செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 2 மே 2023 (15:00 IST)

"எந்திரங்கள் மனிதர்களைவிட புத்திசாலிகளாகும் காலம் நெருங்கிவிட்டது" - கூகுள் AI

செயற்கை நுண்ணறிவின் தந்தையாகக் கருதப்படும் ஜெஃப்ரி ஹின்டன், கூகுள் நிறுவனத்தில் தாம் வகித்து வந்த பதவியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்படும் முன்னேற்றங்கள் பின்னாளில் பெரும் ஆபத்துகளை விளைவிக்கும் என எச்சரித்துள்ளார்.
 
75 வயதான ஜெஃப்ரீ ஹின்டன், தி நியூயார்க் டைம்ஸில் பேசும்போது கூகுள் நிறுவனத்தில் இருந்து தாம் விலகிவிட்டதாகத் தெரிவித்ததுடன், தமது பணி குறித்து தற்போது வருந்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
பிபிசியிடம் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய 'சாட்பாட்டுகள்' (அரட்டைக்குப் பயன்படுத்தப்படும் மென்பொருள்கள்) மிகுந்த அச்சமூட்டும் வகையில் உள்ளன என்றார்.
 
தற்போதைய நிலையில் அவை மனிதர்களை விட புத்திசாலிகளாக இல்லாவிட்டாலும், விரைவில் அவை நம்மை விட புத்திசாலிகளாக மாறும் என தாம் யூகிப்பதாக அவர் கூறினார்.
 
கணினி நரம்பியல் வலை அமைப்புக்கள் குறித்த டாக்டர் ஹின்டனின் ஆழமான ஆராய்ச்சிகள் தான் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ChatGPT போன்ற மென்பொருள்களுக்கான பாதையை ஏற்படுத்தின.
 
ஆனால், விரைவில் இந்த அரட்டை மென்பொருள்கள் மனிதனை விட அறிவு மிகுந்தவையாக மாறிவிடும் என டாக்டர் ஹின்டன் தெரிவித்தார்.
 
தற்போதைய நிலையில் GPT-4 போன்ற மென்பொருள்கள் மனிதனை மிஞ்சும் பொது அறிவுடன் உள்ளன என்றும், இருப்பினும் அவற்றிடம் மனிதர்களுக்கு இருக்குமளவுக்குப் பகுத்தறிவு இல்லாவிட்டாலும் சிறிதளவாவது பகுத்தறிவுடன் அவை செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
 
தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் முன்னேற்றம் காரணமாக விரைவில் அந்த மென்பொருள்கள் போதுமான பகுத்தறிவைப் பெற்றுவிடும் என்பதால் அவற்றைப் பற்றி நாம் கவலைப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
 
நியூயார்க் டைம்ஸில் டாக்டர் ஹின்டன் எழுதியுள்ள கட்டுரையில், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை நுண்ணறிவை யாரும் விரும்ப முடியாது எனத்தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து விளக்கமான தகவலை அளிக்குமாறு அவரிடம் பிபிசி கேட்டபொழுது, தற்போதைய நிலை அச்சமூட்டும் விதத்தில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் வரவிருக்கும் அதிபுத்திசாலி மென்பொருள்கள் (ரஷ்ய அதிபர் விளாடிமிர்) புதின் போன்ற மோசமான நபர்களிடம் கிடைத்து விட்டால் அவர்களுடைய இலக்கை அடைவதற்கான ரோபோக்களை உருவாக்கும் ஆபத்து ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
அதிகார போதையில் இருக்கும் ஒருவர், அந்த அதிகாரத்தை அடைவதற்கு இதுபோன்ற மென்பொருள்களை தவறாகப் பயன்படுத்தும் ஆபத்து இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
 
மேலும், மனிதர்களின் புத்திசாலித்தனத்தை விட வேறு வகையான புத்திசாலித்தனத்தை நாம் உருவாக்கி வருகிறோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
 
நாம் உயிருடன் வாழும் மனிதர்களாக இருக்கும் போது, இந்த மென்பொருட்கள் பயன்படுத்தப்படும் இடங்கள் அதே அறிவுடன் கூடிய வெறும் இயந்திரங்களாக இருப்பதே இவற்றிற்கும் நமக்குமான வித்தியாசம் என்றும் அவர் கூறினார்.
 
மேலும் இந்த மென்பொருட்களுடன் கூடிய பல ஆயிரக்கணக்கான இயந்திரங்கள் உருவாக்கப்படும் போது, அவை அனைத்தும் தனித்தனியாக ஏராளமான தகவல்களை உள்வாங்கினாலும், அவை ஒவ்வொன்றும் அனைத்துத் தகவல்களையும் கிரகிக்கும் என்பதால் தான் மனிதர்களை விட புத்திசாலிகளாக அவை மாறிவிடும் ஆபத்து உள்ளது என்றும், இது 10,000 பேர் தனித்தனியாக பல தகவல்களைத் தெரிந்து கொள்ளும் போது, அந்தத் தகவல்கள் அனைத்தையும் அவர்கள் அனைவரும் அறிந்து கொள்வதைப் போன்றது என்றும் டாக்டர் ஹின்டன் கூறினார்.
 
இதற்கிடையே, கூகுள் நிறுவனப் பதவியிலிருந்து தாம் விலகியதற்கு மேலும் பல காரணங்கள் இருப்பதாகவும் டாக்டர் ஹின்டன் தெரிவித்தார்.
 
தமக்கு 75 வயதானது ஒரு காரணம் என்றும், கூகுளில் தான் பணியாற்றாவிட்டால் அந்நிறுவனம் அதிக அளவில் நம்பத்தகுந்த நிறுவனமாக இருக்கும் என்றும் தெரிவித்த அவர் கூகுளை அதிகமாக விமர்சிக்க விரும்பவில்லை என்றும், ஆபத்தான செயற்கை நுண்ணறிவை உருவாக்காமல் இருப்பதில் அந்நிறுவனத்துக்கு அதிக பொறுப்புகள் இருப்பதாகவும் அவர் மேலும் பேசுகையில் தெரிவித்தார்.
 
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஜெஃப் டீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதில் பொறுப்புடன் செயல்பட்டு வருவதாகவும், அதன் மூலம் வரவிருக்கும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கையுடன் செயல்படுவதாகவும், அதேநேரம் புதிய மாற்றங்களை நோக்கி நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.