திருமாவளவன் கேள்வி: ஓர் இந்துவாக குறைகளை சுட்டிக்காட்டும் உரிமை எனக்கு இல்லையா?
இந்துக்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாக தனக்கு எதிராக சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் இடுகைகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தொழில்நுட்ப அணியே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.
அவருக்கு எதிராக சமீபத்தில் நடிகை காயத்ரி ரகுராம் சவால் விடுக்கும் வகையில் பதிவிட்ட கருத்துகளுக்குப் பிறகு, அந்த விவகாரம் சர்ச்சையாகி, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் திருமாவளவனுக்கு எதிரான கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இது குறித்து விளக்கம் பெற தொல். திருமாவளனை பிபிசி தமிழ் சந்தித்தது. அவர் அளித்த பதிலின் முழு விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.
பதில்: நவம்பர் 9-ஆம் தேதி புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணியான மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் தேசிய கல்வி கொள்கைக்கு எதிரான ஒரு மாநாடு நடத்தப்பட்டது. சனாதன கல்விக்கொள்கைக்கு எதிரான மாநாடு என்ற பெயரில் நடந்த நிகழ்ச்சியில் நான் நிறைவுரையாற்றினேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நான் பேசினேன். தேசிய கல்விக்கொள்கையை ஏன் விடுதலை சிறுத்தைகள் எதிர்க்கிறது என்பதை ஒன்று, இரண்டு, மூன்று என பட்டியல் போட்டு நான் பேசினேன்.
அந்த உரையின் முடிவில் அயோத்தி தீர்ப்பு குறித்தும் நான் கருத்து வெளியிட்டேன். தொடக்கத்தில் கூறியதை போல, பூமிக்கு அடியில் உள்ள ஒரு கட்டடத்துக்கு எப்படி இந்து அடையாளம் என்றோ இஸ்லாமிய அடையாளம் என்றோ கண்டறிய முடியும். இது விந்தையாக இருக்கிறதே. கோயிலோ, மசூதியோ கட்டப்பட்ட பிறகு, அதன் வெளிப்புற கட்டமைப்புதான், அது இந்து கோயிலா, இஸ்லாமிய வழிபாட்டுத்தலமா என்பதை கண்டறிய வாய்ப்பை தரும். அடித்தளத்தை வைத்து அதை கண்டறிய எனக்குத் தெரிந்து வாய்ப்பில்லை.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அடிக்கட்டுமானமாக இருக்கும் ஒரு கட்டட பரப்பில் இஸ்லாமிய அடையாளமும் இல்லை, இந்து அடையாளமும் இல்லை என்று கூறியிருந்தது. அதனால் நாங்கள், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இஸ்லாமிய கட்டுமானம் இருந்ததா இல்லையா என்பது பிரச்சனை அல்ல. அந்த இடத்தில் இந்து கோயில் இருந்ததா இல்லையா என்பதுதான் கேள்வி.
ஆக, இந்து கோயில் இல்லை என்றால், அத்துடன் முடித்திருக்க வேண்டும். ஆனால், இந்து கோயில் இல்லை என்ற பிறகும், இஸ்லாமிய கோயில் இல்லை என்றும் சொன்னது ஏன் என கூறப்பட்டதால், அதை விமர்சிக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஓர் எள்ளலுடன், ஒரு வேடிக்கையாக சில விளக்கங்களை சொன்னேன். அப்போது திடீரென வந்த உரைவீச்சின் போக்கில் தெறித்த சொல்லாடலாக சில வார்த்தைகளை பேசினேன்.
வழக்கமாக, நாம் தாம்பத்ய உறவு தொடர்பான காட்சிகளையோ படங்களையோ பார்க்க வேண்டாம். அது அசிங்கம் என்று கூறுவதுதான் முன்னோரின் கடமை, வழக்கம். அவர்களின் கண்களில் நாகரிகத்துக்கு குறைவான காட்சிகள் பதியக்கூடாது என்றுதான் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள தந்தையும், தாயும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு மூத்த உறுப்பினரும் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்பதுதான் வழக்கம்.
அப்படிப்பட்ட ஒரு சொல்லாடலைத்தான் நான் பயன்படுத்தினேன். நான் பேசியதை சரிதான் என்று நியாயப்படுத்த நான் விரும்பவில்லை. யதார்த்தமான போக்கில், கூம்பாக இருந்தால் மசூதி, உயரமாக இருந்தால் தேவாலயம், இந்து கோயில் கூட உயரமாகத்தான் கட்டப்படுகிறது என்று பேசினேன். கோபுரமாக இருந்தால் என்ற வார்த்தையை கூட நான் குறிப்பிட்டு பேசியிருக்கலாம்.
