வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 20 நவம்பர் 2021 (09:21 IST)

வேளாண் சட்டங்கள் விஷயத்தில் மோதி அரசின் பின்வாங்கல் சாணக்கிய தந்திரமா?

மேகாலயா ஆளுநர் சத்ய பால் மல்லிக் அக்டோபர் 20 ஆம் தேதி பிபிசிக்கு அளித்த பேட்டியில், "வேளாண் சட்டங்கள் தொடர்பான நிலைப்பாட்டை மத்திய அரசுதான் விட்டுக்கொடுக்க வேண்டும். விவசாயிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்" என்று கூறினார்.
 
ஒரு மாதம் கழித்து அவரது வார்த்தைகள் உண்மை என நிரூபணமாகிவிட்டது. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற மோதி அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ள நேரம் குறித்து இப்போது அதிகம் விவாதிக்கப்படுகிறது.
 
நவம்ர் 29ஆம் தேதி இந்திய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்க உள்ளது.
 
நவம்பர் 26ம் தேதி விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவடைவதையொட்டி, போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக விவசாயிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
 
இந்தியாவில் ஐந்து மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் மிக முக்கியமானது உத்திரபிரதேசம். நேற்றுதான் அமித் ஷாவுக்கு மேற்கு உத்தரபிரதேசத்தின் தலைமைபொறுப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் குருநானக் ஜெயந்தியான இன்று பிரதமர் மோதி இந்த அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். சமூக ஊடகங்களில் இது 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' என ட்ரெண்டிங்கில் உள்ளது. பஞ்சாப் தேர்தல் கோணமும் இப்போது இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
 
முடிவின் பின்னணியில் பஞ்சாப் கோணம்?
 
"மோதி அரசின் இந்த முடிவுக்கு, உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் இரண்டுமே காரணம். உத்திரபிரதேச தேர்தலில் இதன் தாக்கம் ஒரு முக்கிய காரணம். ஆனால் பல கோணங்களில் பஞ்சாப் மாநிலமும் பாஜகவுக்கு முக்கியமானது,"என்று பாரதிய ஜனதா கட்சி குறித்த செய்திகளை பல ஆண்டுகளாக எழுதிவரும் ' தி இந்து' ஆங்கில நாளேட்டின் பத்திரிக்கையாளர் நிஸ்துலா ஹெப்பர் கூறுகிறார்.
 
"பஞ்சாப் இந்தியாவின் எல்லையோர மாநிலம். பல காலிஸ்தானி குழுக்கள் திடீரென செயல்பட ஆரம்பித்துள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், தேர்தலுக்கு முன் அந்தக்குழுக்கள் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யக்கூடும்," என்று நிஸ்துலா, பஞ்சாப் கோணத்தை விரிவாக விளக்கினார்.
பாஜகவும், அகாலி தளமும் கூட்டணி அமைத்தபோது, சீக்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியும் (அகாலிதளம்), இந்துக்களுடன் தன்னை இணைத்துப்பார்க்கும் கட்சியும் (பாஜக) இணைந்து தேர்தலை சந்தித்தால், மாநிலம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு அடிப்படையில் சிறப்பாக இருக்கும் என்று இருகட்சிகளின் உயர்மட்ட தலைவர்களான லால் கிருஷ்ண அத்வானியும், பிரகாஷ் சிங் பாதலும் கருதினர். இதன் காரணமாக இந்த கூட்டணி பல ஆண்டுகள் நீடித்தது.
 
"வருங்கால கண்ணோட்டத்தில் பாஜகவிற்கு பஞ்சாப் மிகவும் முக்கியமானது. 80களின் விஷயங்கள் அங்கு மீண்டும் தொடங்குவதை யாரும் விரும்பவில்லை. இதன் காரணமாகவும் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது,"என்று அவர் குறிப்பிட்டார்.
 
புதிய விவசாயச் சட்டங்களால் கடந்த ஆண்டு அகாலிதளம் பாஜகவிடமிருந்து விலகி, தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டுப்பிரிந்தது. அகாலி தளம் பா.ஜ.க.வின் பழம்பெரும் கூட்டாளியாக இருந்தது.
 
ஆனால், ஓராண்டுக்குப் பிறகு திடீரென மோதி அரசு பஞ்சாப் மக்களையும், தன் பழமையான கூட்டாளி அகாலிதளத்தையும் நினைவு கூர்ந்தது ஏன்?
 
ஆர்.எஸ். குமன், சண்டிகரில் உள்ள கிராமப்புற மற்றும் தொழில்துறை மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராக உள்ளார். விவசாயம், பொருளாதாரம் மற்றும் பஞ்சாப் அரசியல் குறித்து எல்லா விஷயங்களையும் நன்கு அறிந்தவர் அவர்.
"மிகவும் தாமதமாக எடுக்கப்பட்டாலும், இது நல்ல முடிவு. 700 விவசாயிகளை பலிவாங்கிய பின் இது செய்யப்பட்டுள்ளது. புதிய விவசாயச் சட்டத்தை மோதி அரசு தானாக ரத்து செய்யவில்லை, விவசாயிகளின் கோபத்தால் அதை செய்ய வேண்டியிருந்தது. உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் தேர்தல் அருகில் உள்ளது," என பேராசிரியர் ஆர்.எஸ்.குமன் தெரிவித்தார்.
 
