வங்க தேசத்தில் குறைப் பிரசவத்தில் குழந்தை பெற்ற பெண் ஒருவருக்கு, மீண்டும் ஒரு மாதத்திற்குப் பிறகு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.
அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் இத்தகவலை பிபிசியிடம் தெரிவித்தார்.
20 வயதான அரிஃபா சுல்தானாவிற்கு, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் குழந்தை பிறந்தது. ஆனால், அதற்கு 26 நாட்கள் கழித்து, மீண்டும் வயிற்று வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, அவர் கர்பமாகவே இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அவரது இரண்டாவது கருப்பையில் இரட்டைக் குழந்தைகள் இருந்துள்ளன. உடனடியாக அவருக்கு அவசர சிகிச்சை அளிப்பட்டது.
அக்குழந்தைகள் நல்ல உடல்நலத்துடன் இருந்தன. அரிஃபாவும் எந்த ஒரு சிக்கலுமின்றி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
'அதிர்ச்சி அடைந்தோம்'
கிராமப்புற பகுதி ஒன்றில் வசிக்கும் அரிஃபா, தனது முதல் குழந்தையை குல்னா மாவட்டத்தில் உள்ள குல்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெற்றுக் கொண்டார்.
26 நாட்களுக்கு பிறகு, மீண்டும் வயிற்று வலி வந்து ஜெஸ்சோர் மாவட்டத்தில் உள்ள அத்-தின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்க கூட்டம் போட்டு விவாதிக்கும் தம்பதிகள்
15 வயதிலேயே நின்ற மாதவிடாய் - கவலைகளைத் தூக்கி எறிந்த சிறுமி
"அவர் வந்தவுடன் அவருக்கு அல்ட்ராசவுண்ட் செய்து பார்த்ததில், அவரது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருந்தது தெரிந்தது" என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஷீலா பொட்டர் தெரிவித்தார்.
எங்களுக்கு அதிர்ச்சியாகவும், வியப்பாகவும் இருந்தது என்று கூறிய மருத்துவர் பொட்டர், இதுபோன்ற ஒன்றை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று கூறினார்.
"அவரது வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருந்தது குறித்து அந்தப் பெண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. நாங்கள் அறுவை சிகிச்சை செய்து இரட்டை குழந்தைகளை வெளியில் எடுத்தோம். அதில் ஒன்று ஆண், மற்றொன்று பெண் குழந்தை."
ஒரு பெண் இரண்டு கருப்பைகள் கொண்டிருப்பது யூட்ரஸ் டைடெல்பிஸ் (uterus didelphys) என்று அழைக்கப்படும் என்கிறார் சிங்கப்பூரை சேர்ந்த பெண்கள் நல மருத்துவர் ஒருவர்.
"முன்னதாகவே ஸ்கேன் செய்து பார்த்தால், இரண்டு கருப்பைகள் இருப்பது தெரியவந்துவிடும். ஆனால், அப்பெண் வசிக்கும் இடமான கிராமப்புறத்தில் இது போன்ற வசதிகள் இருக்காது," என்று பிபிசியிடம் பேசிய மருத்துவர் கிறிஸ்டோஃபர் தெரிவித்தார்.
தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஆனால் தனது குடும்பத்தின் நிதி நிலையில் மூன்று குழந்தைகளை வளர்ப்பது கடினமாக இருக்கும் என்று கவலைப்படுவதாகவும், ஏ எஃப் பி செய்தி நிறுவனத்திடம் பேசிய அரிஃபா தெரிவித்தார்.
கூலி வேலை செய்யும் அவரது கணவர், தன்னால் முடிந்த வரை குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்றும், தனது குழந்தைகள் நலமுடம் இருக்க அல்லாதான் காரணம் என்றும் கூறினார்.