அந்த நேரத்தில் அந்த சொல் எனக்கு கிடைக்கவில்லை. அசிங்கமான பொம்மைகள் இருந்தால் கோயில் என்றவாறு உரைவீச்சின் போக்கில் அந்த வார்த்தையை பயன்படுத்தி விட்டேன்.
ஏதோ ஒரு வகையில் அந்த காட்சி எனது மனதில் ஆழமாக பதிந்திருந்தது. அதற்கு காரணம், கோயில்களில் சிற்பங்களை நாம் பார்க்கும்போது, அப்படி எல்லாம் பார்க்காதே, அது அசிங்கம் என்றுதான் நம்மிடையை சொல்லப்பட்டு வந்தது.
இந்து மதத்தின் நம்பிக்கை உள்ளவர்கள் கூட, குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோயில்களுக்கு செல்லும்போது, திடீரென அந்த காட்சி கண்ணில் பட்டால், அதெல்லாம் அசிங்கம் என்றுதான் சொல்ல முடியும். அது தெய்வீகமான, அற்புதமான காட்சி, நின்று நன்றாக பார்த்து விட்டு வாருங்கள் என எந்த பெற்றோரும் சொல்ல வாய்ப்பில்லை. ஆகவே, ஒரு மோசமாக பேசும் பேச்சை கூட எடுத்துரைக்க அசிங்கமாக என்ற வார்த்தையை நாம் பயன்படுத்துகிறோம்.
தொலைபேசி, செல்பேசி போன்றவற்றில் நாம் இன்றைக்கு ஒன்றை தேடினால், அசிங்கமான ஒரு விளம்பரம் திடீரென தாமாகவே வருகிறது. இந்த இணையதளத்துக்கு செல்கிறீர்களா என்று கேட்கிறது. கல்வி கற்கும் பிள்ளைகளிடம் செல்லிடப்பேசிகளை ஒப்படைக்கும்போது கூட, அசிங்கமான காட்சிகளை அவர்கள் பார்த்து விடக்கூடாது என்பதற்காக, மிகுந்த கவனமாக, அழைப்புகளுக்காக மட்டுமே அவற்றை உபயோகப்படுத்தமாறு கூறி வழங்கும் நிலைதான் உள்ளது.
இண்டர்நெட் வசதி இருந்தால் அசிங்கமானதை அவர்கள் பார்க்க நேரிடலாம் என்று பலரும் கருதுகிறார்கள். ஆக, அசிங்கமானது என்பது ஒரு சொல்லாடல். அது அன்றாடம் வழக்கத்தில் பயன்படுத்தகூடிய ஒரு சொல். இயல்பாக, அந்த வார்த்தை, எனக்கு தோன்றியதன் அடிப்படையில் அப்படி பேசினேன்.
நான் இந்து சமூகத்தினரை மனதில் வைத்துக் கொண்டோ, பிராமண சமூகத்தினரை மனதில் வைத்துக் கொண்டோ அப்படி பேசவில்லை. ஒரு மணி நேரம் நான் மோதி அரசின் தேசிய கல்விக்கொள்கை பற்றியே அன்றைய தினம் பேசினேன். ஆகவே, மோதி அரசின் அம்பலப்படுத்தும் அந்த வேகத்தின்போக்கில் அயோத்தி தீர்ப்பு குறித்து நான் கருத்து வெளியிடும்போது, உச்ச நீதிமன்றம் இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறதே என ஒருவித எள்ளலோடு கருத்தை வெளியிடும்போது அந்த வார்த்தை வந்து விட்டது.
அது உள்ளபடியே உழைக்கும் இந்து சமூகத்தினரை காயப்படுத்தியிருந்தால் நான் வருந்துகிறேன். உடனே கூட சில நண்பர்கள் அதை சுட்டிக்காட்டியபோது, அவர்களிடம் எனது வருத்தத்தை தெரிவித்தேன். பொதுவாகவே வருந்துகிறேன் என்று எனது ஃபேஸ்புக் பக்கத்திலும் குறிப்பிட்டேன்.
ஆக, எந்த உள்நோக்கத்துடன் இல்லாமல், இந்து சமூகத்துக்கு எதிராக பேச வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இல்லாமல், மோதி அரசுக்கு எதிராக பேசிக்கொண்டிருந்தபோது நான் தெறித்த சொற்கள் அவை.
