1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2020 (11:00 IST)

இந்தியா - சீனா எல்லை மோதல் பற்றி பாகிஸ்தானில் என்ன பேசப்பட்டது?

லடாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த கைகலப்பு பாகிஸ்தானில் பெரிதும் பேசப்பட்ட ஒரு செய்தியாக உள்ளது. குறிப்பாக பதற்றமிகு  எல்லைப் பகுதியில், 45 வருடங்களில் முதன்முறையாக 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தி பாகிஸ்தான் மக்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு குறித்து செய்திகள் வெளிவந்தவுடன், இது சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆனது. செவ்வாயன்று டிவிட்டரில் ட்ரெண்டான முதல் பத்து விஷயங்களில் ஏழு விஷயங்கள் லடாக்கில் நடைபெற்ற இந்த கைகலப்பு குறித்ததாக இருந்தது.
 
பாகிஸ்தானில் பலர் சமூக ஊடகங்களில், நகைச்சுவைப் புகைப்படங்கள், மீம்கள் மூலம் கேலிச் செய்திகளைப் பதிவிட்டனர். குறிப்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர  மோதி, சில அரசியல்வாதிகள் மற்றும் ஆய்வாளர்கள் புகைப்படங்களைப் பயன்படுத்தி பலர் டிவீட் செய்தனர். அதில் இந்தியர்கள் தற்போது ஏன் சர்ஜிகல் ஸ்ட்ரைக்  குறித்துப் பேசவில்லை, இந்த முக்கிய விஷயம் குறித்து நரேந்திர மோதி ஏன் எந்த பதிவையும் இடவில்லை, என அவர்கள் கேட்டிருந்தனர். மேலும் சில வலதுசாரி  நபர்களைக் குறிப்பிட்டு சீனாவிற்கும் அதன் படைகளுக்கும் சவால் கொடுக்காமல் ஏன் அவர்கள் அமைதி காக்கின்றனர் என கேள்வி கேட்கும் விதமாக டிவிட்டரில்  பதிவிட்டிருந்தனர்.
 
இருப்பினும் சிலர், இந்தியாவில் பாஜக ஆட்சியின் வெளியுறவுக் கொள்கை குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்பினர்.
 
பல ஊடகங்களில் இந்த விவகாரம் முக்கியத் தலைப்புச் செய்தியாக இருந்தது. தொலைக்காட்சிகளின் ப்ரைம் டைம் நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகளும்,  ஆய்வாளர்களும் இந்த விவகாரத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி மீது குற்றம் சுமத்தினர். மேலும் மோதியின் விரிவாக்க கொள்கைகளின் விளைவாக  கிட்டதட்ட இந்தியாவின் அனைத்து அண்டை நாடுகளுடனும் பதற்றம் நிலவுகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
 
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹமூத் குரேஷி, நடப்பு நிகழ்வுகள் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "மெய்யான கட்டுப்பாட்டுக்  கோட்டில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே நடைபெற்ற மோதல், இந்திய அரசின் இந்துத்துவா கொள்கையின் விளைவாக ஏற்பட்டது," என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் பிடிவாதத்தால் மே 9 அன்று நடைபெற்ற சிறு சண்டை இன்று பெரிதாக மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
செனட்டர் முஷாஹித் ஹுசைன் சயித், இது ஒரு வரலாற்று நிகழ்வு என்றும், மேலும் இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையிலும், புவி-அரசியல் சூழலிலும்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இந்தியா தனது அண்டை நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பது பாகிஸ்தானுக்கு சாதகமான ஒரு விஷயம் என்றும் அவர் நம்புகிறார்.
 
"லடாக்கில் தற்போது நிலவும் சூழல், காஷ்மீரில் ஆகஸ்டு 5ஆம் தேதி முதல் நிலவும் சூழலில் இருந்து தொடங்குகிறது. இந்தியா வலுக்கட்டாயமாக காஷ்மீரையும்,  லடாக்கையும் பறித்தது. சீனாவும் லடாக்கில் உரிமை கோருகிறது."
 
மேலும் அவர், சில இந்திய அரசியல்வாதிகள், பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரையும், கில்ஜிக் பல்டிஸ்தான் மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும்  சில பகுதிகளையும், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது குறித்துப் பேசுகின்றனர் என்றும் தெரிவித்தார்.
 
