புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 11 ஜனவரி 2019 (12:12 IST)

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் விவாகரத்து

அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது மனைவி மெக்கென்சி ஆகியோர் 25 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற உள்ளனர்.
புதன்கிழமையன்று ட்விட்டரில் இதனை அவர்கள் கூட்டாக அறிவித்தனர். "நீண்ட கால காதல் வாழ்க்கைக்குப் பிறகு, சோதனை முறையில் பிரிந்து வாழ்ந்த பிறகு, நாங்கள் மணவிலக்கு பெற்று நண்பர்களாக இருக்க முடிவு செய்துள்ளோம்" என்று அதில் தெரிவித்துள்ளனர்.
 
25 ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் தொடங்கப்பட்டு இன்று பெரும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
 
ப்ளூம்பர்க் கோடீஸ்வரர் பட்டியலில் 54 வயதாகும் அமேசான் நிறுவனரான பெசோஸ், உலகின் பெரும் பணக்காரர் ஆவார். 137 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டிருக்கும் பெசோஸ், பில்கேட்ஸை முந்தியுள்ளார். 48 வயதாகும் மெக்கென்சி ஒரு நாவலாசிரியர் ஆவார்.
 
"நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தது மிகவும் அதிஷ்டம். திருமணமாகி சேர்ந்து வாழ்ந்த இத்தனை ஆண்டுகளுக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்," என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
"25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிவோம் என்று தெரிந்திருந்தாலும், இவை அனைத்தையும் நாங்கள் செய்திருப்போம். திருமணமான தம்பதிகளாக நல்ல வாழ்க்கை வாழ்ந்துள்ளோம். எதிர்காலத்தில் பெற்றோர்களாக, நண்பர்களாக, பணித் திட்டங்களில் சேர்ந்து கூட்டாளிகளாகவும் சேர்ந்து செயல்படுவோம்."
 
"தனித்தனி வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும், நாங்கள் குடும்பமாக இருப்போம்."
 
கடந்த ஆண்டு இந்த ஜோடி, Day one found என்ற திட்டத்தை ஒன்றாகத் தொடங்கினர். வீடு இல்லாத குடும்பங்கள் மற்றும் வசதியில்லாத சமூகங்களில் பள்ளிகள் கட்டுவதே இதன் நோக்கம்.
 
ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி இருவருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். 3 ஆண் குழந்தைகள் மற்றும் தத்தெடுக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை.
 
பெசோஸ், ஃபாக்ஸ் தொலைக்காட்சியின் முன்னாள் தொகுப்பாளரான லாரன் சன்ஷெஸை காதலிப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
2013ஆம் ஆண்டு மெக்கென்சி வோக் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், நியூயார்க்கில் தன்னை நேர்முகத் தேர்வு செய்த போதுதான் முதன்முதலில் ஜெஃபை சந்தித்ததாக கூறியிருந்தார். 1993ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் ஓராண்டு கழித்து ஜெஃப், அமேசான் தளத்தை தொடங்கினார்.