பாஜக நிர்வாகியை கேள்விகளால் திணறடித்த மாணவர்கள்: பிபிசி தமிழர் குரல் நிகழ்ச்சியில் ருசிகரம்
வருகிற மக்களவை தேர்தலையொட்டி பிபிசி தமிழ் சார்பாக கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற தமிழர் குரல் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விடுதலைச் சிறுத்தைக் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் டி,எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நாராயணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நிகழ்ச்சியில் முதலில் தொல்.திருமாவளவன் தான் அரசியலில் கடந்து வந்த பாதையை விளக்கினார். மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். வரும் மக்களவை தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். பொதுவாக, கூட்டணிக்காக எந்த மாதிரியான சமரசம் செய்து கொள்ள வேண்டியுள்ளது? உள்ளிட்ட பல கேள்விகளை மாணவர்கள் எழுப்பினர்.
இவரை அடுத்து முன்னாள் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் டி,எஸ். கிருஷ்ணமூர்த்தி மாணவர்கள் மத்தியில் பேசினார். மின்னணு வாக்கு எந்திரம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இவரைத் தொடர்ந்து பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நாராயணன் பேசினார். மாணவர்கள் பலர் நாராயணனிடம் கேள்விகளை கேட்டு அரங்கையே அதிர வைத்தனர். இவரும் சலைக்காமல் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார்.