புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 1 மே 2019 (20:20 IST)

தேஜ் பகதூர் யாதவ்: மோதிக்கு எதிராகப் போட்டியிடுவதாக தெரிவித்த முன்னாள் ராணுவ வீரரின் வேட்பு மனு நிராகரிப்பு

மோதிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிடுவதற்காக முன்னாள் ராணுவ வீரர் தேஜ்பகதூர் யாதவ் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்துள்ளதாகத் தெரிகிறது.
பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டி 2017-ல் மூன்று வீடியோக்களை பகிர்ந்ததால் ராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் தேஜ்பகதூர்.
 
இந்நிலையில் அவர் மோதிக்கு எதிராக உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். சமாஜ்வாதி கட்சி அவரை தமது அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவித்திருந்தது.
 
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனோஜ்ராஜ், "தேஜ் பகதூரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது தொடர்பாக வாய்மொழியாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். எழுத்துபூர்வமான உத்தரவுக்காக காத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
 
என்ன நடந்தது?
பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஐந்து வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
 
மோதிக்கு எதிராக போட்டியிடுவதாக அறிவித்த தேஜ்பகதூர் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டணி வேட்பாளர் ஆவார்.
 
மோதியின் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் பிராந்திய கட்சிகளான சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜும் கூட்டணி அமைத்துள்ளன.
 
இதற்கு முன்பு தேர்தலில் போட்டியிடாத தேஜ்பகதூரை மோதிக்கு எதிராக களம் இறக்கியது ஆச்சரியமிக்க ஒரு விஷயமாக பார்க்கப்பட்டது. அதுவும் கடந்த 2014ஆம் ஆண்டு 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் மோதி.
 
தேஜ்பகதூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பலரின் கவனத்தை ஈர்த்தது. அவர், "ராணுவ வீரர்களுக்கு காய்ந்து போன ரோட்டி மற்றும் மோசமான உணவே வழங்கப்படுகிறது. பொதுவாக இதை உண்பதை ராணுவ வீரர்கள் தவிர்கின்றனர்" என்று கூறி அவர் வெளியிட்ட வீடியோ பலர் மத்தியில் இரக்கத்தையும் சீற்றத்தையும் உண்டாக்கியது.
 
மோதி ராணுவ வீரர்களின் தியாகம் குறித்து தேர்தல் பிரசாரங்களில் தொடர்ந்து பேசி வந்தார். காஷ்மீரில் நடைபெற்ற தற்கொலைகுண்டு தாக்குதலில் இந்திய படைகள் கொல்லப்பட்டதும் தேர்தல் பிரசாரங்களில், நாட்டின் பாதுகாப்பு ஒரு முக்கிய இடம் பிடித்தது.
 
பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் தீவிரவாத அமைப்பின் மீது இந்தியா குற்றம்சாட்டியது.
 
சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு தொடர்ந்து பிரசாரம் செய்யப்போவதாக பகதூர் தெரிவித்துள்ளார்.