திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (14:34 IST)

யுக்ரேன் vs ரஷ்யா: 23-வது நாள் படையெடுப்பில் இதுவரை நடந்தது என்ன?

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் 23-வது நாள் படையெடுப்பு நடந்து வருகிறது. நீங்கள் இப்போது தான் எங்களுடன் இணைகிறீர்கள் எனில், இன்று இதுவரை நடந்தவை குறித்த சுருக்கம் உங்களுக்காக...

 
லுவீவ் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பராமரிப்பு ஆலை இன்று காலையில் தாக்கப்பட்டது. உயிர்சேதம் எவும் ஏற்படவில்லை. லுவீவ் போலந்து எல்லையிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது.
 
அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் பாதுகாப்பு அதிகாரிகள், ரஷ்ய படைகள் சமீபமாக எங்கும் முன்னேறவில்லை, படைவீரர்களின் மன உறுதி மற்றும் தளவாட பிரச்னைகளுடன் போராடிக் கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
 
யுக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான கார்ஹிவில் ஷெல் குண்டு தாக்குதல்கள் தொடர்ந்தன. ஆனால், உள்ளூர் படைகள் தங்கள் தளத்தைத் தக்கவைத்துக் கொண்டன.
 
தென்கிழக்கு நகரமான மேரியோபோல், ரஷ்ய படைகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், சுமார் 30,000 பேர் தப்பியோட முடிந்தது.
 
ரஷ்யாவால் குண்டு வீசித் தாக்கப்பட்டதாக யுக்ரேனிய அதிகாரிகள் கூறும் மேரியோபோலில் உள்ள ஒரு திரையரங்கில் உயிர் பிழைத்தவர்கள் இடிபாடுகளில் இருந்து வெளியேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.
 
1000-க்கும் மேற்பட்ட யுக்ரேனியர்கள் ஒரே இரவில் கீயவ் பகுதியிலிருந்து, பேருந்துகளிலும் கார்களிலும் வெளியேற்றப்பட்டனர்.
 
மேற்கு நாடுகளின் தடைகளில் இருந்து ரஷ்யாவை காப்பாற்றினால், சீனா அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.