1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 17 மே 2021 (10:08 IST)

இரு வேறு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உங்கள் உடலில் என்னாகும்?

ஒரு டோஸ் ஆஸ்ட்ராசெனீகா மற்றும் ஒரு டோஸ் ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உடலில் செலுத்திக் கொண்டவர்களுக்கு லேசான கோவிட் அறிகுறிகளும், பக்க விளைவுகளும் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இருவேறு தடுப்பு மருந்து டோஸ்களை எடுத்து கொண்டவர்களுக்கு குளிர், தலைவலி, தசை வலி போன்ற பிரச்னைகள் அடிக்கடி எழுந்துள்ளன. வெவ்வேறு தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொண்டதால் உண்டான பாதகமான விளைவுகள் குறைந்த நேரமே இருந்தன.
 
"இது உண்மையில் கவலைத்தரும் கண்டுபிடிப்புகள், மேலும் இதை நாங்கள் எதிர்பார்த்திருக்கவும் இல்லை." என ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசி குழுவின் பேராசிரியர்  மாத்யூ ஸ்னேப் தெரிவித்துள்ளார்.
 
`தி காம் கோவ்` ஆய்வு என்று அழைக்கப்படும் இந்த ஆய்வு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புதிய கொரோனா திரிபுகளுக்கு  எதிராக சிறந்த பாதுகாப்பு தருகிறதா என்று பார்ப்பதற்கும் விநியோகம் தடைப்படும் நெருக்கடியை சமாளிக்கவும் முதல் டோஸில் ஒரு தடுப்பூசியும், இரண்டாம் டோஸில் வேறொரு தடுப்பூசியும் வழங்கும் இந்த ஆய்வு தொடங்கப்பட்டது.

கனடாவின் ஆண்டாரியோ மற்றும் க்யூபெக் போன்ற மாகாணங்கள், ஆக்ஸ்ஃபோர்ட் - ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசிகளின் வரத்து குறித்தும் அரிய ரத்த உறைவுகள் ஏற்படுவதாலும் எதிர்காலத்தில் தடுப்பு மருந்துகளை கலந்து செலுத்தப் போவதாக தெரிவித்திருந்தன.
 
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் 830 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் 50 வயதுக்கும் மேல். இந்த ஆய்வின் முழு விவரம் ஜூன் மாதம் வெளியாகும்.
 
ஆனால் ஆரம்பக் கட்ட தகவல்கள் மருத்துவ சஞ்சீகையான லான்செட்டில் வெளியாகியுள்ளது.
 
இரண்டு ஆஸ்ட்ராசெனிகா தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட 10 தன்னார்வலர்களில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. ஆனால் ஒரு டோஸ் ஆஸ்ட்ராசெனீகா மற்றும் ஒரு டோஸ் ஃபைசர் தடுப்பு மருந்து என கலவையாக எடுத்துக் கொண்டவர்களில் 34 சதவீதம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
 
"இதே வித்தியாசங்கள் குளிர், மந்தநிலை, தலைவலி, தசை வலி மற்றும் உடல் சோர்வு போன்ற அறிகுறிகளுக்கும் பொருந்தும்" என்கிறார் பேராசிரியார் ஸ்னேப். இவர் இந்த ஆய்வின் தலைமை ஆய்வாளர்.
 
"இந்த ஆய்வில் ஒன்று மட்டும் புரிகிறது. இம்மாதிரி கலவையான தடுப்பு மருந்தை ஒரே நாளில் ஒரு வார்டில் இருக்கும் அனைத்து செவிலியர்களுக்கும் செலுத்த  நினைக்கமாட்டீர்கள், ஏனென்றால் அடுத்தநாள் அதிகம் பேர் விடுமுறையில் இருப்பர்" என்றார் அவர்.
 
பக்கவிளைவுகள் ஏற்படும் சதவீதம் அதிமாக இருப்பதை அவர் இவ்வாறு சுட்டி காட்டுகிறார்.
 
ஏப்ரல் மாதம் இந்த ஆய்வில் மேலும் 1,050 தன்னார்வலர்கள் இணைந்து, மாடர்னா மற்றும் நோவாக்ஸ் தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டு சோதனைக்கு  உள்ளாகினர்.