ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (17:56 IST)

பியூஷ் மனுஷ் மீது பா.ஜ.கவினரின் தாக்குதல்: என்ன நடந்தது?

சேலம் மாவட்டத்தில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து விளக்கம் கேட்க முற்பட்ட சமூக செயல்பாட்டாளர் பியூஷ் மனுஷ் அங்கிருந்தவா்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. பியூஷ் மனுஷ் ஏன் அங்கு சென்றார்?

சேலத்திலிருந்து செயல்படும் சமூக செயல்பாட்டாளரான பியூஷ் மனுஷ் புதன்கிழமையன்று மாலையில் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியிருந்தார். அதில், "இன்று மாலை ஐந்து மணியளவில் பொருளாதாரம், காஷ்மீர் பிரச்சனை மற்றும் மேலும் பல பிரச்சனைகள் குறித்து கேட்பதற்காக சேலத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்குச் செல்லவிருக்கிறேன். FB live" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, மாலை ஐந்து மணியளவில் பியுஷ் மனுஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ்செய்தபடியே சேலத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்தார். அலுவலகத்தின் கீழே இருந்த காவலரிடம் மேலே, பா.ஜ.கவினர் இருக்கிறார்களா எனக் கேட்டுவிட்டு மாடிக்குச் சென்று அங்கிருந்த பா.ஜ.கவினரைச் சந்தித்துப் பேசினார்.

இந்தப் பேச்சு முழுவதும் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் லைவ் செய்யப்பட்டது. ஒருகட்டத்தில் இந்தப் பேச்சுவார்த்தை முற்றி, பியுஷ் மனுஷை அங்கிருப்பவர்கள் தாக்க ஆரம்பித்தனர். இதற்குள் ஊடகத்தினர் அங்கே வந்துவிட, இந்தக் காட்சிகள் நேரலையிலும் ஒளிபரப்பாகியது.
இதற்குப் பிறகு, காவல்துறையினர் பியூஷ் மனுஷை அங்கிருந்து அழைத்துச்சென்று நடந்த சம்பவங்கள் குறித்து எழுதிவாங்கினர். தற்போது பியுஷ் மனுஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

நடந்த சம்பவங்கள் குறித்து பியூஷ் மனுஷிடம் கேட்டபோது, "நான் மாலை 5 மணிக்கு அங்குவருவதாக ஃபேஸ்புக்கில் சொல்லிவிட்டு, கீழே இருந்த காவலரிடம் அனுமதி வாங்கித்தான் மேலே சென்றேன். கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தபோது அவர்கள் என்னைக் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தனர். நான் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. என பலரது அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறேன். கேள்வி கேட்டிருக்கிறேன். வேறு எங்குமே இப்படி நடந்ததில்லை. தவிர, வீட்டில் உள்ள பெண்கள் குறித்து மிக மோசமாக அவர்கள் பேசினர்," என்று தெரிவித்தார்.

ஆனால், மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து சேலத்தில்உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் கேள்வி கேட்பது சரியா எனக் கேட்டபோது, "ஏன் கேட்கக்கூடாது. அதுவும் ஒரு பொது இடம்தான். அவர்களது கட்சித்தானே ஆளும்கட்சியாக இருந்து வருகிறது. காஷ்மீர் விவகாரம், புல்வாமா தாக்குதல்களின்போது இவர்கள்தானே பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்? அதனைக் கொண்டாடுபவர்கள், இதற்கும் பதில் சொல்ல வேண்டியதுதானே?" என்கிறார் பியூஷ் மனுஷ்.

இந்த சம்பவம் தொடர்பாக, பா.ஜ.கவின் சேலம் மாவட்டத் தலைவர் கோபிநாத்திடம் கேட்டபோது, "அவர் ஃபேஸ்புக்கில் லைவ் போட்டுவிட்டு, ஒரு கட்சி அலுவலகத்திற்குள் நுழைகிறார். இது சரியா? மற்ற கட்சி அலுவலகங்களில் இதுமாதிரி செய்ய முடியுமா? உள்ளே நுழைந்த அவர், பிரதமர், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராணுவ வீரர்கள் பற்றியெல்லாம் அவதூறாகப் பேசினார். அதனால்தான் இந்த சம்பவம் நடந்தது" என்று தெரிவித்தார்.

பியூஷ் மனுஷின் லைவ் வீடியோவில் அவர் ராணுவ வீரர்களையெல்லாம் அவதூறாகப் பேசியது இல்லையே, அதற்கு முன்பே அவர் தாக்கப்படுகிறாரே எனக் கேட்டபோது, "அந்த வீடியோவில் இருப்பது கொஞ்சம்தான். அதற்குப் பிறகுதான் அவர் அம்மாதிரியெல்லாம் பேசினார்" என்கிறார் கோபிநாத்.

பா.ஜ.க. அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து, கலகம் செய்ததாக பா.ஜ.கவின் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பா.ஜ.கவினர் தன்னைத் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக பியூஷ் மனுஷும் புகார் அளித்துள்ளார். இந்த இரு புகார்களும் தற்போது பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பியூஷ் மனுஷ் தாக்கப்பட்டது குறித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "கவுரி லங்கேஷ் போன்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம் தமிழக கருத்துரிமையாளர்களுக்கும் நேரக்கூடும் என்பதற்கான அபாய எச்சரிக்கையாகவே பியூஷ் மனுஷ் மீதான தாக்குதலைப் பார்க்க வேண்டியுள்ளது" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பியூஷ் மனுஷை கடுமையாகக் கண்டித்துள்ளார். "அடுத்த கட்சியின் அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்புமீறி கலாட்டா, காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா?இதுதான் சமூக செயல்பாடா? சமூக அமைதி சீர்குலைப்பா?சமூகஆர்வலர் போர்வையில் வீண் விளம்பரம் தேட வரும் அர்பன் நக்சலைட்களை அடையாளம் காட்டுவோம்" என்று கூறியிருக்கிறார். பியூஷ் மனுஷுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்த தி.மு.கவையும் அவர் கண்டித்திருந்தார்.

இந்த நிகழ்வைக் கண்டித்திருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், இந்தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றாலும் "ஜனநாயக முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்க எத்தனையோ வழிகள் இருக்கும் போது ஓர் அரசியல் கட்சியின் அலுவலகத்திற்குள் நுழைந்து இப்படி நடந்து கொள்வது ஏற்புடையதல்ல. இந்நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.