திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2021 (14:48 IST)

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் பலி - அரசு என்ன சொல்கிறது?

கர்நாடகாவை சேர்ந்த ஒருவரும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் உயிரிழந்துள்ளனர்.
 
இதில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் கொரோனா தடுப்பூசியால் இறக்கவில்லை என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், கர்நாடகாவை சேர்ந்தவரின் உடல் விரைவில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
 
கடந்த ஜனவரி 16-ம் தேதி இந்தியாவில் கொரோனா தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் பிரதமர் நரேந்திர மோதி. கடந்த மூன்று நாட்களில் 3.81 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
 
அதில் 580 பேருக்கு கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட பின் சில எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளனர். அதில் ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று (ஜனவரி 18, திங்கட்கிழமை) கூறியது.
 
கர்நாடகா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இரு சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பின் இறந்தது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்திருக்கிறது.
 
உத்தர பிரதேசத்தில் மொராதாபாத்தைச் சேர்ந்த 52 வயதான சுகாதாரப் பணியாளர் ஒருவர் ஜனவரி 16-ம் தேதி கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நிலையில், அதற்கு மறுநாளே (ஜனவரி 17) உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் மூன்று மருத்துவர்களை கொண்ட குழுவால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
 
அதில், அவர் உயிரிழந்ததற்கான காரணம் இருதய மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் (Cardiopulmonary disease) எனக் கூறப்பட்டது. எனவே இவரின் உயிரிழப்புக்கும் கொரோனா தடுப்பு மருந்துக்கும் தொடர்பில்லை என மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலர் மனோகர் அக்னானி கூறியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
 
அதே போல கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த 43 வயது ஆண் சுகாதாரப் பணியாளர் கடந்த ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொண்டார். ஜனவரி 18-ம் தேதி உயிரிழந்தார். இவருடைய உயிரிழப்புக்கு இரத்த ஓட்ட தடையுடன் கூடிய இருதய மற்றும் நுரையீரல் செயலிழப்பே காரணமென்று அவர் மேலும் கூறியுள்ளார்.
 
ஆனால் இதுவரை இவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை. பெல்லாரியில் இருக்கும் விஜயநகர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிகல் சயின்ஸ் மருத்துவமனையில் இவரது உடல் விரைவில் பிரேதப் பரிசோதனை செய்யப்படுமென மனோகர் அக்னானி கூறினார்.
 
சில தடுப்பூசிகளுக்கு ஏற்படுவதைப் போல காய்ச்சல், தலைவலி, தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வீக்கம், மயக்கம் போன்றவை ஏற்படலாம் என்றும், ஆனால் அவற்றால் தீவிர பிரச்சனைகள் இருப்பதில்லை என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.