திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (14:19 IST)

உதய்பூர் படுகொலை: தலை வெட்டிக்கொல்லப்பட்ட நபர்; நரேந்திர மோதிக்கும் மிரட்டல் - நடந்தது என்ன?

BBC
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில், நேற்று (செவ்வாய்கிழமை) மாலை தையல்கடை நடத்தி வரும் ஒருவரை கடைக்குள் புகுந்த இருவர் கத்தியால் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் தாங்கள் வெளியிட்ட காணொளியில், பாஜகவின் முன்னாள் உறுப்பினர் நூபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு இந்த கொலை ஒரு பதிலடி என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் அந்த காணொளியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தையல் கடை நடத்தி வந்த கன்ஹையா லால் தேலியை கொலை செய்ததாக கருதப்படும் முகமது ரியாஸ் மற்றும் கௌஸ் முகமது ஆகிய இருவரையும் ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள பீமில் கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத சம்பவமா என்ற கோணத்திலும் விசாரணை

இந்த சம்பவத்தை தொடர்ந்து உதய்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கு அமைதியையும், ஒழுங்கையும் நிலைநாட்ட போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுகுறித்து மேலதிக விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த ஒரு குழுவை இந்திய உள்துறை அமைச்சகம் சம்பவ இடத்துக்கு அனுப்பியுள்ளது. இந்த சம்பவம், தீவிரவாதத்துடன் தொடர்புடையதாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராஜஸ்தான் காவல்துறையின் கூற்றுப்படி, தனது மகன் கன்ஹையா லால் தேலி ஃபேஸ்புக்கில் ஒரு ஆட்சேபனைக்குரிய இடுகையை தவறாகப் பதிவு செய்ததாக அவரது தந்தை கூறியுள்ளார்.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அவர்கள் முகத்தை மறைக்கும் வகையில் ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும் ராஜ்சமந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதிர் சௌத்ரி கூறியதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

உதய்பூர் போலீசார் சொல்வது என்ன?

இதுகுறித்து உதய்பூர் எஸ்பி மனோஜ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது ஒரு கொடூரமான கொலை. சில குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சில குற்றவாளிகளை போலீஸ் குழுக்கள் தேடி வருகின்றன. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் கொலை நடந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "அனைத்து ஆவணங்களையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். தற்போது நடப்பு நிலைமையை நாங்கள் சமாளித்து வருகிறோம். எல்லாவற்றையும் பரிசீலித்து ஆட்சியருடன் ஆலோசித்து வருகிறோம்," என்றார்.
BBC

இந்த நிலையில், சம்பவ இடத்தில் 600 கூடுதல் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஹவா சிங் குமாரியா தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து மாவட்டங்களிலும் 144வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி, உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஏழு காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், நூபுர் ஷர்மாவுக்கு எதிராக பதிவை எழுதியவரைக் கொல்லுமாறு முஸ்லிம் ஒருவர் தூண்டிவிடும் வீடியோ ஒன்று நேற்று முதல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கொலை செய்யப்பட்ட கன்ஹையா லால் தேலி

கன்ஹையா லால் தேலி, உதய்பூரின் தான்மண்டி காவல் நிலையப் பகுதியில் தையல் கடை நடத்தி வந்தார்.

செவ்வாய்க்கிழமை மதியம் துணி தைக்க வந்திருப்பதாக்கூறி இவரின் கடைக்கு வந்தவர்கள் அவரை கடையில் இருந்து வெளியே இழுத்து வந்து வாளால் வெட்டினர்.
இதில் கன்ஹையா லால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.

ஒருவர் வாளால் வெட்ட மற்றொருவர் இந்த வீடியோவை எடுத்திருக்கிறார்.

இந்து அமைப்புகளின் கோபம்

இந்த சம்பவத்தையடுத்து இந்து அமைப்புகள் மத்தியில் கோபம் ஏற்பட்டுள்ளது. நகரின் சந்தைகள் மூடப்பட்டுள்ளன. காலவரையற்ற கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலோத், அமைதி காக்குமாறு அனைத்துத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் "உதய்பூரில் நடந்த இளைஞரின் கொடூரமான படுகொலைக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். குற்றவாளிகள் அனைவர் மீதும் (இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள்) கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காவல்துறை குற்றத்தின் வேர் வரை செல்லும். அமைதி காக்குமாறு அனைத்து தரப்பினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற கொடூரமான குற்றத்தில் ஈடுபடும் ஒவ்வொரு நபரும்கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்."என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"இந்த சம்பவத்தின் வீடியோவைப் பகிர்வதன் மூலம் சூழலைக் கெடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். வீடியோவைப் பகிர்வதால், சமூகத்தில் வெறுப்பைப் பரப்பும் குற்றவாளியின் நோக்கம் வெற்றியடையும்"என்றும் முதலமைச்சரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைவர்கள் கண்டனம்

இந்தியாவையே உலுக்கியுள்ள இந்த படுகொலைக்கு நாடுமுழுவதும் கண்டம் வலுத்துள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "உதய்பூரில் நடந்த கொடூர கொலை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது" என்று கூறியுள்ளார்.

"இந்த கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து வெறுப்பை வெல்ல வேண்டும். அமைதியையும் சகோதரத்துவத்தையும் பேணுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

"உதய்பூரில் நடந்த கொடூர கொலை கண்டிக்கத்தக்கது. சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்பதே எங்கள் கட்சியின் அடிப்படை நிலைப்பாடு" என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.