செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 8 டிசம்பர் 2021 (11:06 IST)

'போர் மூண்டால் மூளட்டும்': இந்திரா காந்தியின் வரலாற்று நடவடிக்கை!

1971ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி, பாகிஸ்தானின் கடல் பகுதிக்குச் சென்று அந்நாட்டில் இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியது. அந்த நடவடிக்கையே பின்னாளில் இந்திய கடற்படை தினம் ஆக கொண்டாடப்பட காரணமானது. ஆனால், அந்த தாக்குதல் நடவடிக்கைக்கு முந்தைய நிகழ்வுகள் அவ்வளவு சாதாரணமாக இருக்கவில்லை.
 
போர் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு 1971 அக்டோபரில், கடற்படைத் தலைவர் அட்மிரல் எஸ்.எம்.நந்தா, பிரதமர் இந்திரா காந்தியை சந்திக்கச் சென்றார். கடற்படையின் தயார்நிலை பற்றிச் சொன்னபின், கராச்சியை கடற்படை தாக்கினால் இதனால் அரசுக்கு அரசியல் ரீதியிலான ஆட்சேபம் இருக்குமா என்று காந்தியிடம் கேட்டார்.
 
"ஆம்" அல்லது "இல்லை" என்று சொல்வதற்கு பதிலாக, "நீங்கள் ஏன் இப்படி கேட்கிறீர்கள்" என்ற கேள்வியை இந்திரா காந்தி கேட்டார். அதற்கு பதிலளித்த நந்தா, "1965ஆம் ஆண்டில் கடற்படையிடம், குறிப்பாக இந்திய கடல் எல்லைக்கு வெளியே எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கூறப்பட்டதால், அதன் காரணமாக பல பிரச்சனைகள் ஏற்பட்டன" என்று அவர் தெரிவித்தார்.
 
இந்திரா காந்தி சிறிது நேரம் யோசித்து, 'அட்மிரல்... 'இஃப் தேர் இஸ் எ வார், தேர் இஸ் எ வார்' அதாவது 'போர் மூண்டால் அது மூளட்டும்' என்றார்.
 
அட்மிரல் நந்தா அவருக்கு நன்றி கூறி, 'மேடம்... எனக்கு பதில் கிடைத்துவிட்டது' என்றார்.
 
சீல் செய்யப்பட்ட உறையில் தாக்குதல் உத்தரவு
கராச்சி மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. 1971 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி எல்லா கப்பல்களும் கராச்சியைத் தாக்குமாறு, முத்திரையிடப்பட்ட உறைகளில் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
 
கடற்படையின் மேற்குபிரிவு, டிசம்பர் 2 அன்று மும்பையிலிருந்து பயணித்தது. போர் தொடங்கிய பின்னரே சீல் வைக்கப்பட்ட உறை திறக்கப்பட வேண்டும் என்று அவர்களிடம் கூறப்பட்டது.
 
கடற்படை கப்பல்கள், பகல் நேரத்தில் கராச்சியில் இருந்து 250 கி.மீ சுற்றளவு பகுதிக்குள் இருக்கும் என்றும் மாலை நேரத்தில் 150 கி.மீ தூரத்திற்கு முன்னேறும் என்றும் திட்டமிடப்பட்டது.
 
இருட்டில் தாக்குதல் நடத்தியபிறகு விரைவாக பயணித்து விடியலுக்கு முன்பு கராச்சியில் இருந்து 150 கி.மீ தூரத்திற்கு அவைகள் சென்றுவிடவேண்டும். இதனால் பாகிஸ்தான் குண்டுவீச்சிலிருந்து அவைகள் தப்பமுடியும்.
 
தாக்குதலை,ரஷ்யாவின் ஓஸா வகுப்பு ஏவுகணை படகு மூலம் நடத்தவும் திட்டம் தீட்டப்பட்டது. அவைகளை தாமாக இயக்காமல் நைலான் கயிறுகள் மூலம் அவற்றை இழுத்துச்செல்லவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
 
ஆபரேஷன் ட்ரைடெண்டின் கீழ் முதல் தாக்குதலை நிபட், நிர்கட் மற்றும் வீர் ஏவுகணை படகுகள் மேற்கொண்டன. ஒவ்வொரு ஏவுகணை படகிலும் நான்கு ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருந்தன. படைத் தளபதி பப்ரு யாதவ் , நிபட் படகில் இருந்தார்.
 
