வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (23:44 IST)

உலகில் மக்கள் நீண்ட காலம் உயிர் வாழும் நான்கு இடங்கள் எவை? அதன் ரகசியம் என்ன?

லூசில் ரேண்டன் ஜனவரி மாதம் இயற்கை எய்தினார். அப்போது அவருக்கு வயது 118. உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற சாதனையை அவர் படைத்திருந்தார்.
 
பிரான்ஸின் ஒரு கன்னியாஸ்திரி லூசில் சிஸ்டர் ஆண்ட்ரே என்று பிரபலமாக அறியப்பட்டார். அவர் இரண்டு உலகப் போர்களையும் பார்த்தவர். சந்திரனில் மனிதன் தடம் பதித்தற்கு அவர் சாட்சியாக இருந்தார். அவர் டிஜிட்டல் யுகத்தையும் பார்த்தவர்.
 
மனிதர்களின் சராசரி வயது 73.4 ஆக இருந்த அந்த உலகின் ஒரு பகுதியாக அவர் இருந்தார் என்ற உண்மையின் அடிப்படையில் அவரது கதை தனித்துவமானது.
 
இருந்தபோதிலும் நாளுக்கு நாள் மக்களின் ஆயுட்காலம் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் மனிதர்களின் சராசரி வயது 77 ஆக அதிகரிக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
 
மக்களின் ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது. பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 
உங்கள் ஆயுளை அதிகரிக்க கட்டாயம் செய்ய வேண்டியவை
 
உலகில் இப்போது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் தொகை அதிகம். ஆனால் இந்த நிலை உலகின் எல்லா நாடுகளிலும் ஒரே போல இல்லை.
 
மொனாக்கோவில் மனிதர்களின் சராசரி வயது 87 ஆக இருக்கும் போது, ஆப்பிரிக்காவின் ஏழை நாடான சாட் குடியரசின் சராசரி வயது 53 ஆண்டுகள் மட்டுமே.
 
மொனாக்கோவிற்குப் பிறகு சீனாவின் நிர்வாகத்தில் உள்ள ஹாங்காங் வருகிறது. மக்காவ் மூன்றாவது இடத்திலும், ஜப்பான் நான்காவது இடத்திலும் உள்ளன. உலக வல்லரசுகளில் ஜப்பானில் மனிதர்களின் சராசரி வயது அதிகமாக உள்ளது.
 
ஐக்கிய நாடுகள் சபையின் உலக மக்கள்தொகை மதிப்பீட்டு அறிக்கையின்படி, அதிக சராசரி வயது பட்டியலில் உள்ள மீதமுள்ள நாடுகள் லிச்சென்ஸ்டீன், சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், இத்தாலி, தென் கொரியா மற்றும் ஸ்பெயின் ஆகும்.
 
பெருந்தொற்று மற்றும் உலகப் போர்களை விட்டுவிட்டால், இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் மனிதனின் சராசரி வயது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தடுப்பூசிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் சிறந்த மருந்துகளின் வளர்ச்சியுடன், சிறந்த தூய்மை, உணவு மற்றும் வாழ்க்கை நிலைமைகள் காரணமாக சராசரி வயது அதிகரித்துள்ளது.
 
 
சரியான முடிவுகள் அளிக்கும் நன்மைகள்
 
வயது முதிர்வில் மரபணு காரணம் மிகவும் முக்கியமானது. ஆனால் மற்ற விஷயங்களும் அதில் பங்கு வகிக்கின்றன. உதாரணமாக, ஒரு நபர் பிறந்த இடம், வாழ்க்கை சூழ்நிலைகள் , ஒரு மனிதனாக அவர் தனது வாழ்க்கையில் என்ன மாதிரியான முடிவுகளை எடுத்தார் போன்றவை இதில் அடங்கும்.
 
சிறந்த சுகாதார வசதிகள் மற்றும் நல்ல உணவு முறையால் மட்டுமே நீண்ட ஆயுளை அடைய முடியாது. இதற்கு, நிபுணர்கள் 'ஸ்மார்ட் முடிவுகள்' என்று அழைக்கும் அந்த முடிவுகளும் முக்கியமானவை. குறிப்பாக சமச்சீர் உணவு, போதுமான தூக்கம், மன அழுத்தத்தைக்கட்டுப்படுத்துதல் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான முடிவுகள்.
 
நீண்ட சராசரி வயது அடிப்படையில் உயர் தரவரிசையில் இருக்கும் நாடுகளில் அதாவது, முதலிடத்தில் இருப்பவர்களிடையே பொதுவான ஒரு விஷயம் அதிக வருமானம். அவர்களிடையே பொதுவானதாக இருக்கும் மற்றொன்று அந்த நாடுகளின் அளவு.
 
இந்தப் பட்டியலில் மொனாக்கோ, லீக்டென்ஸ்டைன் போன்ற மிகச் சிறிய நாடுகள் இருக்கின்றன. மற்ற நாடுகளைப் போல அவர்களின் மக்கள்தொகையில் பன்முகத்தன்மை காணப்படவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை மதிப்பீட்டுத் துறையின் தலைவர் பேட்ரிக் கெர்லாண்ட் கூறுகிறார்.
 
