புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : சனி, 12 ஜூன் 2021 (10:06 IST)

உலக நாடுகளுக்கு தடுப்பூசி - ஜி7 மாநாட்டில் பணக்கார நாடுகள் முக்கிய பேச்சு

கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து பிரிட்டனின் கார்ன்வாலில் உலகத் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் ஜி7 மாநாடு தொடங்கியது.

அந்த சந்திப்பில் "உலகை மீண்டும் சிறப்பாக கட்டி அமைப்போம்" என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உலக நாடுகளின் தலைவர்களிடம் வலியுறுத்தினார்.
 
2008 பொருளாதார நெருக்கடியில் நடைபெற்ற "தவறுகளில்" இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வது முக்கியம் என்றும் சமத்துவமின்மையின் "ஆறா வடுக்களை" சமாளிப்பதும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
கேப்ரிஸ் பே கடற்கரை பகுதியின் கடலோர விடுதியில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, உலகத் தலைவர்கள் பிரிட்டன் ராணியுடன் இரவு உணவு அருந்தினர்.
 
ஜி7 மாநாட்டில் முக்கியமாக கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து பேசப்படுகிறது.
 
முன்னதாக உலகத் தலைவர்கள் ராணியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது பேசிய ராணி, "நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதுபோல காட்டிக் கொள்ள வேண்டுமா?" என்று கேளியாக பேச, அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.
 
உடனடியாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராணியின் கேள்விக்கு "ஆம்" என்று பதிலளித்தார்.
 
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா நாட்டுத் தலைவர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர், பிரிட்டனில் நடைபெறும் இந்த மூன்று நாள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
 
கொரோனா தொற்றுக்கு பிறகு உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் முதல் ஜி7 மாநாடு இது.
 
இந்த மாநாட்டில் ஜரோப்பிய ஆணையத்தின் தலைவர் அர்சலா வான் டெர் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்ல்ஸ் மிக்கெல் ஆகியோரும்  கலந்துகொண்டனர்.
 
மாநாட்டின் முக்கிய வட்ட மேஜை பேச்சுவார்த்தையில் பேசத் தொடங்கிய பிரிட்டன் பிரதமர் ஜான்சன், தற்போது உலகம் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வரும் நிலையில், "சமூகங்கள் இடையே சமத்துவத்தை கொண்டுவந்து", மீண்டும் அதனை "சிறப்பாக கட்டி அமைப்பது" முக்கியம் என்று குறிப்பிட்டார்.
 
மேலும் அவர் கூறுகையில், "2008ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும். அதில் இருந்து அனைத்து சமூகங்களும் சமமாக மீளவில்லை" என்று பிரதமர் ஜான்சன் குறிப்பிட்டார்.
 
உலகில் "விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய குழந்தைகளின்" கல்விக்காக, குறிப்பாக பெண்களின் கல்விக்காக Global Partnership For Education என்ற அமைப்புக்கு 430 பவுண்டுகள் அளிப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
 
கொரோனா தொற்றால் ஏற்பட்ட பெரும் சேதத்திற்கு பிறகு, உலக பொருளாதாரத்தை "அதிக சமத்துவமாக, பாலின பாகுபாடின்றி, பெண் பாலினம் வழியாக கட்டியமைக்க வேண்டும்" என்று உலகத் தலைவர்களிடம் பிரிட்டன் பிரதமர் ஜான்சன் தெரிவித்தார்.
 
பிரிட்டன் 100 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளுக்கு மேல் ஏழை நாடுகளுக்கு அடுத்த ஆண்டுக்குள் தானமாக வழங்கும் என்று பிரதமர் ஜான்சன் உறுதியளித்தார்.  அதே நேரத்தில் ஆப்பிரிக்க ஒன்றியம் மற்றும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 92 நாடுகளுக்கு அமெரிக்கா 500 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளை வழங்கும் என்று அதிபர் ஜோ பைடன் உறுதியளித்தார்.
 
ஆனால், சில தொண்டு நிறுவனங்களும் பிரசாரக்காரர்களும், பிரிட்டன் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை விமர்சித்துள்ளனர். பிரிட்டனின் திட்டப்படி, இந்தாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் 5 மில்லியன் தடுப்பூசிகளையும், இந்தாண்டு இறுதிக்குள் 25 மில்லியன் தடுப்பூசிகளையும், மீதமுள்ளவை 2022ஆம் ஆண்டில் வழங்கப்படும்  என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது.
 
"பிரிட்டனின் தடுப்பூசி திட்டம் வேகமாக இல்லை. மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதை பிரிட்டன் உடனடியாக தொடங்க வேண்டும்" என வறுமை ஒழிப்பு  பிரச்சாரத்தை ஆதரிக்கும் குழுவின் தலைவர் லிஸ் வாலஸ் கூறினார்.
 
2022ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவர, ஜி7 நாடுகள் பில்லியன் கணக்கான தடுப்பூசிகளை வழங்க ஒப்புக்கொள்வார்கள் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
 
உலகின் 70 சதவீதம் பேருக்கு வரை தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றால், அதற்கு 11 பில்லியன் டோஸ்கள் தேவைப்படும் என்று உலக சுகாதார நிறுவனம்  கணக்கிட்டுள்ளது. 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டால், தொற்று பரவுவது குறையும் என்று கூறப்படுகிறது.
 
ஜி7 என்றால் என்ன?
 
முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே ஜி7. அதாவது Group of Seven.
 
இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன.
 
முதன்முதலில் 1975ல், உலக பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை தேடும் முயற்சியில் தங்களின் யோசனைகளை பரிமாற்றிக் கொள்வதற்காக ஆறு நாடுகள் கூடி சந்தித்தன.
 
அதற்கு அடுத்த ஆண்டு கனடா இந்த அமைப்பில் உறுப்பினரானது. 1998இல் உறுப்பினரான ரஷ்யா உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியாவை தன்னுடன் 2014இல் இணைத்துக் கொண்டதால் நீக்கப்பட்டது. அதன்பின் ஜி8 மீண்டும் ஜி7 ஆனது.
 
ஆண்டு முழுவதும் அவ்வப்போது, ஜி7 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், சில முக்கிய விஷயங்களை விவாதிக்கக் கூடுவார்கள்.
 
ஆண்டுதோறும் இந்த மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு, இதன் தலைவராக சுழற்சி முறையில் இருக்கும். அந்த நாடே அந்த ஆண்டுக்கான மாநாட்டை நடத்தும்.
 
ஆற்றல் உற்பத்தி கொள்கை, பருவ நிலை மாற்றம், எய்ட்ஸ் மற்றும் உலகபாதுகாப்பு ஆகியவை அங்கே விவாதிக்கப்படும் சில விஷயங்களாகும்.
 
மாநாட்டின் இறுதியில் என்னவெல்லாம் ஒப்புக்கொள்ளப்பட்டதோ, அவையெல்லாம் அறிக்கையாக வெளியிடப்படும். பொதுவாக மற்ற நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.