அம்புக்குறி வடிவத்தை உருவாக்கிச்சென்ற படகு அணியின் முன்னணியில் நிபட் இருந்தது. அதன் பின்னால் இடது புறம் நிர்கட்டும், வலது முனையில் வீர் படகும் அணிவகுத்து சென்றது. அவற்றுக்குப் பின்னால் ஐ.என்.எஸ் கில்டன் போர் கப்பல் சென்றது.
 
கைபர் மூழ்கியது
கராச்சியில் இருந்து 40 கி.மீ தூரத்தில் இருந்த யாதவ் தனது ரேடாரில் இயக்கத்தை உணர்ந்தார். ஒரு பாகிஸ்தான் போர் கப்பல் தம்மை நோக்கி வருவதைக் கண்டார். அப்போது இரவு 10:40 மணி. தனது திசையை மாற்றி பாகிஸ்தான் கப்பலைத் தாக்கும்படி நிர்கட் படகிற்கு யாதவ் உத்தரவிட்டார்.
 
பாகிஸ்தானின் அழிக்கும் வல்லமை கொண்ட பி.என்.எஸ் கைபர் கப்பல் மீது 20 கி.மீ தூரத்தில் இருந்து ஏவுகணையை நிர்கட் ஏவியது. தங்களை நோக்கி வரும் ஏவுகணை ஒரு போர் விமானம் என்று கைபரின் மாலுமிகள் நினைத்தனர். தங்கள் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளால் ஏவுகணையை குறிவைக்க முயன்றனர். ஆனால் ஏவுகணையின் இலக்காக கைபர் மாறுவதைத் தடுக்க முடியவில்லை.
 
அப்போது தளபதி யாதவ், 17 கி.மீ தூரத்திலிருந்து கைபர் மீது மற்றொரு ஏவுகணையை செலுத்த உத்தரவிட்டார். மேலும் போர்கப்பல் கில்டனை நிர்கட்டிற்கு அருகில் வருமாறு உத்தரவிட்டார்.
 
இரண்டாவது ஏவுகணை தாக்கியதும் கைபரின் வேகம் பூஜ்ஜியமாக குறைந்தது. கப்பல் தீப்பிடித்தது. அதிலிருந்து அடர்ந்த புகை வெளியேற ஆரம்பித்தது. கைபர் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கியது. அந்த நேரத்தில் அது கராச்சியில் இருந்து 35 கடல் மைல் தொலைவில் இருந்தது. நேரம் இரவு 11 மணி 20 நிமிடங்கள்.
 
மறுபுறம், நிபட் ஏவுகணை படகு முதலில் வீனஸ் சேலஞ்சர் மீது ஒரு ஏவுகணையையும் பின்னர் ஷாஜகான் மீது இரண்டாவது ஏவுகணையையும் செலுத்தியது. வீனஸ் சேலஞ்சர் உடனடியாக மூழ்கிவிட்டது. ஷாஜகான் சேதமடைந்தது. மூன்றாவது ஏவுகணை , கிமாரியின் எண்ணெய் டேங்கர்களை குறிவைத்தது. இதன் காரணமாக இரண்டு டேங்கர்களில் தீ பிடித்தது.
 
இதற்கிடையில், பாகிஸ்தான் மைன் ஸ்வீப்பர் (கடல் கண்ணிவெடிகளை அப்புறப்படுத்தும் கப்பல்) பி.என்.எஸ் முஹாபிஃஸ் மீது, வீர் படகு ஏகணையை ஏவியது. அது தீப்பிடித்து பின்னர் மிக விரைவாக மூழ்கிவிட்டது.
 
இந்த தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் கடற்படை எச்சரிக்கையாகி, கராச்சியை இரவு பகலாக சிறிய விமானங்கள் மூலம் கண்காணிக்கத் தொடங்கியது.
 
டிசம்பர் 6 ஆம் தேதி இந்திய கடற்படை தலைமை அலுவலகம், பாகிஸ்தான் கடற்படையின் ஒரு செய்தியை இடை மறித்தது.
 
பாகிஸ்தான் விமானப்படை, தனது பி.என்.எஸ் ஃஜூல்ஃபிகார் கப்பலை, இந்திய போர்கப்பல் என்று நினைத்து அதன் மீது குண்டிவீசியதாக அதிலிருந்து தெரியவந்தது.
 
