புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (12:27 IST)

'வலிமை' சிமென்ட்: இது யாருக்கு போட்டி? 10 தகவல்கள்

கட்டுமானத்துறையில் சிமென்ட் நிறுவனங்களின் ஏகபோகத்தை தவிர்ப்பதாகக் கூறி தமிழ்நாட்டில் மாநில அரசே மலிவு விலையில் 'வலிமை' என்ற பெயரில் புதிய சிமென்ட் விற்பனையை இன்று (நவம்பர் 16) தொடங்கியுள்ளது.
 
இந்த சிமென்ட் அறிமுகத்தால் யாருக்கு என்ன நன்மை? இது பற்றி நீங்கள் அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
 
1. வலிமை சிமென்ட், TANCEM என்ற மாநில பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு சிமென்ட் கழகத்தால் தயாரிக்கப்படுகிறது. வலியதோர் உலகம் செய்வோம் என்ற கருத்துருவை மையமாகக் கொண்டு இந்த சிமென்ட் தயாரிக்கப்படுகிறது. இந்த டேன்செம் நிறுவனம் ஏற்கெனவே அரசு சிமென்ட் என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் விற்கும் சிமென்டை விட குறைவான நிலையில் சிமென்ட் தயாரித்து விற்று வருகிறது.
 
2. திறந்தவெளி சந்தையில் குறைவான விலையில் இந்த சிமென்ட் விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிமென்ட் விலை 4.7 சதவீதம் உயர்ந்தது. நிலக்கரி பற்றாக்குறை, நிலக்கரி இறக்குமதி மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான அதன் போக்குவரத்து செலவினம் காரணமாக சிமென்ட் விலை உயர்ந்ததாக விற்பனை நிறுவனங்கள் கூறின.
 
3. வலிமை சிமென்ட் தயாரிப்பின் திட்டப்படி தொடக்கத்தில் மாதந்தோறும் 30 ஆயிரம் டன் அளவுக்கு சிமென்ட் விற்பனை செய்யப்படும் அவை சந்தை சில்லறை விலையை குறைவான விலைக்கு விற்கப்படும். ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள அரசு சிமென்ட் மாதந்தோறும் வெளிச்சந்தையில் 90 ஆயிரம் டன் சிமென்டை விற்பனை செய்து வருகிறது.
4. சிமென்ட் தயாரிப்புத்துறையில் குறிப்பிட்ட சில தினியார் நிறுவனங்களே உயர்தர தயாரிப்பை விற்பதில் ஏகபோகம் செலுத்தி வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் ஒரு சிமென்ட் மூட்டை ரூ. 470 முதல் ரூ. 490 வரை விற்கப்பட்டது. அரசு தலையிட்ட பிறகு இந்த விலை ரூ. 440 முதல் ரூ. 450 ஆக குறைந்தது.
 
5. தமிழக பொதுத்துறை நிறுவனமான டேன்செம் சிமென்ட் ஆலைகள் அரியலூர் மற்றும் ஆலங்குளத்தில் உள்ளன. அவற்றின் மூலம் கடந்த ஆண்டு மட்டும் 8.13 லட்சம் டன் சிமென்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சிமென்ட் மீதான தேவை அதிகரிப்பதால், தயாரிப்பு அளவை 15 லட்சம் முதல் 17 லட்சம் டன் வரை அதிகரிக்க டேன்செம் திட்டமிட்டுள்ளது.
 
யாரெல்லாம் சிமென்ட் வாங்கலாம்?
 
6. தனி நபர் ஒருவர், அவரது ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கும் மிகாமல் இருந்தால் அவர் தனது புதிய வீடு கட்டுமான பணிக்காக 750 மூட்டைகள் வரை அரசு தயாரிப்பு சிமென்ட் மூட்டைகளை வாங்கலாம். இந்த சிமென்ட் மூட்டைகளை ஆன்லைன் மூலமாக மூட்டை ஒன்றுக்கு ரூ. 216 செலுத்தி வாங்க முடியும்.
 
7. அரசு தயாரிப்பு சிமென்ட் வாங்க வேண்டுமானால், தான் வீடு கட்டுமான பணிக்காக சிமென்ட் மூட்டை வாங்குகிறேன் என்பதை அத்தாட்சி செய்யும் உள்ளூர் கிராம அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளரின் சான்றிதழ் அல்லது கடிதத்தை ஆன்லைன் ஆர்டர் செய்யும்போது பதிவேற்ற வேண்டும்.
8. தமிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா சிமென்ட் என்ற பெயரில் மலிவு விலை சிமென்டை டேன்செம் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வந்தது. இப்போது அதன் நிலை தெளிவற்று உள்ளது.
 
9. அரசு தயாரிப்பு சிமென்ட் மூட்டைகளின் விலை குறைந்து விற்கப்படுவதால், வெளிச்சந்தையில் தனியார் சிமென்ட் நிறுவனங்களும் அவற்றின் விற்பனை விலையை குறைக்கலாம் என்று எதிர்பார்ப்பு உள்ளது.
 
10. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதன் இணையதளத்தில் பதிவு செய்துள்ள தகவல்களின்படி, மாநிலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட 26 அங்கீகாரம் பெற்ற சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.