"இந்த நாடுகள் தனித்துவமாகத் தோன்றுகின்றன. ஆனால் உண்மையில், அவற்றின் மக்கள் தொகை வேறுபட்டது. மற்ற நாடுகளில் காணப்படும் பல்வேறு வகையான மக்கள்தொகைகளின் கலவை இங்கே இல்லை,"என்றார் அவர்.
 
பிபிசியிடம் பேசிய பேட்ரிக், "அவர்களின் வாழ்க்கைத் தரம் சிறப்பாக உள்ளது. சுகாதார வசதிகள் மற்றும் கல்வி வசதிகள் நன்றாக உள்ளன. ஆனால் இங்கு சீரற்ற தேர்வு எதுவுமே இல்லை" என்று கூறுகிறார்.
 
வெவ்வேறு நாடுகளுக்கு இடையே, பல சந்தர்ப்பங்களில் ஒரே நாட்டிற்குள் கூட பெரிய வித்தியாசத்தைக் காணமுடியும். குறிப்பாக அதிக சமத்துவமின்மை உள்ள இடங்களில், வெவ்வேறு சமூக குழுக்களின் சராசரி வயதின் இடைவெளி அதிகரிக்கிறது.
 
"ஐரோப்பாவின் பல நாடுகளில் எண்பது வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு சராசரி வயது அதிகம்," என்று அவர் கூறுகிறார்.
 
 
நீல மண்டலம் மக்கள்தொகையின் அடிப்படையில் சிறிய பகுதியாகும். மற்றவர்களை விட நீண்ட காலம் வாழும் மக்கள் இங்கு உள்ளனர்.
 
மக்கள்தொகை நிபுணர் மிஷேன் புலேன் மற்றும் முதுமை மருத்துவ நிபுணர் ஜானி பயஸ் ஆகியோர் உலகின் மிக வயதான மக்கள் எங்கு வாழ்கிறார்கள் என்பதைக் கண்டறியும் பணியை சில தசாப்தங்களுக்கு முன்னர் மேற்கொண்டனர்.
 
நூறு ஆண்டுகள் வரை வாழ்ந்த மக்கள் இருந்த நகரங்கள் மற்றும் பகுதிகள், வரைபடத்தில் நீல நிறத்தில் வட்டமிட்டன.
 
வரைபடத்தில் நீல நிறத்தில் குறிக்கப்பட்ட ஒரு பகுதி பார்பஜா என்று அவர்கள் கண்டறிந்தனர். இது இத்தாலியின் சார்டினியா தீவில் உள்ளது. அதற்கு 'நீல மண்டலம்' என்று அவர்கள் பெயரிட்டனர். அப்போதிலிருந்து இந்த பெயர், சிறந்த வாழ்க்கைத் தரத்துடன் நீண்ட ஆயுளுடன் மக்கள் வாழும் இடங்களுடன் தொடர்புடையதாக ஆகிவிட்டது.
 
இந்த ஆய்வின் அடிப்படையில் செய்தியாளர் டான் ப்யூட்னர் ஒரு நிபுணர் குழுவை உருவாக்கினார். மற்ற இடங்களில் இதே போன்ற சமூகங்களை கண்டறியும் பணிக்காக இந்தக்குழு உருவாக்கப்பட்டது.
 
Caption- தெற்கு ஜப்பானில் உள்ள ஒகினாவாவில், மக்கள் 90 வயது வரை சுறுசுறுப்பாக இருக்க்கிறார்கள்.
 
சார்டினியாவைத் தவிர மேலும் நான்கு நீல மண்டலங்கள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இவை ஜப்பானில் உள்ள ஒகினாவா தீவு, கோஸ்டாரிகாவில் உள்ள நிக்கோயா, கிரீஸில் உள்ள ஐகாரியா தீவு மற்றும் கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா அட்வென்டிஸ்ட் சமூகம்.
 
ஆனால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் குழுக்கள், நீல மண்டலத்தில் ஆக்கபூர்வ தாக்கம் ஏற்படுத்தும் மற்ற காரணிகள் என்ன என்பதை புரிந்துகொள்ள முயன்றனர். அதன் தகவல்களுக்காக உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றனர்.
 
2008 ஆம் ஆண்டில், ப்யூட்னர் 'தி ப்ளூ சோன்ஸ்: லெசன்ஸ் ஃபார் லிவிங் லாங்கர் ஃப்ரம் தி பீப்பிள் ஹூ ஹேவ் லிவ்ட் தி லாங்கஸ்ட்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.
 
அப்போதிருந்து அவர் இந்த யோசனையை முன்னெடுத்துச் செல்லும் பணியில் தன்னை அர்ப்பணித்தார்.
 
இருப்பினும் அனைவரும் அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டார்கள் என்று சொல்ல முடியாது. அவரது பல அறிக்கைகள் நீண்ட கால அறிவியல் ஆய்வுக்கு மாறாக கவனித்தலின் அடிப்படையில் அமைந்தவை என்று எதிர்ப்பாளர்கள் வாதிட்டனர்.
 