தமிழ்நாட்டில் உள்ள எந்த தலைவரையும் இதுபோல அநாகரிகமான, அருவருப்பான சொற்களால் யாராலும் விமர்சிக்க முடியாது. திருமாவளவன், இந்த சமூக அடையாளம் உள்ளவன். அவரை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். காவல்துறை நம் கையில் இருக்கிறது. தமிழக அரசாங்கம், நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற அகந்தையில்தான் அவர்கள் என்னை விமர்சிக்கிறார்கள்.
அசிங்கமான சிலைகள் என்று திருமாவளவன் சொன்னதற்காக வருத்தம் கேட்க வேண்டும் என என்னை விமர்சிப்பவர்கள் வலியுறுத்தலாம் அல்லது வேறு நிபந்தனையை வெளியிடலாம். ஆனால், வாய்க்கு வந்தபடி, தாயை பழிப்பது, அருவருப்பான சொற்களால் அர்ச்சனை செய்வது, அதால் அடிப்பேன், இதால் அடிப்பேன் என்றெல்லாம் பேசுவது எந்த வகை நாகரிகம்? நான் சொன்னது, ஒரு திட்டமிட்ட உள்நோக்கம் இல்லை என்று கூறி விட்டு அதற்கு வருத்தமும் தெரிவித்து விட்டேன். பாஜகவின் ஐ.டி விங் ( தகவல் தொழில்நுட்ப அணி) திட்டமிட்டு இதை அரசியலாக்குகிறது.
அதற்கு நடிகர்கள், நடிகைகள், முன்னாள் இன்னாள் அரசியலில் செல்வாக்கு இழந்தவர்கள், உள்ளவர்கள், இளம் தலைமுறையினர் என்று பல பேர் களத்தில் இறங்கி ஆட்டம் காட்டுகிறார்கள்.
நீண்ட காலமாக பெரியார் மீதும் பெரியார் இயக்கம் மீது இருந்த வெறுப்பு, திமுக மீதும் அதன் தலைவர் மீதும் இருந்த வெறுப்பின் வெளிப்பாடுதான் இது. அப்போதெல்லாம் பேச முடியாத நிலை இருந்தது. அதிமுகவும் ஆட்சியில் இருந்த காலம். அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அவர் பார்ப்பனிய சமூகத்தை சேர்ந்தவர் என்றபோதும், திராவிட அடையாளத்தை சுமந்திருந்த காரணத்தால், ஓர் அச்சம் சனாதன சக்திகளுக்கு இருந்தது.
அவர்கள் வெளியே வந்ததில்லை, வீதியில் நின்றதில்லை, வாய் திறந்ததில்லை, ஒரு வார்த்தை பேசியதில்லை. ஆனால், இன்றைக்கு புற்றீசல்களை போல புறப்பட்டு வீதியில் வந்து தம்பட்டம் அடிக்கிறார்கள். ஓர் அறைக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு விமர்சனங்களை எழுதுகிறார்கள். அடிப்போம், உதைப்போம் என்றெல்லாம் கூச்சலிடுகிறார்கள். அதைக் கண்டு எல்லாம் நான் அச்சப்படவில்லை.
அவர்களிடம் இதை நான் கேட்கிறேன். கோயில்களில் இதுபோன்ற சிற்பங்கள் கலை நயத்தோடு 40 வயது கடந்த பிறகு பார்ப்பதில் தவறில்லை. 17 வயது சிறாரோ சிறுமியோ அதை பார்க்கலாமா... அந்த காட்சியை ஒரு சிறார் செல்லிடபேசியில் படம் எடுத்து ஒரு பெண்ணுக்கு அனுப்பி, கலை நயத்துடன் அனுப்பினேன், அழகான படத்தைதானே அனுப்பினேன் என கூறினால், விட்டு விடுவோமா? ஆமாம், அது அழகானதுதான், அற்புதம்தான் என்று அந்த சிறுமியின் பெற்றோர் ஏற்றுக் கொள்வார்களா அல்லது அதை அனுப்பியவர் மீது புகார் கூறுவார்களா? அதை குறிப்பிட்டு சுட்டிக்காட்ட தமிழில் இருக்கும் சொல்தான் அசிங்கம் என்ற வார்த்தை. தாம்பத்திய உறவுகளை சித்தரிக்கக் கூடிய காட்சியைதான் நான் குறிப்பிட்டேன்.