மேற்கு கடற்படையின் ஃப்ளாக் அதிகாரி கமாண்டிங் அட்மிரல் குருவில்லா, கராச்சி மீது இரண்டாவது ஏவுகணை படகுத் தாக்குதலைத் திட்டமிட்டார், அதற்கு "ஆபரேஷன் பைதான்" என்று பெயரிடப்பட்டது.
 
கராச்சியைத் தாக்கியது'விநாஷ்'
இந்த முறை ஒரே ஏவுகணை படகு விநாஷ், இரண்டு அதிவிரைவு சிறியபோர் கப்பல்கள் த்ரிஷுல் மற்றும் தல்வாருடன் சென்றது. 1971 டிசம்பர் 8 ஆம் தேதி இரவு 8:45 மணி. ஐ.என்.எஸ் விநாஷில் இருந்த கமாண்டிங் அதிகாரி விஜய் ஜெய்ரத்தின் தலைமையில், 30 கடற்படை வீரர்கள் கராச்சி மீது இரண்டாவது தாக்குதலுக்கு தயாராயினர்.
 
அப்போது படகின் மின்சாரம் போய்விட்டது. கட்டுப்பாடு தானியங்கி முறைக்கு மாறியது. ஆனாலும் பேட்டரி மூலம் ஏவுகணையை செலுத்த முடியும், ஆனால் இலக்கை ரேடார் மூலம் பார்க்க இயலாது. அந்த நிலையில் சுமார் 11 மணியளவில் படகின் மின்சாரம் மீண்டும் திரும்பியது. ஜெய்ரத் ரேடாரை பார்த்தபோது, ஒரு கப்பல் மெதுவாக கராச்சி துறைமுகத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்ததை கண்டார். அவர் கப்பலின் நிலையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது பார்வை, கிமாரி எண்ணெய் கிடங்கை நோக்கித் திரும்பியது.
 
ஏவுகணையை ஆய்வுசெய்தபிறகு அவர் அதன் வரம்பை கைகளால் இயக்கும்படியாகவும், அதிகபட்சமாகவும் அமைத்து ஏவுகணையை செலுத்தினார். ஏவுகணை எண்ணெய் டேங்கர்களைத் தாக்கியவுடன் பேரழிவு ஏற்பட்டது.
 
ஜெய்ரத் ஒரு கப்பல் பிரிவை மற்றொரு ஏவுகணை மூலம் குறிவைத்தார். அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பிரிட்டிஷ் கப்பல் ஹர்மடவுனில் தீப்பிடித்தது மற்றும் பனாமாவின் கல்ஃப் ஸ்டார் கப்பல் மூழ்கியது.
 
நான்காவது ஏவுகணை, பி.என்.எஸ் டாக்கா மீது ஏவப்பட்டது. ஆனால் அதன் தளபதி தனது திறமை மற்றும் புத்திசாலித்தனத்தால் கப்பலை காப்பாற்றினார்.
 
கராச்சி எண்ணெய் டேங்கர்களில் தீ
ஆனால் கிமாரி எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீப்பிழம்புகளை 60 கி.மீ தூரத்தில் இருந்தும் காண முடிந்தது. ஆபரேஷன் முடிந்தவுடன், ஜெய்ரத் ஒரு செய்தியை அனுப்பினார், ' நான்கு புறாக்களும் கூட்டில் மகிழ்ச்சியாக உள்ளன.'
 
'எஃப் 15 ல் இருந்து விநாஷூக்கு: இன்றுவரை நாங்கள் இப்படிப்பட்ட ஒரு நல்ல தீபாவளியைக் கண்டதில்லை' என்ற பதில் அவருக்கு கிடைத்தது. கராச்சி எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீயை ஏழு பகல்கள் மற்றும் ஏழு இரவுகள் வரை அணைக்க முடியவில்லை.
 
அடுத்த நாள் இந்திய விமானப்படை விமானிகள் கராச்சி மீது குண்டுவீசச் சென்றபோது, "இது ஆசியாவின் மிகப்பெரிய பான் ஃபயர் (கொண்டாட்ட நெருப்பு)" என்று தெரிவித்தனர். கராச்சியில் சூழ்ந்த புகையால் மூன்று நாட்களுக்கு சூரிய ஒளியை காண முடியவில்லை.
 
(2020 டிசம்பரில் வெளியான இந்தக் கட்டுரை கராச்சி தாக்குதல் நடந்த டிசம்பர் 8ஆம் தேதி மறுபகிர்வு செய்யப்படுகிறது.)