"சீனாவில் ஓர் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் எழுச்சி நட்சித்திரமான ஒருவரை மேற்கு கட்டளைப் பிரிவுக்கு கமாண்டராக  நியமித்துள்ளனர். இதன்மூலம், சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான எந்த ஒரு முயற்சியாக இருந்தாலும் சரி, ஹாங்காங்கோ,  தைவானோ, ஷிஜியாங்கோ அல்லது அதன் இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளோ ஆக்ரோஷமான பதிலடிகள் கொடுக்கப்படும் என்பது தெரிகிறது." என்று மேலும்  தெரிவித்தார்.
 
பாதுகாப்பு ஆய்வாளரும் ஓய்வு பெற்ற லெஃடினண்ட் ஜெனரலுமான குலாம் முஸ்தஃபா, "இது ஒரு முக்கிய நிகழ்வு. மேலும் இந்தியா, சீனா இடையேயான எல்லை  பதற்றம் இங்கு முடிவதாகத் தெரியவில்லை. அந்தப் பகுதியில் இந்தியா சாலையை கட்டமைத்து தனது ராணுவத்தை விரிவுபடுத்தியது. ஆனால் அந்தப் பகுதி  சீனாவின் 'ஒன் பெல்ட் ஒன் ரோட்' என்ற கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்துக்கான முக்கியப் பகுதியாகும். எனவே லடாக் பகுதியில் அவர்கள் தங்கள் பகுதியை மட்டும்  பாதுகாக்கவில்லை வளர்ச்சி திட்டத்தையும் பாதுகாக்கின்றனர்." என்கிறார்.

ஊடகங்கள் எவ்வாறு செய்தி வெளியிட்டன?
 
கிட்டத்தட்ட பாகிஸ்தானில் வெளியாகும் அனைத்து ஆங்கில மற்றும் உருது செய்தித்தாள்களில் இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டதுதான் முதற்பக்க செய்தி.
 
"டெய்லி நவா - இ - வாக்ட் என்ற பத்திரிகையில், "லடாக்: சீன ராணுவத்தை தாக்கியதால் பெரும் விளைவை இந்தியர்கள் எதிர்கொண்டனர். ஒரு கர்னல் உட்பட  இந்தியப் படையினர் 20 பேர் கொல்லப்பட்டனர்." என செய்தி வெளியிடப்பட்டது.
 
அதே செய்தியின் துணைத் தலைப்பில், "அடி, உதை மற்றும் தடியால் அடி". என குறிப்பிடப்பட்டிருந்தது.
 
டெய்லி ஜாங்ஸ் என்ற பத்திரிகையின் தலைப்பு: "இந்திய ஊடுருவல்: ஒரு கர்னல் உட்பட இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர்" என  குறிப்பிடப்பட்டிருந்தது.
 
மேலும் சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையும், பாகிஸ்தானிய ஊடகங்களில் செய்தியானது.
 
"எல்லையை இரு முறை கடந்தனர். இது சீன ராணுவத்தை தூண்டிவிட்டது. எனவே இரு எல்லைப்படைகளுக்கும் இடையே மோதல் வெடித்தது," என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், சாவ் லிஜான், கூறியதாக, டெய்லி டான் செய்தி வெளியிட்டிருந்தது.
 
இந்திய ஊடகங்கள் குறித்து ஆய்வு
 
இந்திய ஊடகங்களின் செய்திகளும் ஆராயப்பட்டன. பாகிஸ்தானுடன் நடந்த சண்டை மற்றும் கடந்த காலங்களில் பிற அண்டை நாடுகளுடன் நடந்த சண்டைகள்  ஆகியவற்றுடன் இந்த நிகழ்வு ஒப்பிடப்பட்டது. அதில் விமர்சகர்கள் பலர், பாகிஸ்தான் மற்றும் பிற அண்டை நாடுகளுடன் ஏற்படும் பதற்றத்தைவிட லடாக்கில்  நடந்த விவகாரம் குறைத்துக் காட்டப்பட்டதாக கூறுகின்றனர்.
 
பாகிஸ்தானைச் சேர்ந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் கம்ரான் கான் தனது நிகழ்ச்சியின் தொடக்கத்தில், "ஒரு அதிர்ச்சியூட்டும் பயம் தெரிகிறது. இந்திய ஊடகங்களில்  சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்தோ அல்லது பழிவாங்குதல் குறித்தோ யாரும் பேசவில்லை. பொதுவான ஆவேசத்தைக் காட்டிலும் தற்போது குறைவாகவே உள்ளது."  என தெரிவித்தார்.