமது மூக்கின் மியூகோஸ், நோய்க்கிருமியை தாக்குவதற்கு அல்லது அதை அனுமதிப்பதற்கு இடையில் தொடர்ந்து தீர்மானிக்கிறது.

இந்த செயல்முறை பொதுவாக நமக்கு பெரிய தீங்கு விளைவிக்காத நோய்க்கிருமிகளுக்கு ஒரு குறிப்பிட்ட சகிப்புத்தன்மை இருப்பதைக் குறிக்கிறது.

IgA எனப்படும் ஆன்டிபாடிகளை உருவாக்கும் ஒரு வகை B உயிரணுவால் இந்த "பாதுகாவலன்" பாத்திரம் வகிக்கப்படுகிறது. இந்த உயிரணு, ரத்தத்தில் இருக்கும் IgG-யிலிருந்து சற்றே வித்தியாசமானது. இதுகுறித்து நாம் கொரோனா தொற்றுநோயின் போது கேள்விப்பட்டிருப்போம்.

ஏன் மூக்கு வழியாக சுவாசிக்க வேண்டும்? வாய் வழியாக சுவாசிக்கக் கூடாது? நம்முடைய வாய் திட மற்றும் திரவ உணவுகள் நுழைவதற்கான ஒரு நுழைவுப்பகுதி. வாய்ப்பகுதியில் உள்ள மியூகோசா வேறு மாதிரியான அம்சங்களை கொண்டவை. மேலும், காற்றை வடிகட்டும் சிலியா அதில் இல்லை.

நாம் உண்ணும் உணவின் வழியாக உள்ளே நுழையும் கிருமிகளை தடுப்பதே வாயின் செயல்பாடாகும். எப்படி நாம் மூக்கின் வழியாக உணவை சாப்பிடுவதில்லையோ, அதேபோன்று வாய் வழியாக சுவாசிக்கவும் கூடாது.

மேலும், மூக்கின் வழியாக உள்நுழையும் காற்று சூடாக இருக்கும், இதன்மூலமும் நோய்க்கிருமிகள் விரட்டப்படுகின்றன.

வாய் வழியாக சுவாசிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

வாய் வழியாக சுவாசிப்பது முகத்திலுள்ள எலும்புகளை மாற்றும்.

வாய் வழியாக தொடர்ச்சியாக சுவாசிப்பதற்கு மரபுரீதியாக காரணங்கள், நாசி அடைப்பு, நாசி கட்டிகள், சைனஸ் உள்ளிட்டவை காரணமாக அமையலாம்.

சுவாச அழற்சி, பருவநிலை, தவறான நிலையில் உறங்குதல் உள்ளிட்டவையும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

மேலும், தொடர்ந்து வாய் வழியாக மூச்சுவிடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இதனால், குழந்தைகளின் முகத்தில் உள்ள எலும்புகளின் அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும்.

குழந்தைகளுக்கு இதனால் முக எலும்புகளின் வளர்ச்சியில் பாதிப்பு மற்றும் மேலோக்ளூஷன் எனப்படும் மேல்பல் - கீழ்ப்பல் பொருந்தாமை உள்ளிட்டவை ஏற்படும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

வாயை சரியாக மூடாததால், பெரியவர்களுக்கு அசைபோடுவதற்கு உதவும் தசைகளில் வலி, கழுத்து வலி மற்றும் தலைவலியை ஏற்படுத்தும்.

“அவசரத்தின் போது மட்டுமே” வாய் வழியாக மூச்சுவிடுங்கள்.