திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 அக்டோபர் 2024 (18:31 IST)

தவெக மாநாடு: பெரியார் வேணும்.. கடவுள் மறுப்பு வேணாம்! - பெரியார் கொள்கை குறித்து விஜய் பேச்சு!

vijay periyar

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியுள்ளது.

 

 

நடிகர் விஜய், மாநாட்டுக்கு வந்து, திடலில் இருக்கும் ரசிகர்களைச் சந்தித்தார். அதன்பின், கட்சியின் கொள்கைகளை விளக்கும் ஒரு காணொளி திரையிடப்பட்டது. அதில் கட்சி ‘மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள்’ கொண்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

பெரியாரின் கடவுள் மறுப்பு பற்றி விஜய் பேசியது என்ன?

 

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அதன் தலைவரும் நடிகருமான விஜய் உரையாற்றினார். அவர் பேசுகையில், "அரசியல் பாம்பு, அதை பயமறியா ஒரு குழந்தையை போலக் கையில் பிடித்து விளையாடுகிறேன்.

 

அரசியலில் நான் ஒரு குழந்தை என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் பாம்பைக் கண்டு எனக்கு பயமில்லை. அரசியல் ஒன்றும் சினிமா கிடையாது, போர்க்களம். சீரியஸாக சிரிப்போடு எண்ணங்களை செயல்படுத்துவதுதான் என் வழி. கவனமாகக் களமாடவேண்டும். பாடல் வெளியீட்டு நிகழ்வில் பேசியதிலிருந்து வித்தியாசமான மேடை.

 

அறிவியல் தொழில்நுட்பம் மட்டும்தான் மாறவேண்டுமா? அரசியலும் மாறவேண்டும். மேடைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேச வேண்டிய அவசியமில்லை. இப்போது என்ன பிரச்னை அதற்கு என்ன தீர்வு என்பதைச் சொன்னாலே மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடும், இன்று இருக்கும் தலைமுறையை புரிந்துகொண்டால்தான் சுலபமாக முன்னெடுத்துச் செல்லமுடியும் மற்ற அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசி நேரம் விரயம் செய்யப்போவதில்லை, ஆனால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கப் போவதில்லை." என்றார்.

 

இதனைத் தொடர்ந்து, கட்சியின் கொள்கை வழிகாட்டிகள் பற்றி அவர் பேசினார். "பகுத்தறிவுப் பகலவன் பெரியார் கட்சியின் கொள்கை வழிகாட்டியாக இருப்பார். ஆனால், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த விஷயத்தில் அண்ணாவின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை பின்பற்றுவோம். அதாவது, ஒவ்வொரு தனி மனிதரின் அவரவர் விரும்பும் கடவுளை வழிபடலாம். அதில் கட்சி எந்த வகையிலும் தலையிடாது. அதேநேரத்தில், பெரியாரின் பெண் கல்வி, பெண் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் கட்சி செயல்படும்" என்றார் நடிகர் விஜய்.

 

காமராஜரின் மதச்சார்பின்மை, நேர்மையான நிர்வாகச் செயல்பாடு மற்றும் அம்பேத்கரின் வகுப்புவாதிப் பிரதிநிதித்துவ கோட்பாட்டை நிலைநிறுத்தவும் சாதிய ஒடுக்குமுறையை எதிர்ப்பதுமே நமது நோக்கம். வீரமங்கை வேலுநாச்சியாரும் தவெகவின் கொள்கை வழிகாட்டியாக திகழ்வார். பெண்களைக் கொள்கைத் தலைவராக ஏற்று வந்த முதல் கட்சி தவெக தான். முன்னேறத் துடிக்கும் சமூகத்தில் பிறந்து முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட அஞ்சலை அம்மாள் நமக்கு வழிகாட்டியாக இருப்பார். சொத்தை இழந்தாலும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் அஞ்சலை அம்மாள்" என்று விஜய் கூறினார்.

 

இதன் தொடர்ச்சியாக மத்திய, மாநில அரசுகள் மீதும் விமர்சனங்களை அவர் முன்வைத்தார். பாஜகவின் பிளவுவாத அரசியல் தங்களுக்கு முதன்மையான கோட்பாட்டு எதிரி என்று குறிப்பிட்ட நடிகர் விஜய், கரப்ஷன் கபடதாரிகள் என்று மாநிலத்தை ஆளும் திமுகவை சாடினார்.

 

த.வெ.க-வின் கொள்கைகள் என்ன?
 

மாநாட்டில் சம்பத்குமார் என்ற கட்சித் தொண்டர் கொள்கைகளை வாசித்தார்.

 

கட்சியின் கோட்பாடு ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று கூறிய அவர், கட்சியின் குறிக்கோள், ‘மதம், சதி, நிறம், இனம், மொழி, பாலினம், பொருளாதாரம் ஆகியவற்றால் தமிழக மக்கள் சுருங்கிவிடாமல், அனைத்து மக்களின் தனிமனித சமூகப் பொருளாதார அரசியல் உரிமைகளை நிலைநிறுத்திச் சமநிலைச் சமூகம் உருவாக்குவது', என்றார்.

 

மேலும், “ஆட்சி, சட்டம், நீதி, அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தி மக்களின் அடிப்படைச் சுதந்திரத்தைப் பறிக்கும் மாநில ஒன்றிய ஆட்சியாளர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவது,” கட்சியின் கொள்கை என்றார்.

 

இடஒதுக்கீடு பற்றிப் பேசிய அவர், ‘விகிதாச்சார இடப்பங்கீடு’ தான் உண்மையான சமூகநீதி என்றார். “சாதி ஒழியும் வரை அனைத்துப் பிரிவினருக்கும் அனைத்துத் துறையிலும் விகிதாச்சாரத்தின் படி பிரதிநிதித்துவம் வழங்குவது,” கட்சியின் கொள்கை என்றார்.

 

“பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகளுக்குச் சமத்துவம் வழங்கப்படும்,” என்றார்.

 

அதேபோல, மாநிலத்தின் தன்னாட்சி உரிமைகளை மீட்பதும், தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையைப் பின்பறுவதும் கட்சியின் கொள்கை என்றார்.