"இந்த முடிவிற்குப் பிறகும் பஞ்சாபில் பாஜகவுக்கு எதுவும் கிடைக்காது. அகாலியுடன் கூட்டணி வைத்திருந்தால் அரசியல் ரீதியாக ஆதாயம் பெற்றிருக்கலாம். ஆனால் பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங்குடன் கூட்டு சேர்ந்தாலும் கூட பாஜகவுக்கு எந்த நன்மையும் இருக்காது," என்கிறார் அவர்.
 
கேப்டன் அம்ரிந்தர் சிங், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துகொள்வது குறித்து சுட்டிக்காட்டியதுடன், விவசாய சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 
மோதி அரசின் சமீபத்திய முடிவுக்குப் பிறகு, முதலில் கருத்துவெளியிட்ட அவர், இந்த முடிவை வரவேற்றுள்ளார்.
 
மோதி அரசின் இந்த முடிவுக்குப் பிறகு அகாலிதளம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணையுமா என்பது இன்னும் தெரியவில்லை.
 
"இந்த முடிவு பாஜகவுக்கு பெரிய பலனைத் தராவிட்டாலும்கூட, பஞ்சாபில் காங்கிரசுக்குப் பலத்த பின்னடைவு ஏற்படலாம். அகாலிதளம், கேப்டன் அம்ரிந்தர் சிங், பாஜக, மூவரும் சேர்ந்தால் அதன் மிகப்பெரிய பாதிப்பு காங்கிரசுக்கு தான் ஏற்படும்," என் 'வளரும் சமூகங்களின் ஆய்வு மையம் CSDS உடன் தொடர்புடைய பேராசிரியர் சஞ்சய் குமார் கூறினார்.
பஞ்சாபில் பாஜக 7-8 சதவிகித வாக்குகளைப் பெற்றது என்று சிஎஸ்டிஎஸ் மதிப்பீடு சுட்டிக்காட்டுகிறது. அகாலி- பாஜக கூட்டணியின் வாக்கு சதவீதம் சுமார் 35 ஆக இருந்தது.
 
மோதி அரசு எந்தெந்த முடிவுகளில் பின்வாங்கியது?
 
மோதி அரசு தனது முடிவுகளில் இருந்து பின்வாங்காது என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த காலங்களில் அரசு அடிபணிந்த சில உதாரணங்களும் உள்ளன.
 
முன்னதாக, விவசாயம் தொடர்பான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியது. அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து, மத்திய அரசை 'சூட்-பூட் கி சர்கார்' (பணக்காரர்களின் அரசு) என்று அழைத்தார்.
 
ஜிஎஸ்டியில் வருவாய் ஈட்டப்பட்ட பிறகும், மாநிலங்களுக்கு பணம் அளிப்பது குறித்த தனது முந்தைய நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக்கொண்டது.
 
இடைத்தேர்தலில் பல இடங்களில் தோல்வியடைந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலையில் நிவாரணம் அளித்திருப்பது மோதி அரசின் அடிபணிதலாக பார்க்கப்படுகிறது.
 
'தேர்தலில் தோல்வி' என்பது பா.ஜ.க.வுக்கு வலி என்று அரசியலை நன்கு புரிந்து கொண்டவர்கள் நம்புகிறார்கள்.
 
தனது எந்த முடிவுகள் தேர்தல் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம் என்று பாஜக கருதுகிறதோ, அவற்றை அக்கட்சி மறுபரிசீலனை செய்யும் அல்லது சமரசம் செய்து கொள்ளும்.
 
முன்னதாக 48 மக்களவை இடங்களைக்கொண்ட மகராஷ்ட்ராவில் ஆட்சி அமைக்க அக்கட்சியால் இயலவில்லை.
 
பின்னர் 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்திலும் அக்கட்சி தோல்வியடைந்தது.
 
மேலும் இந்த மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவைத்தேர்தல் முடிவுகள் பாஜக நினைத்ததுப்போல அமையவில்லை என்றால், 2024 மக்களவைத் தேர்தலையும் அது பாதிக்கலாம். இந்த மூன்று மாநிலங்களில் மொத்தம் 170 மக்களவை இடங்கள் உள்ளன.
 
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் முடிவின் பின்னால் இந்தக் கணக்கிடலும் உள்ளது என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர்.
 
உத்தரபிரதேச தேர்தல் கோணம்
 
முடிவு வெளியான ஒரு நாள் முன்னதாக, பாஜக, உத்திரபிரதேச மாநிலத்தை பல பகுதிகளாகப் பிரித்து மேற்கு உத்திரப் பிரதேசத்தின் பொறுப்பை அமித் ஷாவுக்கு அளித்தது. மேற்கு உத்தரப் பிரதேசம் பாஜகவுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைத் இது தெளிவாகக் காட்டுகிறது.
 
இந்த முடிவு உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுடன் தொடர்புடையது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சுனிதா ஆரோன்.
 
