செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 4 மார்ச் 2019 (20:43 IST)

சூத் அஸ்கர்: ஜெய்ஷ்-இ-முகம்மது நிறுவனர் இறந்துவிட்டாரா?

மௌலானா மசூத் அஸ்கர்
 
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டதில் இருந்து ஒவ்வொரு நாளும் விதவிதமான புரளிகள் தோன்றிப் பரவுகின்றன.
நேற்று ஞாயிற்றுக்கிழமையும் ஊடக பரபரப்புகளால் நிறைந்த ஒரு நாளானது.
 
ஜெய்ஷ்-இ-முகம்மது நிறுவனர் மசூத் அஸ்கர் இந்துவிட்டதாக வெளியான "செய்தியை" இந்தியாவின் டிவிட்டர் பயனர்கள் பலரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பகிரத் தொடங்கினர்.
 
சிறிது நேரத்தில் இந்த "செய்தியை"மைய நீரோட்ட ஊடகங்களும் கையில் எடுத்தன. இந்த செய்தியின் நம்பகத்தன்மை தெரியாத ஊடகங்கள் கூட, உறுதி செய்யப்படாத தகவல்கள் என்று கூறி இத்தகவலை ஒளிபரப்பத் தொடங்கின.
 
"டைம்ஸ் நவ்" தமது டிவிட்டர் கணக்கான @TimesNow-ல் உடனடிச் செய்திகள் (பிரேக்கிங் நியூஸ்) என்ற ஹேஷ் டேக் இட்டு மௌலானா மசூத் அஸ்கர் இறந்துவிட்டதாக செய்திகளை வெளியிட்டது.
 
ஆனால் இந்த செய்தி இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
 
" #பிரேக்கிங்: மௌலானா மசூத் அஸ்கர் இறந்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. அவர் மார்ச் 2-ம் தேதி இறந்துள்ளார். இஸ்லாமாபாத் ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்த பிறகு முறைப்படி அவரது மரணம் அறிவிக்கப்படும்- என்று உயர்மட்ட உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன."
 
ஷா மெஹ்மூத் குரேஷி
 
இந்த ஊகத்துக்கான அடிப்படை என்னவென்று தெரியவில்லை. ஆனால், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முஹம்மது குரேஷி சி.என்.என். தொலைக்காட்சிக்கு அண்மையில் அளித்த நேர்க்காணலில் இருந்தே இதெல்லாம் தொடங்குகிறது என்று தெரிகிறது.
 
சி.என்.என். தொலைக்காட்சியின் கிறிஸ்டியன் அமன்போர் எடுத்த நேர்க்காணலில் மசூத் அஸ்கர் பாகிஸ்தானில் இருப்பதாகவும், அவரது உடல் நலன் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அவரால் நடக்க முடியாது, தமது வீட்டை விட்டும் வெளியேற முடியாது என்றும் குரேஷி கூறியிருந்தார்.
 
ஆனால், கடந்த வாரம் நடந்த இந்திய வான் தாக்குதலில் மசூத் அஸ்கர் கொல்லப்பட்டுவிட்டார் என்றும், அவர் நீண்டகாலமாக நோயுற்று இருந்து இறந்துவிட்டதாக கூறி இதனை பாகிஸ்தான் மறைக்க முயல்வதாகவும், சில இந்திய டிவிட்டர் கணக்குகள் பதிவிட்டன.
 
ஞாயிற்றுக்கிழமை மாலை வாக்கில் #MasoodAzharDEAD என்பதுதான் முதன்மையான டிவிட்டர் டிரெண்டாக இருந்தது.
 
இந்த செய்தி உடனடியாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து மறுக்கப்பட்டது.
 
பாகிஸ்தான் ஊடகர்கள் கூறுவது என்ன?
 
மதம் மற்றும் தீவிரவாத அமைப்புகள் தொடர்பான செய்திகளை கடந்த 18 ஆண்டுகளாக பல செய்தி நிறுவனங்களுக்காக எழுதி வரும் பாகிஸ்தானி பத்திரிகையாளர் சபூக் சையது, மசூத் அஸ்கர் இறந்துவிட்டதாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை, ஆதாரமற்றவை என்று கூறினார்.
உருது மொழியில் வெளியாகும் தமது வலைப்பூ ஒன்றில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டிருந்தார்.
 
ஜெய்ஷ்-இ-முஹம்மது தலைவரை கடந்த காலத்தில் மூன்று முறை பேட்டி கண்டவர் இவர்.
 
