1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (22:00 IST)

"இது இந்தியா இல்லை, பாகிஸ்தான்" - போராட்டக்காரர்களை விடுவித்த பாகிஸ்தான் நீதிபதி

"இது இந்தியா இல்லை, பாகிஸ்தான். இங்கே மக்களின் சட்ட உரிமை பாதுகாக்கப்படும்" என ஜாமீன் மனு ஒன்றின் விசாரணையின்போது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதஹர் மினால்லாஹ் தெரிவித்துள்ளார்.
 
கடந்த மாதம் பாகிஸ்தானின் தேசிய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் முன் போராடிய 23 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது.
 
கைது செய்யப்பட்டவர்களின் ஜாமீன் மனு குறித்த விசாரணை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த விசாரணையின்போது போராட்டக்காரர்களை நடத்தும் விதம் குறித்து குறிப்பிட்ட தலைமை நீதிபதி அதஹர் மினால்லாஹ், "இது இந்தியா அல்ல பாகிஸ்தான். இங்கே அனைவரின் சட்ட உரிமையும் காக்கப்படும்" எனக் கூறி அவர்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்தார்.
 
இந்த மனு விசாரணையின் போது, "ஜனநாயக நாடு மக்களின் கருத்து சுதந்திரத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு மக்கள் அச்சம் கொள்ளக் கூடாது. நீதிமன்றம் மக்களின் உரிமையைக் காக்கவே இருக்கிறது. இது இந்தியா இல்லை, பாகிஸ்தான். இங்கே மக்களின் சட்ட உரிமை பாதுகாக்கப்படும். அதனால் போராட்டம் நடத்த வேண்டுமென்றால் அனுமதி கேளுங்கள், கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகுங்கள்" என கூறினார் நீதிபதி அதஹர் மினால்லாஹ்.
 
அதன் பிறகு 23 தொழிலாளர்களின் மீது போடப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்கள் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கை திரும்பப்பெறப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அவாமி வொர்கர்ஸ் கட்சியின் உறுப்பினர்களில் ஒருவரான அமார் ராஷித் முதல் தகவல் அறிக்கை திரும்பப்பெற்ற ஆவணத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும் "எங்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. இந்த நாட்டில், மக்களின் எதிர்ப்பு, அமைதியான போராட்டம் மற்றும் கருத்து சுதந்திரத்தை அடக்க மாட்டார்கள் என நம்பிக்கை உள்ளது", என பதிவிட்டிருந்தார்.