உத்திரபிரதேசத்தில் 100 தொகுதிகளில் விவசாயிகள் இயக்கத்தின் தாக்கம் இருப்பதாக சில ஆய்வாளர்கள் கூறினர். அதே நேரத்தில், சில வல்லுநர்கள் மேற்கு உத்தரபிரதேசத்தில் கரும்பு விவசாயிகளின் பிரச்சனைகள், புதிய விவசாய சட்டம் தொடர்பானது அல்ல என்று நம்புகிறார்கள்.
 
விவசாயிகளின் இயக்கம் தேர்தலை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பது பற்றிய உள்ளீடுகள் பாஜகவுக்கு கிடைத்திருக்க வேண்டும் என்பதற்கு மோதி அரசின் இன்றைய முடிவு ஒரு ஆதாரமாக உள்ளது.
 
"ஜெயந்த் செளத்ரிக்கு மேற்கு உத்தரபிரதேச பிராந்தியத்தில் நல்ல ஆதரவு கிடைத்தது. இதன் காரணமாக சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவுடன் RLD கூட்டணி வைத்திருந்தால், சமாஜ்வாதி கட்சிக்கு பலன் கிடைத்திருக்கும்,"என்று சுனிதா ஆரோன் மேலும் தெரிவித்தார்.
 
இருப்பினும் சமாஜ்வாதி கட்சியுடன் ஆர்எல்டியின் முறையான கூட்டணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
 
மோதி அரசின் இந்த முடிவுக்குப் பிறகு, அதன் அடுத்த நிலைப்பாடு என்ன என்பதைப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும்.
 
இந்த முடிவால் உத்தரபிரதேசத்தில் என்ன ஆதாயம்
 
மேற்கு உத்தரபிரதேசத்தில் முஸ்லிம்கள் 32 சதவீதம், தலித்துகள் சுமார் 18 சதவீதம், ஜாட்கள் 12 சதவீதம், ஓபிசி 30 சதவீதம் உள்ளதாக CSDS தரவுகள் தெரிவிக்கின்றன. இதனுடன், இப்பகுதியில் சுமார் 70 சதவீத மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இவர்களில் முஸ்லிம்களை பாஜக ஒருபோதும் தனது வாக்கு வங்கியாக கருதுவதில்லை. தலித்துகள் மற்றும் ஓபிசிகளை ஒன்றிணைக்க பாஜக ஏற்கனவே பல கூட்டங்களை நடத்தி வருகிறது.
 
சமீபத்தில் உத்தரபிரதேச பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங், தலித்துகள் வீட்டில் டீ அருந்தியது, செய்திகளில் இடம்பிடித்தது.
 
இப்போது வேளாண் சட்டம் திரும்பப் பெறப்பட்டதால், கோபத்தில் இருக்கும் ஜாட் பிரிவினரின் 12 சதவீத வாக்குகளும் பாஜகவுக்கு கிடைத்தால், அது அக்கட்சிக்கு நன்மை அளிக்கும்.
 
நாடாளுமன்றத்தில் சட்டம் ரத்து செய்யப்பட்ட பின்னரே போராட்டத்தை கைவிடப்போவதாக பாரத் கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.
 
மேற்கு உத்தரபிரதேசத்துடன் தொடர்புடைய மற்றும் கிராமப்புற இந்தியா தொடர்பான இணையதளத்தை நடத்தி வரும் பத்திரிகையாளர் ஹர்வீர் சிங், "தேர்தலுக்கு முன் தெருக்களில் எந்த போராட்டமும் இல்லை என்றால், பாஜகவுக்கு ஓரளவு பலன் கிடைக்கும். விவசாயிகளின் கோபம் குறையும். ஆனால் அது முழுவதுமாக போய்விடும் என்று நான் நினைக்கவில்லை. விவசாயிகளுக்கு கரும்பு விலை, யூரியா மற்றும் உரங்களின் விலை உயர்வு, மின்சார விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலையேற்றம் என வேறு பல பிரச்சனைகள் உள்ளன," என்று குறிப்பிட்டார்.
 
மேற்கு உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு, எத்தனை இடங்கள் குறையும் என்று கருதப்பட்டதோ, இந்த முடிவுக்குப்பிறகு ஒரு வேளை அவ்வளவு குறையாது,"என்று அவர் கூறுகிறார்.
 
"தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. பா.ஜ.கவுக்கு தனது தொண்டர் பட்டாளம் உள்ளது. இந்த முடிவு தற்போது, பா.ஜ.கவுக்கு சாதகமாக உள்ளது. முன்னதாக, பூர்வாஞ்சலில் பா.ஜ.க., கவனம் செலுத்தி வந்தது. மேற்கு உத்தரபிரதேசத்தில் ஏற்படக்கூடிய நஷ்டத்தை அங்கிருந்து ஈடுகட்ட முடியும் என்று அது கருதியது. இப்போது பாஜக, வீடு வீடாகச் சென்று தனது விளக்கத்தை விவசாயிகளிடம் எவ்வளவு தூரத்திற்கு கொண்டு சேர்க்கமுடியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,"என்று கூறுகிறார் சுனிதா ஆரோன்.