1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 டிசம்பர் 2021 (13:31 IST)

சிறைக்குச் செல்வதைத் தவிர்க்க கொலை செய்த நபர் - தானே இறந்ததாக அரங்கேற்றும் முயற்சியில் தோல்வி

மீண்டும் சிறைக்குச் செல்வதைத் தவிர்க்க தன் மரணத்தை போலியாக அரங்கேற்ற முயன்ற நபரின் முயற்சியைத் தடுத்துள்ளதாக இந்திய காவல் துறை கூறியுள்ளது.

36 வயதான சுதேஷ் குமார் என்பவர் ஒரு நபரை கொலை செய்துவிட்டு, அவரது மனைவியின் உதவியோடு, அது தன்னுடைய உடல் என்று நிரூபிக்க முயற்சித்ததாக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகள் கூறினர்.

சுதேஷ் குமார் ஓர் உடலை எடுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு, தன் 13 வயது மகளை கொலை செய்த குற்றத்துக்காக சுதேஷ் குமார் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணத்தினால் அவர் பரோலில் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் காலத்தில், சிறையில் இருப்பவர்கள் எண்ணிக்கை மற்றும் மக்கள் நெருக்கம் காரணமாக கொரோனா வைரஸ் அதிகம் பரவாமல் இருக்க வேண்டும் என்கிற காரணத்தினால், சில மாநிலங்களில் சிறைக்கைதிகள் பரோலில் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

சிறை அதிகாரிகள் சுதேஷ் குமாரின் பரோலை முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக அவர் நம்பியதாகக் கூறப்படுகிறது. எனவே மீண்டும் சிறை செல்லாமல் இருக்க ஒரு புதிய திட்டத்தைத் தீட்டினார்.

கடந்த நவம்பர் 19ஆம் தேதி டோமென் ரவிதாஸ் என்பவரை கொன்றதாக சுதேஷ் குமாரே ஒப்புக் கொண்டதாக காவல்துறை கூறியுள்ளது. ரவிதாஸ், சுதேஷ் குமாரைப் போன்ற உடல் அமைப்புகளைக் கொண்ட ஒரு கட்டடத் தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.

ஓர் ஒப்பந்ததாரர் மூலம், ரவிதாஸை தன் வீட்டில் பழுதுப் பணிகளை மேற்கொள்ள பணிக்கு அமர்த்தியுள்ளார். அடுத்த நாள் ரவிதாஸின் உடல் ஒரு காலி மனை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவரது ஆடையில் சுதேஷ் குமாரின் அடையாள அட்டை இருந்தது.

பிறகு எரிந்த நிலையில் இருந்த உடலை, தனது கணவர் என்று அடையாளப்படுத்தினார் சுதேஷ் குமாரின் மனைவி அனுபமா. அவரது வீடு டெல்லியில் உள்ளது.

சுதேஷ் குமார் தான் இறந்துவிட்டதாக நிறுவிய பின், தன் மனைவியைப் பார்க்கச் சென்றுள்ளதாக காவல்துறைக்கு ஓரு துப்பு கிடைத்தது. அதை வைத்துக் கொண்டு அவர்களது வீட்டில் சோதனை மேற்கொண்ட போது சுதேஷ் குமார் பிடிபட்டார், மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் ரவிதாசைக் கொன்றதை ஒப்புக் கொண்டார். சுதேஷ் குமாருக்கு இக்குற்றத்தில் உதவிய காரணத்துக்காக, அவரது மனைவி அனுபமாவும் கைது செய்யப்பட்டார்.

"இந்த இருவரும் ஒரு பெரிய திட்டத்தை தீட்டினர், ஆனால் காவல்துறையினர் இந்த சிக்கலான கொலை வழக்கை திறமையாக கையாண்டனர்" என இராஜ் ரஜா என்கிற காவல்துறை கண்காணிப்பாளர் ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.