1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (16:35 IST)

இந்தியாவில் உயரும் பணவீக்கம் உங்கள் சமையலறையை எப்படி பாதிக்கும்?

"எனக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. காய்கறிகள், பருப்பு வகைகள், சமையல் எரிவாயு, மசாலா பொருட்கள் என சமையலறையில் இருக்கும் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே போகிறது. நாங்கள் என்னதான் சாப்பிடுவது? ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் உயர்ந்துள்ளதாக நான் கேள்விப்பட்டேன்."

43 வயதான இல்லத்தரசி அமிதா தாவ்டே இவ்வாறுதான் உணர்க்கிறார். 2020 ஜனவரியில் சில்லறை பணவீக்கம் 7.59 சதவீதம் என அதிகரித்திருப்பதாக கடந்த வாரம் இந்திய அரசு வெளியிட்ட தரவு கூறுகிறது. 2019 டிசம்பரில் இது 7.35 சதவீதமாக இருந்தது. இதுவே 2019 ஜனவரியில் சில்லறை பணவீக்கம் 2.05 சதவீதமாக இருந்தது.

எரிபொருள் மற்றும் உணவு ஆகியவற்றின் விலை உயர்வே இதற்கு காரணமாகும். ஆனால், 2014 மே மாதத்தில் அதிகபட்சமாக 8.3 சதவீதமாக பணவீக்கம் இருந்ததில் இருந்து தற்போதுதான் இந்தளவிற்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது. இது பெரும் கவலையையும் எழுப்பியுள்ளது.

மொத்தவிலை பணவீக்கம் குறித்தும் நிபுணர்கள் கவனம் செலுத்துகிறார்கள். கடந்த ஜனவரியில் இது 3.1 சதவீதமாக இருந்தது. இதுவே அதற்கு முந்தைய மாதம் மொத்தவிலை பணவீக்கம் 2.59 சதவீதமாக இருந்தது.

மொத்தவிலை பணவீக்கம், முக்கிய பொருட்கள், எரிபொருள் மற்றும் எரிசக்தி மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆகியவை கொண்டு கணக்கிடப்படுகிறது.

உணவு பொருட்கள், குளிர்பானங்கள், புகையிலை, ஆடைகள் மற்றும் வீட்டுமனை, இவையெல்லாம் சில்லறை பணவீக்கத்தின் கீழ் வரும்.

இந்த இரண்டையும் வைத்து இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இப்போது இந்த இரு தரவுகளுமே நிபுணர்களுக்கு கவலை அளிக்கும் விதமாகவே இருக்கிறது.

தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனத்தின் (ICRA) முதன்மை பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில், "2020 ஜனவரியின் பணவீக்கம் மிகவும் கவலையளிக்கிறது. காய்கறிகளின் விலை சற்று குறையலாம் என்றாலும் இறைச்சியின் விலை அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்கிறார்.

வளர்ச்சி வலுவிழந்திருக்கும் நிலையிலும், 2021 நிதியாண்டில் முதல் 6 மாதங்களில் பணவீக்கம் 6 சதவீதத்திற்கும் மேலாகவே இருக்கும் என்கிறார் கோடக் மஹிந்த்ரா வங்கியில் மூத்த பொருளாதார நிபுணர் உபாசனா பரத்வாஜ்.

இந்தியாவின் 2.8 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் சுமார் 15 சதவீதம் விவசாயம் என்ற நிலையில் நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கிராமப்புறத்துறையே சார்ந்திருக்கிறார்கள். பணவீக்கம் அதிகரிப்பது என்பது விலை நிர்ணயத்துக்கான அதிகாரத்தை மீண்டும் விவசாயிகளின் கையில் கொண்டு சேர்க்கும் என்பதை காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

தேக்க நிலையில் பணவீக்கம்?

இந்தியாவில் பணவீக்கம் தேக்க நிலையில் இருக்கிறதா என்று சில நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு வைக்கப்பட்ட பெயர் Stagflation

அதற்கு அர்த்தம், "மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்து,(negative growth) தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து காணப்படுவது" ஆகும். தற்போது இந்தியாவின் வளர்ச்சி மிதமாக இருக்கிறது. ஆனால் வளர்ச்சி நெகடிவில் இல்லை.

அதனால் இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறதே தவிர தேக்க நிலையில் இல்லை.

ரிசர்வ் வங்கியின் பங்கு

ஜனவரி - மார்ச் காலாண்டில் பணவீக்கம் 6.5 சதவீதமாக இருக்கும் என்றும், தொடர்ந்து இந்த நிதியாண்டில் முதல் பாதியில் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து 5 முதல் 5.4 சதவீதமாக குறையும் என்றும் மத்திய வங்கி கணக்கிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை 2 - 6 சதவீதத்தில் வைத்திருக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை குழு, பிப்ரவரி மாதம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தங்களது வட்டி விகிதங்களில் எந்த மாற்றங்களையும் கொண்டுவரவில்லை. 2019 பிப்ரவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் விகிதங்களை 135 புள்ளிகளாக குறைத்திருந்தது. அதன் பிறகு டிசம்பரில் நடைபெற்ற கொள்கை ஆய்வுக்கான கூட்டத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை.


எனினும், இந்த குறைக்கப்பட்ட வட்டி விகிதங்களை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் அளிக்கவில்லை. தங்கள் இருப்பு நிலை குறிப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற தயக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதங்களை வங்கிகள் குறைக்கவில்லை.

வாராக் கடன்கள், பண மோசடிகள் என்று வங்கித் துறையே பல்வேறு சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

அரசு என்ன கூறுகிறது?

ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளது. மொத்த விலை பணவீக்கம் எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்த இரண்டுமே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தொழிலிலும், சமையலறையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

"நான் இதுவரை 3 தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டேன். தொழிலில் சுத்தமாக பணம் இல்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு 1100 ரூபாயாக இருந்த ஒரு எண்ணெய் கண்டெய்னரின் விலை இப்போது 1600 ரூபாயாக இருக்கிறது" என்கிறார் சமையலை தொழில் செய்துவரும் பாவ்னா ஷிவ்ராம் நாயக்.

"தொழிலாளர்களை வேலைக்கு வைக்கும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லாததால் நானே அனைத்து வேலைகளையும் செய்கிறேன். எப்படி பிழைக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. தொழில் செய்வது அவ்வளவு கடினமாக இருக்கிறது. நான் சமைக்கும் உணவுகளில் வெங்காயம் சேர்ப்பதை நிறுத்திவிட்டேன்" என்கிறார் அவர்.

எனினும் இன்னல்களை நாம் கடந்துவிட்டோம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.

அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு மற்றும் பொருட்கள் மற்றும் சேவை வரி வசூல் போன்றவற்றால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்று அவர் கூறினார்.