ஆனால், 2016-ம் ஆண்டு பதான்கோட் தாக்குதல் நடந்த பிறகு அவர் ஊடகங்களுடன் தொடர்பில் இல்லை என்றும் அவர் கூறினார்.
 
பிபிசி - இந்தி மொழி சேவை சார்பில் அவரை தொடர்புகொண்டு கேட்டபோது, மசூத் அஸ்கர் நன்றாக இருப்பதாக ஜெய்ஷ்-இ-முஹம்மது வட்டாரங்கள் கூறுவதாக தெரிவித்தார்.
மசூத் அஸ்கருக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள்: 2019 பிப்ரவரி 14 அன்று இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் புல்வாமாவில் தற்கொலை குண்டு தாக்கி சி.ஆர்.பி.எஃப். படையினர் 40 பேர் கொல்லப்பட்டதற்கு மறு நாள் மும்பையில் மசூத் அஸ்கரின் முகத்தில் கோடிட்ட படங்களை ஏந்தி பாகிஸ்தானுக்கு எதிராகப் போராடிய முஸ்லிம்கள்.
 
"2010-ம் ஆண்டில் இருந்து மசூத் அஸ்கர் கிட்னி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும், கடந்த ஐந்து ஆண்டுகளாக இதற்காக அவர் சிகிச்சை பெற்றுவருகிறார் என்பதும் உண்மை. ஆனால், அவரது உடல் நிலை மோசமாக இல்லை," என்று சபூக் விளக்கினார்.
 
ஜெய்ஷ்-இ-முஹம்மது தலைமையுடன் தொடர்பில் இருப்பதாக கூறிக்கொள்ளும் மற்றொரு பத்திரிகையாளரான அஜாஸ் சையத் என்பவரும் மசூத் அஸ்கர் இறந்துவிட்டதாக வெளியான செய்தி தவறு என்று டிவீட் செய்துள்ளார்.
 
"மசூத்அஸ்கர் உயிரோடு இருக்கிறார். அவர் இறந்ததாக வெளியான செய்தி தவறானது. மீண்டும் ஊடகங்கள் போலிச் செய்தகளுக்கு பலியாகியுள்ளன" என்று கூறும் அவரது பதிவு இதோ:
 
பிபிசி இந்தி சேவையிடம் பேசிய அஜாஸ், மசூத் அஸ்கர் தொடர்புடைய ஒருவரிடமும், ஜெய்ஷ்-இ-முகம்மதுவுடன் தொடர்புடைய வேறு சிலரிடமும் தாம் பேசியதாகவும், மசூத் அஸ்கர் தொடர்புடைய புதிய செய்தி ஏதும் இல்லை என்று அவர்கள் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
 
மசூத் அஸ்கரின் நோய் பற்றிய செய்தி மிகைப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது என்றும், அவருக்கு உடல் நலமில்லை என்றபோதும் அவர் மரணப் படுக்கையில் இல்லை என்று தாம் நம்புவதாகவும் அஜாஸ் கூறினார்.
 
அமைச்சர் மறுப்பு
 
உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியும் மசூத் அஸ்கர் மரணம் பற்றிய செய்தியை மறுத்தார்.
 
மசூத் இறந்துவிட்டார் என்பதாக இந்திய ஊடகங்களில் வெளியிடப்படும் ஊகங்களைப் பற்றி கேட்டபோது, தமக்கு அப்படி எந்த செய்தியும் வரவில்லை என்று அவர் கூறினார்.
புரளி பரவும் வேகம்
 
இஸ்லாமாபாத்தில் உள்ள 'பாக் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ் ஸ்டடீஸ்' என்ற நிறுவனத்தை சேர்ந்த பாதுகாப்புத்துறை ஆய்வாளர் அமீர் ராணா-வுக்கு தீவிரவாதக் குழுக்கள் பற்றிய ஆழமான பார்வை உள்ளது. மசூத் மரணம் குறித்து இவரும் ஐயங்களை எழுப்பியுள்ளார்.
 
"மசூத் அஸ்கர் இறந்துவிட்டார் என்று கூறும் செய்திகள் உண்மை என்று சொல்வதற்கான ஒரு ஆதாரத்தையும் நான் பார்க்கவில்லை" என்று ராணா கூறியுள்ளார்.
 
"பொய்ப் பிரசாரங்கள் குறித்து மக்கள் விழிப்போடு இருக்கவேண்டும். சண்டைகள் நிகழும் நேரத்தில் யாரும் நம்ப முடியாத அளவுக்கு வேகமாக புரளிகள் பரவும்," என்றும் அவர் கூறியுள்ளார்.