1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (10:58 IST)

இந்திய ஜனநாயகம், அரசியல் பற்றி தேர்தல் தோல்வி புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன?

கடந்த ஆறு தசாப்தங்களில், 2,751 அரசியல் கட்சிகள் இந்தியாவில் நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளன.
 
நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் எண்ணிக்கை 1962-ஆம் ஆண்டு 29-இல் இருந்து 2019-ஆம் ஆண்டு 669ஆக உயர்ந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குச் சாவடிகளில் கிட்டத்தட்ட நூறு கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளித்தனர். கட்சிகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 2,200% உயர்வு ஏற்பட்டுள்ளது.
 
ஆனால் பொதுத் தேர்தலில் குறைந்தபட்சம் ஓர் இடத்தையாவது வெல்ல முடிந்த கட்சிகளின் எண்ணிக்கை வெறும் 71% மட்டுமே அதிகரித்துள்ளது. அதாவது 1962ல் 21ல் இருந்து 2019 ல் 36ஆக அதிகரித்திருக்கிறது.
 
இப்போது இதைக் கருத்தில் கொள்ளுங்கள். 1962 முதல் நடைபெற்ற அனைத்து 15 பொதுத் தேர்தல்களிலும் போட்டியிட்ட கட்சிகளின் எண்ணிக்கை ஆறு மட்டுமே. இருபத்தைந்து கட்சிகள் குறைந்தது 10 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளன. அவற்றில் மூன்றில் ஒரு பகுதி கட்சிகள் அதே 10 தேர்தல்களில் போட்டியிட்டிருக்கின்றன.
 
அசோகா பல்கலைக்கழகத்தின் அரசியல் தரவுகளுக்கான திரிவேதி மையம் (TCPD) தொகுத்த இந்திய அரசியல் கட்சிகள் என்ற புதிய தரவுத்தளத்தில் கிடைக்கும் சில வியக்கவைக்கும் புள்ளிவிவரங்கள் இவை.
 
உலகின் ஆகப்பெரிய ஜனநாயகம் என்று அழைக்கப்படும் இந்தியாவில் ஜனநாயகப் பங்கேற்புக்கான தீவிர வேட்கை இருப்பதையை இந்த எண்கள் சுட்டிக் காட்டுகின்றன.
 
ஆனால் கூர்ந்து கவனித்தால் வேறு சில சுவையான அம்சங்கள் தென்படக்கூடும்.
 
"இந்த பல கட்சிகளில் பெரும்பாலானவை உண்மையில் இரண்டு அல்லது மூன்று நபர்களால் ஆனவை. சில கட்சிகள் தனிநபர் கட்சிகள். மேலும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் போட்டியிடாத பல கட்சிகள் உள்ளன" என்கிறார் டிசிபிடியின் இணை இயக்குநர் கில்லஸ் வெர்னியர்ஸ்.
 
பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 91% கட்சிகள், அதாவது 1406 கட்சிகள் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
 
இந்தக் கட்சிகள் அனைத்தும் இதுவரை 9,809 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. அனைவரும் தோற்றுப் போயினர்.
 
மொத்தம் 41 கட்சிகள் குறைந்தது ஐந்து தேர்தல்களில் போட்டியிட்டு ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
 
ஒன்பது பொதுத் தேர்தல்கள் மற்றும் ஐந்து மாநிலங்களில் 26 தேர்தல்களில் 100-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்தி, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத அம்ரா பங்காலி என்ற கட்சி அத்தகைய ஓர் உதாரணம்.
மற்றொரு கட்சி, ஷோஷித் சமாஜ் தளம். உத்தர பிரதேசம், பிகார் என பல மாநிலங்களில் 22 சட்டப் பேரவைத் தேர்தல்களில் 353 வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. இவர்களில் மூன்று பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
 
இந்தியாவில் ஏராளமான சுயேச்சை வேட்பாளர்களும் களமிறங்குகிறார்கள். கட்சிகளுடன் இவர்களுக்குத் தொடர்பு இல்லை. ஆனால் இவர்களில் சொற்ப எண்ணிக்கையிலானவர்களே வெல்கிறார்கள்.
 
