ஆனால், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒருவர் 250 ஏ.டியிலிருந்து மாயன் சமூகத்தில் இருந்திருந்தால், அது அவருக்கு மிகுந்த அவமானமாக இருக்கும்.
ஆனால், வேற்றுக்கிரகவாசிகள் குறித்த சுவாரஸ்யமான கோட்பாடாகவும், அதிக நம்பகத்தன்மை கொண்ட ஒன்று உள்ளது. அது பான்ஸ்பெர்மியா (panspermia) என்ற கோட்பாடு.
அது என்ன கோட்பாடு? அதாவது, பிரபஞ்சம் முழுவதும் உயிர்கள் உள்ளன. அவை பிரபஞ்சத்தில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு விண்வெளியில் பயணம் செய்ய முடியும் என்பதே அந்த கோட்பாடு.
இந்தக் கூற்று உறுதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், எம்.ஐ.டி மற்றும் ஹார்வர்டின் பல்கலைகழகங்களில் முக்கிய ஆராய்ச்சியாளர்கள் குழு, சில வகையான உயிர்கள் உண்மையில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டதா என்ற கூற்றை ஆராய்ந்து வருகின்றனர்.
இது சாத்தியமா?
உயிர்கள் நம்ப முடியாத அளவிற்கு சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றியமைக்கக் கூடியவை. நமது மனித இனமே உலகம் முழுவதும் வளர்ந்த விதத்தைப் பாருங்கள். மேலும் ஆர்க்கியா மற்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் மில்லியன் கணக்கான ஆண்டுகால பரிணாம வளர்ச்சியில் தங்களை மாற்றியமைக்க முடிந்தது.
சல்பர், அம்மோனியா, உலோக மாங்கனீசு ஆகியவை கொண்டும், பிராணவாயு இருக்கும் அல்லது இல்லாதசூழ்நிலையிலும், இன்று பல்வேறு வகையில் உயிர்வாழக்கூடிய நுண்ணுயிரிகள் உள்ளன என்பதே இது குறிக்கிறது. சில உயிர்கள் பூமியில் உள்ள மிக மோசமான சூழ்நிலையிலும் உயிர்வாழ்கின்றனர்.
இந்த மிகச்சிறிய நுண்ணுயிரிகள் பிரபஞ்சத்தின் மற்ற கிரகங்களுக்கு எப்படி பயணம் செய்யும்? நமது சூரிய குடும்பத்தையும் அதற்கு அப்பாலும் ஆராயும்போது நமக்கு இதற்கான விடை கிடைப்பது எளிது.
டெர்சிகோகஸ் ஃபீனிசிஸ் ( Tersicoccus phoenicis ) என்பது விண்வெளி சென்று வந்த நாசா விண்கலத்தை சுத்தம் செய்யும்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாக்டீரியா ஆகும். தற்செயலாக பூமியிலிருந்து சந்திரனுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் பாக்டீரியாவை ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருக்க முடியுமா?
இந்த நுண்ணுயிரிகள் சூரிய குடும்பத்தைச் சுற்றி வருவதற்கான மற்றொரு சாத்தியமான வழி விண்கற்களில் ஹிட்ச்ஹைக்கிங் ( hitchhiking) செய்வதாகும். இவை ஒரு கிரகத்தில் மோதும்போது, பாறைகளும் சிதைபொருள்களும் விண்வெளியில் சிதறி, அதிக விண்கற்களை உருவாக்குகின்றன.
இதுவரை, செவ்வாய் கிரகத்தின் 313 விண்கற்கள் பூமியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பூமியில் இருந்த பாறை நிலவில் காணப்பட்டது. பாறைகள் கிரகங்களில் பயணித்திருக்கிறது என்பதை இதில் இருந்து அறிந்துகொள்ளலாம்.