 
நீல மண்டலத்தில் 'பொதுவானது' என்ன?
 
ப்யூட்னர் மற்றும் அவரது குழுவினர் சமூகங்கள் பற்றிய ஆய்வில் சில பொதுவான தன்மைகளைக் கண்டறிந்தனர். இவற்றின் அடிப்படையில், உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது அந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை ஏன் நீண்டதாகவும் சிறப்பாகவும் இருக்கிறது என்று கூறினார்கள். அவற்றில் இருந்த சில விஷயங்கள்..
 
• அவர்களின் வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருந்தது அதாவது அவர்கள் தினமும் காலையில் எழுவதற்கான காரணம்.
 
• அவர்கள் குடும்ப பந்தத்தை வலுவாக வைத்திருக்கிறார்கள்.
 
• அவர்கள் பொதுவான, வழக்கமான பந்தத்திலிருந்து விலகி மன அழுத்தத்தைக் குறைக்கிறார்கள். சமூகப் பழக்கவழக்கங்களின் ஒரு பகுதியாக மாறிய பிற நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்கிறார்கள். உதாரணமாக லோமா லிண்டாவில் பிரார்த்தனை செய்கிறார்கள். ஒகினாவாவில் பெண்களுக்கான தேநீர் விருந்து நடைபெறுகிறது.
 
• அவர்கள் உணவை வயிறு புடைக்க உண்பதில்லை. வயிற்றின் திறனில் 80 சதவிகிதம் மட்டுமே உண்கிறார்கள்.
 
• சமச்சீர் உணவை எடுத்துக்கொள்கிறார்கள். இதில் ஏராளமான காய்கறிகள் மற்றும் பழங்கள் அடங்கும்.
 
• அவர்கள் குறைந்த அளவு ஆல்கஹால் எடுத்துக்கொள்கிறார்கள்.
 
• அவர்கள் தினமும் நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்கிறார்கள்.
 
• அவர்கள் வலுவான சமூக உணர்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு நல்ல பழக்கங்களை ஊக்குவிக்கிறார்கள்.
 
• நம்பிக்கை அல்லது மதம் ஊக்குவிக்கப்படும் குழுவின் ஒரு பகுதியாக அவர்கள் உள்ளனர்.
 
• இவை தவிர, நட்பு சூழல், நல்ல குணம், ஆரோக்கியமான உணவுக்கான அணுகல் மற்றும் பெரிய நகர்ப்புற மையங்களில் இருந்து தூரம் ஆகியவை அவர்களின் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக உள்ளது.
 
இருப்பினும், நீல மண்டலத்தின் ஒரு பகுதியாக இருக்க, நீங்கள் அங்கு பிறந்து அந்த சமூகத்தின் சுறுசுறுப்பான உறுப்பினராக இருக்க வேண்டும். ஆயினும் நீண்ட மற்றும் சிறந்த வாழ்க்கையை விரும்பும் அனைவருக்குமே இந்த பழக்க வழக்கங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
 
பொருளாதார நிலை மற்றும் குரோமோசோமில் காணப்படும் குணங்கள் தவிர வேறு சில விஷயங்களும் உள்ளன என்றும் இவற்றின் மீது அதிக கவனம் செலுத்தப்படவில்லை என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த விஷயங்கள்தான் வாழ்க்கையின் நோக்கம் மற்றும் மற்றவர்களுடன் தொடர்பு.
 
இந்த விஷயங்கள் சாதாரணமாகத்தோன்றினாலும், நீண்ட காலத்திற்கு நல்ல தரமான வாழ்க்கையை வாழ விரும்புவோருக்கு இது ஒரு பெரிய சவாலாகும்.
 
”ஆரோக்கியமான முதியவர்கள், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பார்கள். வீட்டிற்கு வெளியே சிறிது நேரம் செலவிடுவார்கள். அவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வலுவான உறவைக் கொண்டுள்ளனர்,” என்று முதுமைக்கான தேசிய நிறுவனத்தின் அறிவியல் இயக்குனர் லூய்கி ஃபெருசி கூறினார்.
 
ஒரு நபரின் நீண்ட ஆயுளில் மரபணுக்கள் மற்றும் வாழ்க்கை முறை எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் நிபுணர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
 
குரோமோசோம்களின் பங்கு 25 சதவிகிதம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது தவிர, ஒரு நபர் எங்கு வாழ்கிறார், என்ன சாப்பிடுகிறார், எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறார், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அடங்கிய அவரது ஆதரவு அமைப்பு எவ்வாறு உள்ளது என்பதும் முக்கியமான காரணிகள்.
 
நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வில் மரபணு காரணிகளின் பங்கு பற்றிய விவாதம் அறிவியல் சமூகத்தில் தொடர்கிறது.
 
(இந்த கட்டுரை பிபிசியின் ஸ்பானிஷ் மொழி சேவையான பிபிசி முண்டோவிலிருந்து எடுக்கப்பட்டது.)