1962 மற்றும் 2019 க்கு இடையில், பொதுத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 622% உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் வெற்றி பெறும் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை உண்மையில் 80% குறைந்திருக்கிறது.
 
2019 நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 3,460 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் நான்கு பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். தோல்வியுற்ற வேட்பாளர்களில் ஒருவர் 75 வயதான விஜயபிரகாஷ் கொண்டேகர். அது அவருக்கு 25-ஆவது தேர்தல் தோல்வி.
 
"உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் கட்சி அரசியல் மட்டுமே ஒரே வழி அல்ல என்பதை நான் மக்களுக்குக் காட்ட விரும்புகிறேன்" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
அரசியல் கட்சிகளின் அபார அதிகரிப்பு என்பது, இந்தியாவில் அரசியலில் சேர ஊக்கம் அதிகரித்திருப்பதுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
"தேர்தலில் நிற்பதன் மூலம் ஒரு வாய்ப்பைப் பெறுவது இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அம்சமாகும். பலர் அதை ஓர் உரிமையாகவும் பார்க்கிறார்கள். தேர்தலில் போட்டியிடுவது போட்டியாளரின் பிம்பத்தையும் சமூக அந்தஸ்தையும் அதிகரிக்க உதவுகிறது" என்று பேராசிரியர் வெர்னியர்ஸ் கூறுகிறார்.
 
"கட்சிகள் அரசியலின் முக்கிய இடத்தை ஆக்கிரமித்துள்ளன. இந்தியாவில் மக்கள் சமூகம், அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையே மிகக் குறைவான தொடர்பே உள்ளது. மாற்றத்தை கொண்டு வர வேண்டுமானால் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்"
 
அரசியல் கட்சிகள் பணத்தையும் பதுக்கி வைக்கின்றன. ஒன்று, அவர்கள் வருமான வரியிலிருந்து விலக்கு பெறுகிறார்கள். இரண்டாவதாக, நிதி பெறுவதற்கான வழிமுறையாக உள்ள சர்ச்சைக்குரிய தேர்தல் பத்திரம், மறைமுக நன்கொடையாளர்கள், பழைய மற்றும் புதிய கட்சிகளுக்கு பணத்தை வழங்குவதற்கு உதவுகிறது.
 
தேசிய அளவிலான அல்லது மாநில தேர்தல்களில் குறைந்தது ஒரு சதவிகித வாக்குகளைப் பெற்ற பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே அத்தகைய நன்கொடைகளுக்கு தகுதியுடையவை.
 
2019-ஆம் ஆண்டு ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்களை வாங்கும் நன்கொடையாளர்கள் பற்றிய விவரங்களை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
 
69 "பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகள்" தேர்தல் ஆணையத்துக்கு நன்கொடை தொடர்பான விவரங்களைச் சமர்ப்பித்தன என்கிறார் ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பின் இணை நிறுவனர் ஜக்தீப் சோக்கர்.
 
ஆனால் தேர்தல் பத்திரங்களைப் பெறுவதற்கான தகுதியை மதிப்பிடுவதற்கான வாக்குப் பகிர்வு விவரங்கள் 43 கட்சிகளிடம் மட்டுமே இருந்தன. அந்த 43 கட்சிகளில் ஒன்று மட்டுமே நன்கொடை பெற தகுதியானது. பல கட்சிகள் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை.
 
"தேர்தல் பத்திரங்கள் நன்கொடைகள் மூலமாக பணத்தை மோசடி செய்வதை எளிதாக்கியுள்ளன" என்று சோக்கர் கூறுகிறார். இந்தியாவின் தீவிர ஜனநாயகத்தில் இது நம்பிக்கை தரக்கூடியது அல்ல.