உடல் வடிவத்தையோ, மார்பக வடிவிலான சிற்பத்தையோ நாம் அவ்வாறு கூறுவதில்லை. ஆனால், தாம்பத்திய உறவில், பிறப்புறுப்புகளை அப்படியே வடிவமாக்கி, சிற்பமாக்கி கோயில்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளின் அமைப்பைதான் நாம் சொல்கிறோம். இந்து தர்மத்தையோ சனாதன தர்மத்தையோ எதிர்க்கிறோம் என்றால், பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வை ஒப்புக்கொள்கிற ஒரே மதம் உலகிலேயே இந்து மதம் மட்டுமே்தான். அதை நாம் விமர்சிக்கிறோம். ஆனால், ஏதோ ஒட்டுமொத்த இந்து சமூகத்தையே எதிர்க்கிறோம் என்ற தோற்றத்தை பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளை சார்ந்தவர்கள் பரப்புகிறார்கள்.
எனது சான்றிதழ்களில் கூட நான் ஓர் இந்து என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனது கட்சியில் இருக்கும் 70-80 சதவீதத்தினரும் இந்துக்கள்தான். அப்படியென்றால் இந்து சமூகத்தையே எப்படி எங்களால் சாட முடியும். ஓர் இந்துவாக எனக்கு அந்த உரிமை இல்லையா? சான்றிதழின்படி நான் இந்து என்றால், அந்த மதத்தில் உள்ள குற்றம் குறைகளை சுட்டிக்காட்ட எனக்கு உரிமை இருக்கிறது. நான் இருந்து அல்லாத சான்றிதழை வைத்திருக்கக் கூடிய, இந்து சமூகத்தை சாராத ஒரு நபரும் அல்ல. அந்த வகையில் எனக்கு தவறுகளை சுட்டிக்காட்ட உரிமை இல்லையா?
தற்போதைய கோயில்களில் அத்தகைய சிற்பங்கள் இல்லாவிட்டாலும், பழைய கோயில்களில் அவை இடம்பெற்றுள்ளனவே. இந்த கேள்வியை இந்து அடையாளத்துடன் அந்த உரிமையைக் கோரி என்னால் எழுப்ப முடியும். ஆனால், நான் அப்படி கோரவில்லை.
நான் வெளியிட்ட ஒரு கருத்தை, கருத்தாக எதிர்கொள்ளாமல், நடிகைகள், நடிகர்கள் என சிலரை தூண்டி விட்டு எனக்கு எதிரான விமர்சனங்களை பதிவு செய்கிறார்கள். அதற்கு எனது சில தோழர்கள் எதிர்வினையாற்றினார்கள். உடனே நான் அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று நான் அறிவுறுத்துகிறேன். தமிழ்நாட்டில் வேறு எந்த தலைவரையாவது இப்படியெல்லாம் எழுதிவிட்டு அவர்களால் நடமாட முடியுமா?
வன்முறை கூடாது, வன்முறை பாதையில் நாம் பயணம் செய்யக் கூடாது. நாம் பயணம் நீண்ட தூரம். நமது இலக்கு சமத்துவம் என்பதுதான். பெரியாரை விமர்சித்தபோதும், அண்ணாவை விமர்சித்தபோதும், கருணாநிதியை விமர்சித்தபோதும் அவர்கள் எல்லாம் சகித்துக்கொண்டார்கள். அந்த வரிசையில் நம்மையும் விமர்சிக்கிறார்கள். நாமும் சகித்துக்கொள்வோம் என்றுதான் தொண்டர்களுக்கு வழிகாட்டி வருகிறேன்.
பிபிசி தமிழ் மூலம் இந்து சமூகத்தினருக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன். ஒட்டுமொத்த இந்து சமூகத்தை பழிக்கும் நோக்கிலோ கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலோ கருத்துகளை வெளியிடவில்லை. இந்து தர்மம், சனாதன தர்மம் பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வை கொண்டிருக்குமானால், அதை தொடர்ந்து எதிர்ப்பது எங்களுடைய கடமை.
தந்தை பெரியார், அம்பேத்கர் ஆகியோர் சனாதன தர்மத்தை கடுமையாக எதிர்த்தார்கள். புரட்சியாளர் அம்பேத்கர், இதில் இருப்பதால்தானே இந்த இழிவு என்று கூறி அதில் இருந்து வெளியேறினார். தந்தை பெரியார், வெளியேறினால் விமர்சிக்க முடியாது என்று கருதி உள்ளுக்குள்ளேயே இருந்தார். எனவே, உள்ளுக்குள்ளேயே இருக்கும் எனக்கு விமர்சிக்கவும் உரிமை உண்டு.
அதையும் நான் இந்து சமூகத்துக்கு பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். மக்களை, உழைக்கும் இந்துக்களை காயப்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. சனாதன தர்மத்தையும் அதை உயர்த்திப் பிடிக்கும் பாஜக அரசை விமர்சிக்கும் நோக்குடன்தான் அந்த கருத்துகளை நான் பதிவு செய்தேன்.