1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (23:50 IST)

யுக்ரேன் நெருக்கடி: ரஷ்யாவின் பாதுகாப்பு கவலைகளை அமெரிக்கா உதாசீனப்படுத்தியது

தமது நாட்டின் பாதுகாப்பு கவலைகளை அமெரிக்கா உதாசீனப்படுத்தி விட்டதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கிடம் தெரிவித்துள்ளார்.
 
யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என தகவல் வெளிவரும் இந்தச்சூழலில் இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார் ரஷ்ய அதிபர்.
 
யுக்ரேனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக் கூடாது என்று அமெரிக்காவிடம் ரஷ்யா கோரியிருந்தது. ஆனால், ரஷ்யாவின் இந்த முக்கியமான கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துவிட்டது.
 
யுக்ரேன் மீது ரஷ்யா அடுத்த மாதம் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
 
இத்தகைய தகவலை ரஷ்யா ஏற்கெனவே மறுத்துள்ளது. ஆனால் வெள்ளிக்கிழமை, புதினும் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கும் பேசியபோது, யுக்ரேன் நெருக்கடி இன்னும் தீர்க்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.
 
மேலும், யுக்ரேன் விஷயம் தொடர்பாக ரஷ்யா விடுத்த கோரிக்கை மற்றும் கவலைகளை அமெரிக்காவும் நேட்டோவும் கவனிக்கவில்லை என்ற புதின் மக்ரோங்கிடம் தெரிவித்துள்ளார்.
 
இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும் முன்பாக அமெரிக்காவின் திட்டத்தை மிக நெருக்கமாக கவனிப்பதாக புதின் கூறியுள்ளார்.